செய்திகள்

எழுக தமிழின் எதிரொலி

‘எழுக தமிழ்’ நிகழ்வு யாழ்ப்பாணத்தில் நடைபெற்று முடிவடைந்த பின்னரான இந்த ஒரு வார காலப்பகுதியில் தென்னிலங்கையில் அதன் எதிரொலியைப் பலமாகக் கேட்கக்கூடியதாகவுள்ளது. போருக்குப் பின்னர் வடக்கில் இடம்பெற்ற அதிகளவு மக்கள் பங்குகொண்ட ஒரு நிகழ்வாக இது கருதப்படுகின்றது. நீண்டகாலமாகத் திட்டமிடப்பட்டு நடத்தப்பட்ட இந்த நிகழ்வு அரசியல் அரங்கில் இன்று முக்கியமான பேசு பொருளாகியிருக்கின்றது.

அரசாங்கத் தரப்பு உத்தியோகபூர்வமாக இது குறித்து கருத்து வெளியிடாத அதேவேளையில், பிரதான எதிர்க் கட்சிகளும், ஆளும் கட்சியிலுள்ள ஒரு சிலரும் எழுக தமிழ் குறித்து கடும் தொனியில் கருத்துக்களை முன்வைத்துவருகின்றார்கள். எழுக தமிழ் இனவாதத்தைத் தூண்டும் ஒரு முயற்சி என அவர்கள் சொல்கின்றார்களே தவிர, அதில் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளுக்குப் பதிலளிக்கத் தயாராகவில்லை. பெருமளவு தமிழர்கள் பங்குகொண்டு தமது உணர்வுகளை வெளிப்படுத்தும் போது அதனைப் புறக்கணித்துவிட முடியாது.

எழுக தமிழ் நிகழ்வில் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் ஒன்றும் புதியவையல்ல. கடந்த வருடம் ஆகஸ்ட் மாதத்தில் நடைபெற்ற பொதுத் தேர்தலின் போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் முன்வைக்கப்பட்ட தேர்தல் விஞ்ஞாபனத்தின் ஒரு வடிவம்தான் அது. காலத்துக்கு ஏற்றவகையில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளனவே தவிர, பிரிவினைக் கோரிக்கையை முன்வைக்கக்கூடிய கோஷங்கள் எதுவும் அங்கு முன்வைக்கப்படவில்லை. பொதுத் தேர்தல் நடைபெற்று ஒரு வருடத்துக்கு மேல் சென்றுவிட்டது.

ஆட்சி மாற்றம் ஏற்பட்டு இரண்டு வருடங்கள் நிறைவடையப்போகின்றது. ஆட்சி மாற்றத்துக்கு தமிழ் மக்கள் முழு அளவிலான ஆதரவை வழங்கியிருந்தார்கள். தங்களுடைய அடிப்படை மற்றும் அன்றாடப் பிரச்சினைகளுக்குத் நியாயமான தீர்வு ஒன்றை நல்லாட்சி அரசாங்கம் பெற்றுத்தரும் என நம்பினார்கள். அந்த நம்பிக்கை வீண்போயுள்ள நிலையில்தான், தமது ஆதங்கததை எழுக தமிழ் நிகழ்வில் வெளிப்படுத்தினார்கள்.

ஆட்சிமாற்றம் பல விடயங்களில் சுதந்திரமாகச் செயற்படக் கூடிய ‘வெளி’ ஒன்றை ஏற்படுத்தியிருக்கின்றது என்பது உண்மை. கருத்துச் சுதந்திரம், ஊடக சுதந்திரம், ஒன்று கூடுவதற்கான சுதந்திரம் என்பனவற்றில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டிருக்கின்றது. இருந்தபோதிலும், தமிழர்களுடைய இருப்பையும், எதிர்காலத்தையும் கேள்விக்குறியாகக்கூடிய பல சம்பவங்கள் முடுக்கிவிடப்பட்டிருக்கின்றன.

வடக்கில் அளவுக்கு அதிகமாகவுள்ள இராணுவத்தை வெளியேற்றுவதையும், முகாம்களை அகற்றுவதையும் நடைமுறைப்படுத்த அரசாங்கம் தயாராகவில்லை. இந்த முகாம்களை அடிப்படையாகக்கொண்டு திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்கள் முடுக்கிவிடப்படுகின்றன. முல்லைத்தீவின் கரையோரங்களில் தமது பாரம்பரிய மீன்பிடிப் பகுதிகளில் சிங்கள மீனவர்கள் மீன்பிடிப்பதை வேடிக்கை பார்த்துக்கொண்டு நிற்க வேண்டியவர்களாக தமிழ் மீனவர்கள் உள்ளார்கள். அவர்களுடைய கண்முன்பாகவே அவர்களுடைய வளங்கள் சூறையாடப்படுகின்றன.

வன்னியில் பௌத்தர்களே இல்லாத பகுதிகளில் புத்தர் சிலைகள் வைக்கப்படுகின்றன. தமிழ் மக்கள் புத்தருக்கு எதிரானவர்கள் அல்ல. ஆனால், தமது பகுதிகளில் புத்தர் சிலைகளையும் அரச மரத்தையும் கண்டால் அஞ்ச வேண்டிய நிலையில் தமிழர்கள் உள்ளார்கள். கடந்தகால வரலாறு அவர்களுக்கு அந்த அச்சத்தை ஏற்படுத்துகின்றது. புத்தர் சிறைகளும், அரச மரமும் முதலில் வரும் அதனையடுத்து அந்த இடத்தில் சிங்களக் குடியேற்றம் இடம்பெறும் என்பது தமிழர்கள் கண்ட வரலாறு.

