செய்திகள்

என்னை துரோகி என சுட்டுக் கொல்லப் போகிறீர்களா…? மக்களின் கேள்விகளால் தடுமாறிய சுமந்திரன் எம்.பி (வீடியோ)

தற்போதைய அரசியல் நிலமை தொடர்பில் மக்களுக்கு தெளிவுபடுத்தும் முகமாக வவுனியா தமிழரசுக் கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலில் மக்கள் கேட்ட கேள்விகளுக்கு பதில் அளிக்க முடியாது தமிழரசுக் கட்சி தலைவர் மாவை சேனாதிராஜா, பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் தடுமாறிய சம்பவம் இடம்பெற்றுள்ளது.

நேற்று நடைபெற்ற இச்சந்திப்பின் போது கேள்விகளுக்கு விடையளிக்க முடியாத சுமந்திரன் எம்.பி என்னை துரோகி என சுட்டுக் கொல்லப் போகிறீர்களா என ஆவேசமாக பேசியுள்ளார்.

சமகால நிலமைகள் தொடர்பில் தமிழரசுக்கட்சி தலைவர் மாவை சேனாதிராசா மற்றும் சுமந்திரன் அவர்களும் கலந்துகொண்டு தற்போதைய அரசியல் நிலைவரம் தொடர்பாக தெளிவுபடுத்த முற்பட்டபோதே கடுமையான வாக்குவாதம் மக்களுக்கும் சுமந்திரனுக்குமிடையில் இடம்பெற்றது.

கேட்கப்பட்ட கேள்விகளுக்கு ‘முடியும் என்றால் பதிலளிப்போம். முடியாவிட்டால் பதில் அளிக்க மாட்டோம. அதில் நாம் என்ன சொல்லப்போகின்றோம் என நீங்கள் சொல்லமுடியாது என்றும் சொல்லக்கூடிய கேள்விக்கு பதில்சொல்வோம் என்றும் கூறினார். மக்கள் கேள்விகளை கேட்டபோது அதனை தடுப்பதற்காகவும் தமிழரசு கட்சி ஆதரவாளர்கள் சிலர் ஈடுபட்டிருந்ததை அவதானிக்க முடிந்தது.

அதில் கலந்துகொண்ட சுமந்திரன் சர்வதேச விசாரணையை பலர் கோருகின்றார்கள் அந்த சர்வதேச விசாரணை அதுவும் உலக தரத்தில் மிகவும் சிறந்த விசாரணை முடிவடைந்து விட்டது. அரசுக்கு ஆதரவளிப்பதாக கூறுகிறீர்கள் ஆதரவு அளித்து நாங்கள் இதுவரை என்ன தவறு செய்தோம்.

60வருடம் போராடி என்ன நீங்கள் செய்தீர்கள். எதனை சாதித்தீர்கள். அப்போது அரசாங்கம் கேட்டதை நாம் பெற வில்லை. ஆயுத பலம் இருந்ததால் இன்னும் பெறலாம் என கருதினோம். தற்போது அதை விட குறைவாக பெற தயாராக இருக்கின்றோம். இது தான் நிலமை. இரண்டு மாதம் பொறுக்குமாறே கேட்கிறோம். அதற்கு பிறகு என்ன செய்வது என்பதை இப்போ கூறமுடியாது. அவசரப்பட்டு என்னத்தை சாதிக்கப் போகிறீர்கள். நீலன் திருச்சசெல்வம் அமிர்தலிங்கத்தை துரோகியென சுட்டுக்கொன்றீர்கள் அதைப்போல என்னையும் துரோகியென சொல்லி சுட்டுகொன்றுவிட்டு சென்ன செய்யப்போகின்றீர்கள் ஒரு 2மாதம்தானே பொறுத்திருங்கள் முடியாவிட்டால் நாம் சொல்லுவோம் அடுத்து என்ன செய்யப்போகின்றோம் என்றும் மிக ஆவேசமாக பதிலளித்திருந்தார்.

எழுக தமிழ் போன்ற போராட்டங்கள் தேவையற்றது. நாங்கள் பேசித் தீர்வைப் பெற முயற்சிக்கும் போது போராட்டம் நடத்தி குழப்பக் கூடாது. எங்களுடைய மக்களின் அபிலாஷைகளை அடையக்கூடியதாக ஒரு அரசியலமைப்புச் சட்டம் உருவாவதற்கு ஒரு சதம் ஏனும் வாய்ப்பு இருக்கும் வரைக்கும் நாங்கள் இருப்போம்’ என அவர் தெரிவித்திருந்தார்.

இவருடைய கருத்துக்களுக்கு மக்கள் மத்தியில் அவ்வப் போது எதிர்ப்புக்கள் ஏற்பட்டதையும் அதனை தமிழரசுக் கட்சி உறுப்பினர்கள் சமரசம் செய்து வைத்ததையும் அவதானிக்க முடிந்தது.

N5