எத்தகைய விமர்சனங்கள் வந்தாலும் எனது கொள்கையில் மாற்றம் வராது : ஜனாதிபதி
எவ்வாறான விமர்சனங்கள், தூற்றுதல்கள் வந்தாலும் தேசிய பாதுகாப்பு மற்றும் இராணுவத்தினரின் கெளரவத்தை பாதுகாக்கும் தனது கொள்கை துளியளவு கூட மாறாது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
கொழும்பு பண்டாரநாயக்கா ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்று நடைபெற்ற வீரப் பதக்கம் வழங்கும் நிகழ்வில் உரையாற்றும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
எவ்வாறான விமர்சனங்கள், தூற்றுதல்கள் வந்தாலும்; நாட்டின் தேசிய பாதுகாப்பு தொடர்பில் தான் பின்பற்றும் கொள்கை துளியளவு கூட மாற்றப்படாதெனவும், முப்படையினருக்கு தேவையான வளங்களை குறையின்றி வழங்கி அவர்களைப் பலப்படுத்துவதுவதுடன் போர்க்களதில் போரிட்ட வீரமிகு படையினரின் கௌரவத்தைப் பாதுகாப்பதற்காக எப்போதும் பாடுபடுவேன்.
தாய்நாட்டின் முன்நோக்கிய பயணம் தொடர்பான புரிந்துணர்வற்ற, நாட்டின் தேசிய பாதுகாப்பை குறைத்து மதிப்பிட்டுவோரின் சந்தர்ப்பவாத செயற்பாடுகளால் நாட்டின் ஜனாதிபதி என்ற வகையிலும் பாதுகாப்பு அமைச்சரென்ற வகையிலும் தன்னிடம் பின்னடைவை ஏற்படுத்த முடியாது.
சில அரச சார்பற்ற நிறுவனங்களின் தேவைக்கேற்றவாறு நாட்டின் தேசிய பாதுகாப்பை இயக்குவதற்கு தயாரில்லை போரில் தோற்கடிக்கப்பட்ட போதிலும் கருத்தியல் ரீதியாக தோற்கடிக்கப்படாத, நாட்டுக்கு வெளியிலிருந்து ஒருபோதும் அடைய முடியாதவற்றை கனவு கண்டுகொண்டிருப்பவர்களை சர்வதேச ரீதியில் தோற்கடிப்பதற்கு மிகவும் நட்புறவுடனான சர்வதேச கொள்கையுடன் செயற்படுவதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். -(3)




