செய்திகள்

எனது உயிருக்கு உலைவைக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன : முதலமைச்சர் விக்னேஸ்வரன் குற்றச்சாட்டு

தனது உயிருக்கு உலைவைக்கும் செயற்பாடுகள் மேற்கொள்ளப்படுவதாக செய்திகள் கிடைத்திருப்பதாக குற்றம்சாட்டியுள்ள வட மாகாண முதலமைச்சர் நீதியரசர் சி.வி. விக்னேஸ்வரன், அந்த பழியை போடுவதற்கும் நடவடிக்கைகள் தெற்கில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருவதாக தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் சரஸ்வதி மண்டபம் ராஜா கிறீம் ஹவுசில் இன்று சனிக்கிழமை காலை நடைபெற்ற யாழ்பல்கலைக்கழகத்தின் முன்னாள் வரலாற்றுத்துறை சிரேஷ்ட விரிவுரையாளரும் சுயாதீன ஆய்வாளருமான மு.திருநாவுக்கரசு எழுதிய ‘இலங்கை அரசியல் யாப்பு, டொனமூர் யாப்பு முதல் உத்தேச சிறிசேன யாப்பு வரை (1931 – 2016)’ என்ற நூல் வெளியீட்டு விழாவுக்கு அவர் அனுப்பிய வாழ்த்துச் செய்தியிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

“எமது உரிமைக்காக நாம் குரல் கொடுக்கின்ற போது இனவாதம் பேசுகின்றோம், சிங்கள மக்களைச் சினமடையச் செய்கின்றோம், இந்த நாட்டில் மீண்டும் ஒரு முறை இனக்கலவரங்களை உண்டாக்குவதற்கு முயற்சிக்கின்றோம் என்று கூறுகின்றார்கள். தமிழ் மக்களை அடக்கியாள முயற்சித்துஅவர்கள் அது சார்பாக நடவடிக்கைகள் எடுப்பதை நாம் கண்டும் காணாதது மாதிரி இருக்க வேண்டும் என்று இவர்கள் கருதுகின்றார்களா? உதாரணத்திற்கு சட்டவலுவற்றதன்மையில் வடமாகாணத்தில் புத்தவிகாரைகள் கட்டப்பட்டு வருகின்றன என்று தான் நாம் அண்மையில் கூறினோம். அதனைத் திரித்துவடமாகாணத்தில் புத்தவிகாரைகள் கட்டக்கூடாது; சிங்களமக்கள் குடியிருக்கக் கூடாது; சிங்களமக்கள் வடமாகாணத்தில் இருந்து வெளியேறவேண்டும் என்றெல்லாந்திரித்துக் கூறி என் மீதான பலத்த ஒரு வெறுப்பியக்கத்தை ஆரம்பித்துள்ளார்கள். ஆகவேநாம் எமது பிரச்சினைகளைக் கூறக் கூடாது. அவர்கள் தருவதை ஏற்கவேண்டும்; என்ற ஒரு எண்ணப்பாடே இன்று பெரும்பான்மை மக்கள் பலரிடம் இருந்து வருகின்றது. இதற்குள் அரசியலும் சேர்ந்து எனது உயிருக்கும் உலைவைக்க நடவடிக்கைகள் எடுத்திருப்பதாகச் செய்திகள் வந்தவண்ணம் இருக்கின்றன. அதுமட்டுமல்ல. அவற்றைச் செய்தவர்கள் விடுதலைப் புலிகளே என்று கதையைக் கட்டுவதற்கும் தெற்கில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகின்றன.” என்று விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.