செய்திகள்

என் மகனும் சேர்ந்து போராடுவார்

பேரறிவாளன், பிறந்தது வேலூர். ஏ.ஜி.பேரறிவாளன் என்ற இவரது விக்கிபீடியா பக்கத்தில், இருப்பிடம் சிறை என்றிருக்கும். 26 ஆண்டுகளாகச் சிறையில் இருந்துவிட்டவருக்கு சிறையே இருப்பிடமாவது ஒன்றும் வியப்பளிக்கும் விஷயம் இல்லை. ‘முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலைவழக்கில் குண்டு தயாரிக்க பேட்டரி வாங்கித்தந்தார்’ என்று கைதுசெய்யப்பட்டவர். குற்றம் தொடர்பாக மரண தண்டனை விதிக்கப்பட்டுப் பின்னர் 2014-ல் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பின் அடிப்படையில், அது ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டது. தற்போது புழல் மத்திய சிறையில் சாந்தன் மற்றும் முருகனுடன் இருக்கிறார். ஆனால், சாவின் விளிம்புவரை சட்டத்தால் அழைத்துச் செல்லப்பட்டவரை, ஆயுளுக்காகப் போராடி அதே சட்டத்தின் பல கதவுகளைத் தட்டி, இன்று, ‘‘சிறையில் இருந்தாலும் உயிருடன் இருக்கிறானே… என் பிள்ளை!’’ எனப் பெருமூச்சு விட்டுக்கொண்டிருக்கிறார் அவருடைய தாயார் அற்புதம்மாள். அழித்தல் எளிது… அழிவிலிருந்து அதனை ஆக்கிக்கொண்டு வருவது ஃபீனிக்ஸ் பறவை ஒன்றால் மட்டுமே முடியும். அத்தகைய செயல்தான் அற்புதம்மாளின் போராட்டக் காலம்.

கொலை வழக்குத் தொடர்பாகத் தண்டனை விதிக்கப்பட்ட 6 பேரையும் விடுதலை செய்ய ஜெயலலிதா தலைமையிலான தமிழகத்தின் மாநில அரசுத் தீர்மானம் இயற்றிவிட்டாலும், மத்தியில் ஒப்புதல் அளிக்கப்படாததால், ‘என்று விடுதலையாவான் என் மகன்’ என்கிற கேள்வியுடன்தான் தன் நாட்களை கழிக்கிறார் அவர். அப்படி ஒரு நாள்தான் இன்றும் அவருக்கு. ஆனால், பேரறிவாளன் என்ற ஒருவரையும் அவரது தாய் அற்புதத்தை அறிந்திராத சர்வதேச அரங்கும், இந்த நாளை ‘உலக மரண தண்டனை எதிர்ப்புத் தினமாக’ அனுசரிக்கிறது.

மரண தண்டனை குற்றத்துக்கான தீர்வு இல்லை!

‘‘அம்மா! இன்று மரண தண்டனை எதிர்ப்பு நாள்’’ என்றதும் சிரித்தபடியே பேசியவரின் பகிர்விலிருந்து, “உலகம் இப்படி ஒரு நாளை அனுசரித்து என்ன உபயோகம்? இந்தியாவில் இன்றளவும் மரண தண்டனைக் கைதிகள் இருந்துகொண்டுதான் இருக்கிறார்கள். ஒரு தவறு நடக்காமல் இருக்க மரண தண்டனைதான் தீர்வென்றால் இன்றைக்கு எவ்வளவோ தவறுகள் குறைந்திருக்க வேண்டும். ஒன்றும் குறைந்தபாடில்லை. பெண்களை வன்கொடுமை செய்கிறவர்கள் செய்துகொண்டுதான் இருக்கிறார்கள். மரண தண்டனை, தவறுகளை உணரவைப்பது இல்லை. தொடர்ந்து 26 வருடங்களாக அதற்குத்தான் போராடிக்கொண்டு இருக்கிறேன். ஆனால், இந்த 26 வருடங்களில் சட்டம் அப்படியேதான் இருக்கிறது. 100 வருட காலம் வாழ்ந்த சட்டமேதை ஜஸ்டிஸ் கிருஷ்ணய்யர் அதைச் சரி செய்யத்தான் போராடினார். மரண தண்டனை எந்த நிலைமையில் அளிக்கப்பட வேண்டும், ஏன் அளிக்கப்பட வேண்டும் என்பதை எல்லாம் தன் வாழ்நாள் முழுக்க தனி ஒரு மனிதனாகத் தன் போராட்டங்களின் வழியாக வலியுறுத்தினார். தொடக்கத்தில் என் மகனுக்காக ஒரு சுயநலவாதியாகச் சுயதேவைக்காகப் போராட வந்த எனக்கு, கிருஷ்ணய்யர் போன்றவர்கள்தான் வழிகாட்டி. மரண தண்டனை எதிர்ப்பு மக்கள் இயக்கம் தொடங்கப்பட்டதும் அப்படித்தான்.

“பேரறிவாளனும் போராடுவார்!”

என் மகன், விடுதலையாகி வருவான். இந்தப் போராட்டம் என்னோடு நின்றுவிடாமல் அவனும் என்னுடன் இணைந்து போராடுவான். எனக்குப் பிறகும் போராடுவான். இவ்வளவு வருடம் அங்கு இருக்கும் அவன் ஒவ்வொரு முறை என்னைப் பார்க்கும்போது எல்லாம் சொல்வது, ‘சிறையில் இருப்பவர்கள் எல்லோருமே தவறு செய்தவர்கள் இல்லை’ என்பது மட்டும்தான். சட்டத் தராசு, இருக்கிறவர்களுக்கும் இல்லாதவர்களுக்கும் பாகுபாட்டோடுதான் இயங்குகிறது என்பது தெளிவாகத் தெரிகிறது. இது, அனைத்தும் சரி செய்யப்பட வேண்டும். அதுவரை எந்த நோக்கத்துக்காகச் சட்டம் இயற்றப்பட்டதோ, அது முழுமையாகவில்லை என்றுதான் பொருள்” என்றார்.

மரணம்தான் தவறுகளுக்கான தண்டனை என்றால், அது மனிதன் ஜனித்ததுமே நிகழ்ந்திருக்க வேண்டும்!