சிங்களக் குடியேற்றம் இடம்பெறும் போது தமிழர்கள் தமது மண்ணிலேயே அகதிகளாவது கடந்த அறுபது வருடகாலமாக இங்கு நடைபெற்று வருகின்றது. தற்போதைய நல்லாட்சி அரசாங்கத்திலும் அது நடைபெறுவதை எவ்வாறு ஏற்றுக்கொள்வது? இது தொடர்பில் தெரிவிக்கப்பட்ட ஆட்சேபனைகள் எதுவுமே அரசாங்கத்தினால் கண்டுகொள்ளபபடவில்லை. இதனைவிட முற்றும்பெறாத மீள்குடியேற்றம், கைதிகளின் விடுதலையில் காணப்படும் தாமதம் என்பனவும் எழுக தமிழ் நிகழ்வில் மக்கள் அணிதிரளக்காரணம்.

இவற்றுக்கு சமமான முக்கியத்துவத்தைப் பெற்றதுதான் அரசியலமைப்பு மறுசீரமைப்பு. இனநெருக்கடிக்கு நியாயமான அரசியல் தீர்வு ஒன்று காணப்பட வேண்டும் என்ற அழுத்தத்தினால்தான் புதிய அரசியலமைப்பு ஒன்றை அமைப்பதற்கான முயற்சிகள் ஆரம்பிக்கப்பட்டன. புதிய அரசியலமைப்பின் மூலமாக தேசியப் பிரச்சினைக்குத் தீர்வு காணப்படும் என சர்வதேச சமூகத்துக்கும் அரசாங்கம் வாக்குறுதியளித்திருந்தது.

ஐ.நா. மனித உரிமைகள் பேரவை மூலமாக எதிர்கொள்ளப்படும் அழுத்தங்களைச் சமாளிப்பதற்கும் இதனை அரசாங்கம் பயன்படுத்தியது. அதனால்தான், புதிய அரசியலமைப்புக்காகக் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தின் முன்னுரையில் தெரிவிக்கப்பட்ட மூன்று நோக்கங்களில் ஒன்றாக, தேசியப் பிரச்சினைக்கான தீர்வு முன்வைக்கப்படும் என்பதும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இருந்தபோதிலும் பின்னர் சிங்களக் கடும் போக்காளர்களை சமாளிப்பதற்காக அது நீக்கப்பட்டுவிட்டது. இந்தநிலையில் புதிய அரசியலமைப்பின் மூலமாக இனநெருக்கடிக்கான தீர்வு கிடைக்குமா என்பதும் கேள்விக்குறியாகியிருக்கின்றது.

எழுக தமிழ்ப் பிரகடனத்திலும், முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் அங்கு நிகழ்த்திய உரையிலும் தெரிவிக்கப்பட்ட விடயங்களை முழுமையாகப் படிக்காமல் அல்லது அவற்றைப் புரிந்துகொள்ள விரும்பாமல், அதனை இனவாதத்துடன் பார்க்கும் ஒரு குழுவினரே இன்று வீதிகளில் இறங்கியிருக்கின்றார்கள். வாகனங்களில் கொண்டுவந்து இறக்கிய ஒரு குழுவினரை வைத்து பொதுபல சேனா வவுனியாவில் ஆர்ப்பாட்டப் பேரணி ஒன்றை நடத்தியிருக்கின்றது. எழுக தமிழுக்கும் விக்னேஸ்வரனுக்கும் எதிராகவே இந்தப் பேரணி நடத்தப்பட்டது. தென்னிலங்கையிலும் சிங்கள – பௌத்த இனவாதத் தலைவர்கள் இதற்கு எதிராகக் குரல் கொடுக்கத் தொடாங்கியிருக்கின்றார்கள்.

ஆனால், எழுக தமிழ் நிகழ்வில் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளுக்கு ஆரோக்கயமான வகையில் பதிலளிக்க யாருமே தயாராகவில்லை என்பது அவர்களுடைய வங்குரோந்து அரசியலைப் புலப்படுத்துகிறது. மக்களுடைய ஆதங்கத்தைப் புரிந்துகொண்டு அதற்குப் பதிலளிக்க வேண்டியவர்கள் மெளனமாக இருக்கின்றார்கள்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதான பங்காளிக் கட்சியான தமிழரசுக் கட்சி இவ்விடயத்தில் எடுத்துக்கொண்ட நிலைப்பாடு ஆச்சரியமானது. “மக்கள் போராட்டத்துக்கு நாம் எதிரானவர்கள் அல்ல. ஆனால் அதற்கான தருணம் இதுவல்ல” என அவர்கள் தங்களுடைய நிலைப்பாட்டை வெளிப்படுத்தியிருந்தார்கள். அரசியலமைப்பு மாற்றத்துக்கான கருமங்கள் நடந்துகொண்டிருக்கும் நிலையில் அதனைக் குழப்புவதாக இவ்வாறான பேரணிகள் அமைந்துவிடும் என்பதும் அவர்களுடைய கருத்தாக இருந்தது.

அரசியலமைப்பு சீர்திருத்த முயற்சிகள் நடைபெறும் நிலையில் தமிழ் மக்களுடைய அபிலாஷைகளை அதில் உள்ளடக்குவதற்கு வேண்டிய அழுத்தத்தைக் கொடுப்பதற்கு இதனைப் பயன்படுத்திக்கொள்ள முடியும் என்பதை தமிழரசுக் கட்சி கண்டுகொள்ளவில்லை. மக்கள் அரசியல் மயப்படுத்தப்படுவது அவசியம். அந்த வகையில் எழுக தமிழ் முக்கியமான ஒரு கட்டத்தில் இடம்பெற்ற அவசியமான ஒரு நிகழ்வாகவே கருதவேண்டும்.