செய்திகள்

எழுக எழுக எம் தமிழா!

வீழ்ந்தோம் விதைகளாக !
எழுந்து நிற்போம் விருட்சங்களாக !
வாழ்வோம் எம் தலைமுறைகளுக்கு வழிகாட்டிகளாக !
வாழவிடாது எம்மை அடக்கி ஒடுக்கின்….
மீண்டும் ஆவோம் அடுத்த வரலாற்றுப் பாகமாக !

மானம் எம் இன அடையாளம்! – அதை
மாற்றான் பறிப்பின் புயலாவோம் !
வீரம் எம் பர(ன்)ம் பரை வழிவந்த முதுசொம் !
வீணர்களோடு நாம் போர் செய்யோம்!

காலம் எமக்காய் காத்திருக்க
காகித அறிக்கைகளால் பலனேது ?
வேழம் அடக்கிய அரியாத்தையின்
பேரர்கள் எமக்கு சமுத்திரமும் முழங்காலளவு !

தாங்கிடப் பல்லக்கு வருமென்று
தூங்கிய காலங்கள் இனிப் போதும் !
தானாய் நடந்திடும் வலுவிருக்க
தாமதம் எதற்கு நீ எழும்ப?

எழுக எழுக எம் தமிழா! – நீ
எதிரியின் கைப்பிள்ளை இல்லை எனஎழடா !
அழுத கண்ணில் நீர்துடைத்தெழடா – உனக்கு
ஆறுதல் உன்இனப் பெருமைதான் புரிந்திடடா

எம் மாவீரரின் கனவுகள் நனவாக… -இவ்
அறப் போருக்கு நீயெழு துணிவாக !
வாளினைக் கேடயம் எதிர்கொள்ளும்!
தோளுக்கு சக தோள்கள்தான் வலுச் சேர்க்கும் !

                                                                      – கொற்றவை