செய்திகள்

எரிக் சூல்கயிம் வாறார்…வழிவிடுங்கோ..!

-இதயச்சந்திரன்

நோர்வேஜியன் மொழியில் சூல்கெயிம் என்றால் ‘சூரிய வீடு’ என்று பொருள்படுமாம்.
இந்தச் சூரியவீடு, நமக்கு என்ன சொல்ல வருகிறது என்று பார்ப்போம்.

1.தமிழர்கள் ஒற்றுமைப்பட வேண்டும்
2. போராட வேண்டும்.
3. இந்தியாவிடம் செல்ல வேண்டும்.
4. சமஷ்டித் தீர்விற்கு சர்வதேச நாடுகளின் ஆதரவைப் பெற வேண்டும்.

‘சூரியவீடு’ ஒரு முடிவோடுதான் வந்துள்ளது.

1.காந்திவழியில் அகிம்சைப் போராட்டத்தில் ஈடுபடுங்கள். ஆனால் விடுதலைப் புலிகள் முன்னெடுத்த ஆயுதப் போராட்டம் வேண்டாம். அதனை ச.தே.சமூகம் ஏற்றுக்கொள்ளாது.
2. கூட்டாட்சி, பாலா அண்ணரின் சுயநிர்ணய உரிமை பற்றியெல்லாம் நீங்கள் பேசலாம். ஆனால் சமஷ்டிதான் கேட்க வேண்டும்.
3. சீனா போன்ற நாடுகளிடமும் பேசலாம். ஆனால் இந்தியாதான் முதலிடம்.
நாம் என்ன செய்ய வேண்டும்…எவ்வகையான போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும்…எந்த நாட்டை முதன்மைப்படுத்த வேண்டும். என்ன அரசியல் கோட்பாட்டினை முன்வைக்க வேண்டும் என்பதை இவரே தீர்மானித்துவிட்டார்.

தன்னையொரு மேற்குலகின் குரலாக-மூளையாக சித்தரிக்க முற்படுகிறார் என்று எண்ணத்தோன்றுகிறது.

மனித உரிமைக் கூட்டத்தில் இவர் பேசிய சர்வதேச அரசியல் இவையே.

கடந்த 40 வருட கால போராட்ட வரலாற்றில் இரண்டு முக்கிய நகர்வுகளை ஒப்பிடலாம்.
1.’ திருமலைத் துறைமுகமும், புத்தளம் அமெரிக்கக்குரல் (voice of America)விரிவாக்கமும், உங்களுக்கு அச்சுறுத்தலாக அமையும்’ என்று, 1980 களின் ஆரம்பத்தில் ஈழப்போராட்ட இயக்கங்களுக்கு பயிற்சிகளும், ஆயுதங்களும், பின்தளம் அமைக்க அனுமதியும் கொடுத்த போது இந்தியா கூறியது.

2. 40 வருடங்கள் கழித்து எரிக் சூல்கெயிம் அதையே மாற்றிச் சொல்கிறார்.
‘இலங்கையில் சீனா காலூன்றிவிட்டது. ஆதலால் உங்கள் உரிமைகளை மீட்டெடுக்க இந்தியாவிடம் செல்லுங்கள்’ என்கிறார்.

முன்பு அமெரிக்காவை சுட்டிக்காட்டி இந்தியா நுழைந்தது. இன்று சீனாவை கைகாட்டி, இந்தியாவினூடாக  எரிக் பயணிக்கிறார்.

ஓநாய்கள் முன்னரும் அழுதன. இப்போதும் அழுகின்றன.

இலங்கையினால் மில்லேனியம் சவால் ஒப்பந்தம் (MCC)அண்மையில் இரத்துச் செய்யப்பட்ட விவகாரத்தையும் இங்கு கவனிக்க வேண்டும்.

அதுமட்டுமல்ல அம்பாந்தோட்டையில் சீனாவின் டயர் தொழிற்சாலை உருவாகிறது. கிழக்கு நோக்கிய சரிவு ஆரம்பமாகிவிட்டது என்பது இதிலிருந்து உறுதியாகிறது.

இந்தநிலையில் ஈழமக்களின் ஆதரவு, பிராந்திய நட்புநாடான இந்தியாவின் பக்கம் சாய்வதையே மேற்குலகம் விரும்புவதான தோற்றப்பாட்டினை சூல்கெயிம் ஏற்படுத்த முனைகிறார் என்கிற கேள்வி எழுகிறது.

இல்லையேல், இந்தியாவிற்கான மகிந்தரின் சிறப்புத் தூதுவர் மிலிந்த மொரகொடவின் செயற்பாட்டு ஆளுமைக்குள், எரிக் சூல்கெயிம் ஈர்க்கப்பட்டுள்ளாரா என்கிற சந்தேகத்தைத் தோற்றுவித்துள்ளது.

எது எவ்வாறு இருப்பினும், இனப்படுகொலைக்கு அனைத்துலக சுயாதீன விசாரணை கோரும் ஈழமக்களிற்கான ஆதரவினை எரிக் வழங்குவாரா என்பது சந்தேகமே.

மாறிவரும் உலக ஒழுங்கினை தமிழ் மக்கள் புரிந்து கொண்ட அளவிற்கு, இந்த ‘சூரியவீடு’ புரிந்துகொள்ளவில்லையோ என்று எண்ணத்தோன்றுகிறது.

ஆசியாவிலும், ஐரோப்பாவிலுமுள்ள பொருளாதாரக் கூட்டுக்களே எதிர்பாராத விதத்தில் மாற்றமடைகின்றன.

இந்த மாற்றங்கள், இனிவரும் ஆண்டுகளில் ஆசியப்பரப்பிலும் புதிய அணிகளை உருவாக்கும்.

எரிக் சூல்கெயின் இன்னமும் 2009 இலே தரித்து நிற்கிறார்.

10 வருடங்களாகவுள்ள சிந்தனை உறைநிலையை  இயங்குநிலைக்கு மாற்றினால், பல புதிய உலக ஒழுங்குகளையும், Great Depression களையும் அவர் உள்வாங்கி, தென்னாசியப் பிராந்தியத்தை  புரிந்து கொள்வார்.