செய்திகள்

எழுக தமிழாய் வந்த தமிழ் மக்களின் உரிமைக் கோரிக்கை இனவாதமா…?

நரேன்

1976 இல் வட்டுக் கோட்டை தீர்மானம் நிறைவேற்றப்பட்ட பின்னர் நடைபெற்ற 1977 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் நாடு இரு துருவங்களாக பிளவுபட்டிருந்தமை தெளிவாக தெரிந்தது. அதாவது தெற்கில் சிங்கள பௌத்த மேலாதிக்க இனவாதத்தை மையமாகக் கொண்டு வாக்குக் கேட்ட ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆறில் ஐந்து பெரும்பான்மை கிடைதத்து. அதேவேளை, தனி ஈழக் கோரிக்கையை முன்னிறுத்திய வட்டுக் கோட்டை தீர்மானத்திற்கு ஆணைகேட்ட தமிழர் விடுதலைக் கூட்டனிக்கு வடக்கு, கிழக்கு மக்களின் பரிபூரண ஆதரவு கிடைத்திருந்தது. இதன் மூலம் அன்றைய பாராளுமன்றத்தில் இலங்கையின் வரலாற்றிலேயே முதன் முறையாக எதிர் எதிர் துருவங்கள் ஆளுங்கட்சியாகவும், எதிர்கட்சியாகவும் செயற்பட்டிருந்தன. உத்தியோபூர்வ எதிர்கட்சியின் தலைவராக அமிர்தலிங்கம் தெரிவானார். அப்பொழுதும் அந்த பதவியை ஏற்பதா இல்லையா என்பதில் கடும் வாதப்பிரதிவாதங்கள் இடம்பெற்றிருந்தன. கோப்பாய் தொகுதியில் இருந்து தெரிவு செய்யப்பட்டிருந்த கதிரவேலுப்பிள்ளை இந்த பொன்னான வாய்ப்பை நாம் நழுவ விடக் கூடாது என்று கூறியிருந்தார். மறுபுறத்தில் அமிர்தலிங்கம் இளைஞர்கள் குறித்து அச்சம் அடைந்திருந்தார். அமிர்தலிங்கத்தை எதிர்கட்சித் தலைவர் பதவியை பெற ஊக்குவிக்கும் வகையில் சிவசிதம்பரம் அவர்கள் கொஞ்ச நாளைக்கு கத்துவார்கள். பின்னர் அமைதியாகிவிடுவார்கள் என்று கூறியிருந்தார். இறுதியில் எதிர்கட்சித் தலைவர் பதவியை ஏற்றுக் கொள்வது என்று கூட்டனியின் பாராளுமன்றக் குழு முடிவெடுத்தது. வட்டுக் கோட்டை தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஒரு வருடத்திற்குள்ளேயே இந்த நிலைப்பாடு ஏற்பட்டது. ஆனால் சொல்லப்பட்ட காரணம் இந்த பாராளுமன்றக் குழு தமிழீழத்திற்கான தேசிய சபையை உருவாக்கி அதற்கான அரசியல் வரைபை வரையும் என்றும் உறுதியளிக்கப்பட்டது. அதன் பின்னர் நடந்த வரலாற்றை வாசகர்கள் நன்கு அறிவர்.

ஆயுதப்போராட்டம் மௌனிக்கப்பட்ட 2009 ஆம் ஆண்டுக்கு பின்னர் தமிழ் மக்களினுடைய முழுமையான அரசியல் தலைமையானது ஆயுதப்போராட்டத்தில் ஈடுபட்ட பின்னர் ஜனநாய வழிக்கு திரும்பிய அமைப்புகளின் பூரண ஆதரவுடன் மீண்டும் பழமைவாத நிலப்பிரவுத்துவ தலைமையிடம் கையளிக்கப்பட்டது. அன்றைய கூட்டனியில் இருந்தவர்களே இன்றைய தமிழரசுக் கட்சியிலும் தலைமைப் பீடத்தில் இருக்கின்றனர்.

ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்டதாக காட்டிக் கொள்ளும் அந்த நிலப்பிரவுத்துவ தலைமை தனது கட்சிக்குள்ளும் ஜனநாயகத்திற்கு மதிப்பளிக்காமல் ஏனைய கட்சிகளின் உட்கட்சி விவகாரத்திலும் தலையிட்டு தான் ஜனாநாயக விரோத செய்பாயடுகளை மேற்கொண்டதுடன் அண்மையில் நடைபெற்ற எழுக தமிழ் பேரணிக்கும் ஆதரவு வழங்கவில்லை. மறுபறத்தில் தமிழ் மக்களின் போராட்டத்தில் அக்கறையுள்ளவராகவும் காட்டிக் கொள்வதற்கு தியாக தீபம் திலீபனின் 29 ஆவது நினைவு நாளில் ஜனநாயக போராளிகள் கட்சியுடன் இணைந்து அஞ்சலி செலுத்தியுள்ளனர். ஒரு தேசிய இனம் தனது உரிமைக்காக குரல் கொடுத்து தமது தாயகப் பிரதேசமான வடக்கு, கிழக்கில் இருந்து ஆயிரக்கணக்கில் அணிதிரண்டு தமது அபிலாசைகளை இலங்கை அரசிற்கும், சர்வதேச சமூகத்திற்கும் எடுத்து சொல்ல வந்தவேளையில் அதில் கலந்து கொள்ளாமல் புறக்கணித்து விட்டு 2015 ஆம் ஆண்டு தேர்தல் நேரத்தில் தம்மையும் கூட்டமைப்புக்குள் இணைந்துக் கொள்ளுமாறு வந்த போது ‘ உங்களில் இருந்து தான் கருணா வந்தார். உங்களில் இருந்து தான் பிள்ளையான் வந்தார். உங்களில் இருந்து தான் கே.பி வந்தார். நீங்களும் மஹிந்தாவின் ஆதரவுடன் இராணுவ புலனாய்வாளர்களினால் இயக்கப்படுகிறீர்கள்’ என்று மக்கள் பேசிக் கொள்கிறார்கள் எனக் கூறி கூட்டமைப்பின் தலைவரும் தமிழரசுக் கட்சியின் உயர் தலைவருமான இரா.சம்மந்தன் அவர்களை புறக்கணித்து அனுப்பி வைத்தார். ஆனால் புறக்கணிக்கப்பட்ட ஜனநாயக போராளிகள் கட்சியுடன் இணைந்து தமிழரசுக் கட்சித் தலைவர் மாவை சேனாதிராஜா, தமிழரசு கட்சியின் மூத்த உறுப்பினர் சீ.வீ.கே.சிவஞானம் ஆகியோர் தியாக தீபம் திலீபனுக்கு அஞ்சலி செலுத்தியுள்ளனர். இது இவர்களுக்கு இப்போது தேவையாக உள்ளது. தேர்தல் காலத்தில் புறக்கணித்துவிட்டு தற்போது அவர்களுடன் கூட்டு இணைந்துள்ளார்கள். இந்த இரட்டை நிலைப்பாடு மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதுவரை காலமும் கூட்டமைப்பின் தலைவர் உட்பட கூட்டமைப்பினால் முன்வைத்து குரல் கொடுத்து வரும் அதேவிடயத்தையே எழுக தமிழ் பேரணியிலும் முதலமைச்சர் விக்கினேஸ்வரன் முன்வைத்து பேசியிருக்கிறார். இந்த கருத்து இனவாதம் என்று தென்னிலங்கையால் பார்கப்படுமானால் கூட்டமைப்பின் தலைவருடைய கருத்தும் அவ்வாறே பார்க்கப்படவேண்டும். முதலமைச்சர் விக்கினேஸ்வரனின் உரையினால் தென்பகுதியில் ஏற்டபட்டுள்ள நிலமை குறித்து கூட்டமைப்பின் தலைமை கண்டுகொள்ளாமல் இருப்பதன் மூலம் தமிழ் மக்களுக்கு என்ன செய்தியை சொல்ல விரும்புகின்றனர்.

அரசியல் கைதிகளின் விடுதலை உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கையை வலியுறுத்தியே திலீபன் தனது உண்ணாவிரதத்தை மேற்கொண்டு தனது இன்னுயிரை மாய்ந்துக் கொண்டார். அகிம்சையை போதித்த நாட்டிற்கே அகிம்சையை போதித்திருந்தார். அவருடைய தியாகத்தை யாரும் கொச்சைப்படுத்த முடியாது. அதற்கு இடமளிக்கவும் முடியாது. பேரவையின் பேரணியில் கலந்து கொண்டால் தென்னிலங்கையில் இனவாதமாக பார்க்கப்படும் என்பது உண்மையானால்இ தமிழரசுக் கட்சியின் தலைவர் திலீபனின் தூபிக்கு மலர் அஞ்சலி செலுத்திய நிகழ்வை தென்னிலங்கையில் எவ்வாறு பார்க்கப்படும் என்ற கேள்வி எழுகிறது.

நாட்டில் உள்ள பிரச்சனையே ஒரு தேசிய இனம் இன்னொரு தேசிய இனத்தின் மீது தனது ஆளுமையைச் செலுத்தி அடிமைப்படுத்துவதற்கு எதிராக கிளர்தெழுந்த போராட்டமே என்பதில் தமிழரசுக் கட்சியினருக்கு இப்பொழுது தான் தெரியவில்லையா அல்லது எப்பொழுதுமே தெரியவில்லையா? அப்படியாயின் அப்போதைய வட்டுக் கோட்டை தீர்மானம் என்பது உணர்ச்சியின் வெளிப்பாடா என்றே எண்ணத் தோன்றுகின்றது.

