எமக்கு ஆதரவான சிங்களத் தலைமைகளுடன் இணைந்து செயற்படுவோம்: யாழில் சுமந்திரன்
எங்களுடைய கோரிக்கைகளுக்கு ஆதரவான பெரும்பான்மை தலைவர்களோடு நாம் சேர்ந்து இயங்குகின்றோம். இனியும் அவ்வாறே இயங்குவோம். அது எமது இலக்குகளை அடைவதற்கு மிகவும் முக்கியமானதாகும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் கட்சியின் ஊடகப் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
யாழில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் வெளிவிவகார அமைச்சருக்கும் சுமந்திரனுக்குமிடையிலான உறவு நிலை தொடர்பாக பல முரணான கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றமை தொடர்பாக கேள்வியெழுப்பிய போதே அவர் இதனை தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில் முக்கியமாகக் கூறியதாவது:
“தமிழ் தேசிய பிரச்சனை தொடர்பாக மங்கள சமரவீர கொண்டிருக்கும் நிலைப்பாட்டை நீண்ட காலமாக அவதானித்து வந்தவர்களுக்கு அவரது நிலை தெரியும். அவர் சிங்கள தலைவர்களில் மிக தெளிவாக ஆட்சி அதிகாரம் பகிரப்பட வேண்டும் என்பதில் எவ் விதமான சலனமுமில்லாத கொள்கையை உடையவர்.
சந்திரிகாவின் ஆட்சிக் காலத்தில் கூட அதிகார பகிர்வு தொடர்பாக திட்டங்களை கொண்டு வந்த போது அதற்கு சிங்கள மக்களிடைய ஆதரவை பெறுவதற்கான பணிகளில் ஈடுபட்டிருந்தார். முன்னைய பாராளுமன்றத்திலும் சரி தற்போதைய பாராளுமன்றத்திலும் சரி போர்குற்ற விடயங்கள் தொடர்பாக சாதாரண சிங்கள தலைவர்கள் கூட கூற தயங்குகின்ற விடயங்களையும் இவர் கூறியவர். இவ்வாறு ஒரே நிலைப்பாட்டில் பதில் கூறுபவர் இவர். அவ்வாறான ஒருவரோடு நாம் சேர்ந்து இயங்க வேண்டும்.
மேலும் பெரும்பான்மை தலைவர்களில் எங்களது கோரிக்கைகளுக்கு ஆதரவானவர்கள் அதிகளவில் இருக்க வேண்டும். அது மங்கள சமரவீரவாக இருந்தாலும் சரி அல்லது வேறு யாராவது தலைவர்களாக இருந்தாலும் சரி அவ்வாறு உள்ளவர்களோடு நாம் சேர்ந்தே இயங்க வேண்டும். அது எங்களுடைய இலக்கை அடைவதற்கு மிகவும் முக்கியமான செயற்பாடக அமையும்” என்றார்.
R-06




