செய்திகள்

‘எழுக தமிழ்’ எழுச்சி காலத்தின் கட்டாயம்

சதுர்வேதி

புதிய அரசியலமைப்பின் ஊடாக தமிழ் மக்களது பிரச்சினைகளுக்குரிய அரசியல் தீர்வினை பெற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமென மத்தியில் ஆட்சி புரிந்து வருகின்ற ரணில்  மைத்திரி தலைமையிலான நல்லாட்சி அரசாங்கம் கூறிவருகின்ற நிலையில் அத்தகைய புதிய அரசியல் அமைப்பு மாற்றத்தில் எவ்வளவு தூரத்திற்கு தமிழ் மக்களது பிரச்சினைகளுக்கான தீர்வுகள் உள்வாங்கப்படுமென்கின்ற சந்தேகம் தமிழ் மக்கள் மத்தியில் வலுத்து வருகின்றது.

மைத்திரி தலைமையிலான நல்லாட்சி அரசாங்கம் ஒன்று உருவாகுவதற்கு பிரதான பங்காளிகளாகத் திகழ்ந்த தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினர் கடந்த பொதுத் தேர்தலுக்கான விஞ்ஞாபனத்தில் இணைந்த வடக்குக் கிழக்கில் சமஷ்டி அடிப்படையிலான தீர்வு பெற்றுக்கொடுக்கப்படும் என தெரிவித்திருந்தனர்.

அதுவும் 2016 இற்கு உள்ளேயே அத்தகைய தீர்வு பெற்றுக்கொடுக்கப்படுமென அதன் தலைவர் இரா.சம்பந்தன்  உறுதிபடத் தெரிவித்து மக்களிடம் வாக்குகளைக் கோரியிருந்தார். இதனை நம்பி தமிழ் மக்கள் கூட்டமைப்பிற்கு ஏகோபித்த ஆதரவினை தேர்தலில் வழங்கியிருந்தனர்.

இத்தகைய நிலையில் தமிழ் மக்களது எதிர்பார்ப்பு இணைந்த வடக்கு, கிழக்கில் சுயநிர்ணயத்தை அடிப்படையாகக் கொண்ட சமஷ்டித் தீர்வு என்பதாகக் காணப்படுகின்றது. ஆனால் மத்தியில் உள்ள மைத்திரி ரணில் தலைமையிலான தேசிய அரசாங்கம் தமிழ் மக்கள் எதிர்பார்க்கின்ற தீர்வினை புதிய அரசியலமைப்பின் ஊடாக பெற்றுத்தர விரும்பாத போக்கினை கொண்டிருப்பதனை தற்போது அவதானிக்கக் கூடியதாக உள்ளது.

ஒரு புறத்தில் மகிந்த ராஜபக்ஷவிற்கு ஆதரவான ஒருங்கிணைந்த எதிர்க்கட்சியினரைப் பயன்படுத்தி அவர்களுக்கூடாக சமஷ்டிக்கு எதிரான கருத்துருவாக்கத்தினை தென்னிலங்கை மக்கள் மத்தியில் ஏற்படுத்துவதற்கு மத்தியில் உள்ள அரசாங்கம் முனைந்து வருவது தெரியவருகின்றது.

இதனை உறுதிப்படுத்தும் இரண்டு சம்பவங்கள் அண்மையில் நிகழ்ந்துள்ளன.

ஒன்று, கூட்டு எதிர்க்கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரான தினேஷ் குணவர்தன நாங்கள் சமஷ்டி அடிப்படையிலான தீர்வினை ஒருபோதும் ஏற்கமாட்டோம் எனத் தெரிவித்திருந்தார்.

இதேநிலையில் இரண்டாவது சம்பவமாக, அண்மையில் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்திருந்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க 13 ஆவது திருத்தச் சட்டத்தினை அடிப்படையாகக் கொண்டே தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வு காணப்படுமென கூறியிருந்ததும் குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் புதிய அரசியலமைப்பில் அதிகாரப் பகிர்வு எவ்வாறு அமையப்போகிறது என அவர் கோடிகாட்டியிருந்தார்.

ஆகமொத்தத்தில் சுயநிர்ணய அடிப்படையிலான சமஷ்டி என்கின்ற தீர்வினை தமிழர்களுக்குத் தருவதிலிருந்து மத்தியில் இருக்கக் கூடிய நல்லாட்சி அரசாங்கம் பின்வாங்கப் போகிறது என்பது வெளிப்படையாகப் புலனாகத் தொடங்கியுள்ளது.

மறுபுறத்தில் கிழக்கு மாகாணத்தில் இருக்கக் கூடிய கடும் போக்கு முஸ்லிம் தலைவர்களைப் பயன்படுத்தி வடக்கு  கிழக்கு இணைப்பிற்கு எதிரான வேலைத்திட்டங்களை முன்னெடுக்கும் நடவடிக்கைகளில் அரசு ஏற்கனவே இறங்கியுள்ளமை தெரியவருகிறது.

“சுதந்திர கிழக்கு’ மற்றும் முஸ்லிம் ஒருவர் முதலமைச்சராக வரக்கூடிய மாகாணம் போன்ற கருத்துகளைத் தோற்றுவித்து அதன் மூலம் கிழக்கிலுள்ள முஸ்லிம்களை வடக்கு  கிழக்கு இணைப்பிற்கு எதிராகத் திசைதிருப்புவதன் மூலம் வடக்கு மற்றும் கிழக்கை மீள் இணைப்பதனை தவிர்ப்பதற்கு வேண்டிய நகர்வுகளை மத்திய அரசு மிகத் தந்திரமாகத் செய்துவருகிறது.