வடக்கு, கிழக்கில் நடைபெறுகின்ற தமிழர் வாழ்வியலுக்கான எத்தகைய போராட்டமும் தென்னிலங்கையில் இனவாதமாகவே பார்க்கப்படும். இதற்கான முழுப் பொறுப்பையும் இதுவரைகாலமும் சிங்கள பௌத்த மேலாதிக்கத்தை முன்னிலைப்படுத்தி ஆட்சி கட்டிலில் ஏறிவருகின்ற சக்திகளே பொறுப்பேற்க வேண்டும். ஒடுக்கப்பட்ட தேசிய இனம் தனது தற்காப்புக்காகவும் தனது இருப்பிற்காகவும், வாழ்வுரிமைக்காகவும் குரல் கொடுப்பது இனவாதம் ஆகாது என்பதை இந்த நாட்டின் சகலதரப்பினரும் புரிந்து கொள்ள வேண்டும். ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளை அங்கீகரிப்பதற்கான வழிகளை தேடி உண்மையான ‘இலங்கை மக்கள் குடியரசு’ என்ற ஒரு நாட்டை கட்டியெழுப்புவதை விடுத்து ஒடுக்கப்பட்ட இனத்தின் குரலை மீண்டும் ஒடுக்க முயற்சிப்பது எந்தவகையிலும் ஜனநாயகத்திற்கும், நல்லிணத்திற்கும் உகந்ததல்ல.

தென்பகுதியின் ஆளும் வர்க்கம் தமிழ் தரப்பிற்கு ஒரு தலைவர் வந்து விடக்கூடாது என்பதிலும்இ மக்கள் ஒன்றாக அணிதிரண்டு விடக் கூடாது என்பதிலும் தெளிவாக இருக்கிறது. அதன்வெளிப்பாடு தான் பேரவையின் பேரணியும், முதலமைச்சர் விக்கினேஸ்வரரின் உரிமையையும் இனவாதமாக சித்தரிக்கப்படுவது. இதேபோல் தமிழ் மிதவாத நிலப்பிரவுத்துவ தரகு முதலாளித்துவ தலைமையும் தன்னை மீறி ஒரு தலைமை உருவாகிவிடக் கூடாது என்பதிலும்இ தாம் மட்டுமே தமிழ் மக்களது தலைமை என காட்டுவதிலும் முனைப்பு காட்டுகிறது. பேரவையின் பேரணிக்கு கூட்டமைப்பின் இரு பங்காளிக் கட்சிகள் நேரடியாக ஆதரவு வழங்கியிருந்தது. ஒரு பங்காளிக்கட்சி ஆதரவு தெரிவித்து அறிக்கை வெளியிட்டு இருந்தது. தமிழரசுக் கட்சியின் உபதலைவர்களின் ஒருவரும் ஆதரவு வழங்கியிருந்தார். இருந்தும் தமிழரசுக் கட்சியினர் இப் பேரணிக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆதரவு வழங்கவில்லை என்கின்றனர். அப்படியாயின் தமிழரசுக் கட்சி தம்மையே தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆக காட்ட முயல்வதையும், ஒரு சிலரே தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முடிவை தீர்மானிப்பதையும் வெளிப்படுத்துகின்றது. தம்மை மீறிய மக்கள் பலத்துடன் சேர்ந்த தலைமை உருவாகுவதையும் அவர்கள் விரும்பவில்லை என்பதும் தெரிகின்றது.

1977 ஆம் ஆண்டு தேர்தலில் தமிழீழ அரசாங்கம் உருவாகுவதற்காகவே 62 வீதமான தமிழ் மக்கள் தமது ஆதரவை வழங்கியிருந்தனர். ஆனால் இன்று ஐக்கிய இலங்கைக்குள் வடக்குஇ கிழக்கு இணைந்த தமிழர் தாயகத்தில் ஒரு சுயாட்சி அடிப்படையிலான சமஸ்டி தீர்வை வலியுறுத்தி தமிழ் மக்கள் தமது ஆணையை தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு வழங்கியிருந்தனர். ஆகவே தமிழ் மக்கள் நாட்டை பிரிக்க விரும்பவில்லை என்பதையும், ஒன்றுபட்டு சகோதரத்துவத்துடன் கைகோர்த்து நடக்க விரும்புவதையும் புரிந்து கொண்டு இந்த நாட்டின் சகல தரப்பினரும் தமிழ் இனத்தின் அச்சத்தை போக்கி அவர்களையும் இந்த நாட்டின் சகல உரிமைகளையும் உடைய பிரஜைகளாக ஏற்று கடந்த கால கசப்பு அனுபவங்களை புறந்தள்ளி காயப்பட்ட தமிழ் மக்களின் உள்ளங்களுக்கும் உடலுக்கும் மருத்து.கட்டுவதற்காக காத்திரமான நடவடிக்கைகளை இன்றைய நல்லாட்சி அரசாங்கம் எடுக்க வேண்டும் என்பதே இந்த நாட்டின் அபிவிருத்தி மற்றும் உண்மையான தேசப்பற்றுடன் சிந்திக்கும் சகல தரப்பினரதும் எதிர்பார்ப்பாகும்.

N5