செய்திகள்

எம்.பி.க்கள் சகிதம் தலதா மாளிகை செல்லும் ஜனாதிபதி: பலத்தை வெளிப்படுத்த முனைப்பு

ஐ.ம.சு.மு.வில் பலப்பரீட்சை தீவிரமடைந்திருக்கும் பின்னணியில் தமது பலத்தைக் காட்டும் வகையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா தலைமையிலான குழு ஒன்று இன்று ஞாயிற்றுக்கிழமை காலை தலதா மாளிகைக்குச் செல்லவிருப்பதாக தெரியவந்திருக்கின்றது. ஐ.ம.சு.மு.விலுள்ள மைத்திரிக்கு ஆதரவான அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் இதில் தவறாது கலந்துகொள்ள வேண்டும் என கட்சித் தலைமை கேட்டிருப்பதாகத் தெரிகின்றது.

இன்று காலை தலதா மாளிகை செல்லும் ஜனாதிபதியும் அவரது குழுவினரும், மத வழிபாடுகளில் ஈடுபட்ட பின்னர் மகா சங்கத்தினரையும் சந்தித்து பேச்சுக்களை நடத்தவிருக்கின்றார்கள். அரசியலமைப்புச் சீர்திருத்த முயற்சிகள், இனநெருக்கடிக்கான அரசியல் தீர்வு, பட்ஜெட் மற்றும் பல விடயங்களையிட்டும் இந்தச் சந்திப்பின் போது மகாசங்கத்தினருக்கும் ஜனாதிபதி விளக்குவார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

மகிந்த ராஜபக்‌ஷவுக்கு ஆதரவைத் தெரிவிக்கும் பொது எதிரணியினர் தனியான கட்சி ஒன்றை அமைத்து, ஐ.ம.சு.மு. விலுள்ளவர்களைத் தமது பக்கத்துக்கு இழுத்தெடுக்கும் முயற்சியில் இறங்கியிருக்கும் நிலையில், முன்னணிக்குள் பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. முன்னணியின் உள்ளுராட்சிமன்ற உறுப்பினர்கள் பலர் மகிந்தவுக்கு ஆதரவாக புதிய கட்சியில் இணைவதால், ஐ.ம.சு.மு. புதிய நெருக்கடி ஒன்றை எதிர்கொள்ளத் தொடங்கியுள்ளது.

இந்த நிலையில், தமக்கு கட்சிக்குள் இருக்கும் ஆதரவை வெளிப்படுத்தும் முகமாகவும், மகாசங்கத்தினரின் ஆதரவைத் தமது பக்கத்துக்கு எடுப்பதற்காகவுமே ஜனாதிபதி. அமைச்சர்கள், எம்.பிக்கள் சகிதம் இன்று தலாதா மாளிகைக்குச் செல்வதாக தன்னை அடையாளம் குறிப்பிட விரும்பாத ஐ.ம.சு.மு. பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் தினக்குரலுக்குத் தெரிவித்தார்.  அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் இன்றைய சந்திப்பில் கலந்துகொள்ளுமாறு அழைக்கப்பட்டிருக்கின்றார்கள்.:-06