ஆக மொத்தத்தில் சமஷ்டியும் வடக்கு  கிழக்கு மீள் இணைப்பினையும் தவிர்த்து 13 ஆவது திருத்தச் சட்டத்தில் சொல்லப்பட்டதை விட குறைவான ஓர் தீர்வினையே புதிய அரசியல் அமைப்பில் அரசு முன்மொழிவதற்கான சாத்தியங்கள் தென்படுகின்றன.

மிகப் பெரிய பரிதாபம் என்னவென்றால், 2016 ற்குள் இணைந்த வடக்குக் கிழக்கில் சமஷ்டி அடிப்படையிலான தீர்வினைப் பெற்றுத்தருவதாகக் கூறி மக்களின் ஏகோபித்த ஆதரவினைப் பெற்ற தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினர் குறிப்பாக தமிழரசுக் கட்சியினர் அரசின் இத்தகைய நடவடிக்கைகளுக்கு எதிராக எதுவித எதிர்வினையினையும் ஆற்றாது வெறுமனே இருக்கின்றனர் என்பதுதான் உண்மை. காலம் கனிந்து வருகின்ற நிலையில், நிலைமைகளை குழப்ப வேண்டாம் என கூறிக்கொள்கின்ற அதேநேரம், அரசுக்கு நெருக்கடிகளைக் கொடுக்கக் கூடிய நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் எனவும் தெரிவித்துக்கொண்டு தமிழ் மக்கள் சார்பில் எவ்வித அழுத்தத்தினையும் கொடுக்காதது மட்டுமல்ல மாறாக இராஜதந்திர மட்டங்களில் அரசுக்கு சார்பான கருத்து நிலையினை உருவாக்குவதற்கு தமிழரசுக் கட்சியினர் உதவி புரிந்து வருகின்றனர்.

குறிப்பாக இறுதிப்போரின் போது இடம்பெற்றதாகக் கூறப்படும் இனப்படுகொலைகளுக்கான சர்வதேச விசாரணை, பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் உண்மையினை கண்டறிவதற்கான உறுதியான நடவடிக்கைகள், அரசியல் கைதிகளின் விடுதலை, வடக்கில் மிகையாகக் குவிக்கப்பட்டுள்ள இராணுவத்தினை குறைத்தல் தொடர்பான அரசுக்கு நெருக்கடி கொடுக்கக் கூடிய விடயங்களில் உறுதியான நடவடிக்கைகள் எதனையும் செய்யாது வெறுமனே ஒரு மெத்தனப் போக்கினை கடைப்பிடிப்பதன் மூலம் சர்வதேச மட்டத்தில் அரசுக்கு சார்பான நிலைமையினை ஏற்படுத்தி வருகின்றது.

ஆக, தமிழர் மீது இழைக்கப்பட்ட மேலும் இழைக்கப்பட்டு வருகின்ற அநீதிகள் தொடர்பில்  நீதியைப் பெற்றுத்தருவதற்கும், தமிழ் மக்களால் எதிர்பார்க்கப்படுகின்ற அடிப்படை அரசியல் தீர்வினைப் பெற்றுத்தருவதற்கும் மத்தியில் ஆட்சி புரிகின்ற அரசிற்கு எவ்விதமான அழுத்தத்தினையும் பிரயோகிக்காமல் விடுவதன் மூலம் எதிர்காலத்தில் தமிழ் மக்கள் மிகக் கீழான ஒரு நிலைமையினை நோக்கித் தள்ளப்பட்டுக்கொண்டு செல்வதற்கு தமிழரசுக் கட்சியினர் காரணமாக உள்ளனரா? எனக் கேள்வி எழுந்துள்ளது.

இந்நிலையில் தமிழ் மக்கள் பேரவையினர் “எழுக தமிழ்’ என்கின்ற மக்கள் எழுச்சிப் பேரணியை நடத்தி அதன் மூலம் அரசுக்கோர் அழுத்தத்தினைப் பிரயோகிக்கவும், சர்வதேசத்திற்கு தமிழ் மக்களது உணர்வுகளை வெளிப்படுத்தவும் முனைந்திருக்கின்றனர்.

உண்மையிலேயே இது காலத்தின் கட்டாய தேவை. தமிழர்களது அபிலாஷைகளையும் எதிர்பார்ப்புகளையும் ஒட்டுமொத்த  வலிமையான குரலினூடாக எடுத்துச்சொல்லவேண்டியுள்ளது. அதுவும் புதிய அரசியலமைப்பிற்கான வரைபு வெளிவரவுள்ள நிலையில் எமது கோரிக்கைகளையும் எதிர்பார்ப்புகளையும் வெளிப்படுத்த வேண்டியது அவசியமானதொன்று.

ஆகவே, வரலாற்றின் முக்கிய புள்ளியில் வாழ்ந்து கொண்டிருக்கக் கூடிய தமிழர்கள் தமக்கு இருக்கக் கூடிய கடமையினை உணர்ந்தவர்களாக கட்சி வேறுபாடுகள் உட்பட அனைத்து வேறுபாடுகளையும் களைந்து “எழுக தமிழ்’ நிகழ்வில் ஒட்டுமொத்தமாகக் கலந்துகொள்வதன் மூலம் தமிழர்களின் அபிலாஷைகளையும் கோரிக்கைகளையும் ஓங்கி ஒலிக்கச் செய்வது தமிழர்களாகிய  ஒவ்வொருவருக்குமுரிய வரலாற்றுக் கடமையெனலாம்.

n10