எழுக தமிழ் போராட்டம் தமிழ்தேசிய கூட்டமைப்புக்கோ வேறு கட்சிகளுக்கோ எதிரான போராட்டம் அல்ல
எழுக தமிழ் போராட்டம் தமிழ்தேசிய கூட்டமைப்புக்கோ வேறு கட்சிகளுக்கோ எதிரான போராட்டம் அல்ல அது தமிழ் பேசும் மக்களின் அரசியல் அபிலாசைகளை இலங்கையில் உள்ள அரசியல் தலைவர்களுக்கும் சர்வதேசத்திற்கு எடுத்துக்காட்டும் மக்கள் போராட்டம் என தமிழ் மக்கள் பேரவை தெரிவித்துள்ளது.
தமிழ் மக்கள் பேரவை எதிர்வரும் 21ஆம் திகதி மட்டக்களப்பில் நடாத்தவுள்ள எழுக தமிழ் நிகழ்வு தொடர்பில் ஊடகவியலாளர்களை அறிவுறுத்தும் ஊடகவியலாளர் சந்திப்பு இன்று வியாழக்கிழமை மாலை மட்டக்களப்பு கூட்டுறவு நிலைய கட்டிடத்தில் நடைபெற்றது.
இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் தமிழ் மக்கள் பேரவையின் இணைத்தலைவர் ரி.வசந்தராஜா, தமிழ் தேசிய கூட்டமைப்பின் கிழக்கு மாகாணசபை உறுப்பினரும் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் உயர்பிட உறுப்பினர் இரா.துரைரெட்ணம்,தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் த.சுரேஸ் உட்பட தமிழ் மக்கள் பேரவையின் உறுப்பினர்கள் பலர் கலந்துகொண்டனர்.
இதன்போது தமிழ் மக்கள் பேரவையின் இணைத்தலைவர் ரி.வசந்தராஜா,
எதிர்வரும் பங்குனி மாதம் ஜெனீவாவில் நடைபெறவிருக்கும் மனித உரிமைகள் பேரவையில் தமது பிரச்சினைகளில் காட்டப்படுகின்ற அக்கரை நீர்த்துப்போகாமலும் அதனுடைய கூர்மை மழுங்கிப்போகாமலும் இருப்பதற்காக குரல் எழுப்பவேண்டியது தங்களது கடமையென வடக்கு கிழக்கு மக்கள் கருதுகின்றார்கள்.
அதன் அடிப்படையில்தான் கடந்த புரட்டாதி மாதம் 24ஆம் திகதி வடக்கில் யாழ்ப்பாணத்தில் எழுக தமிழ் நிகழ்வு நடாத்தப்பட்டது.அந்நிகழ்வில் ஏறக்குறைய இருபத்தையாயிரம் பொதுமக்கள் கலந்துகொண்ட தங்கது அபிலாசைகளை உலகுக்கு உரத்துக்கூறினர்.
கடந்த காலத்தில் தங்களது பிரச்சினைகளை மற்றும் அபிலாசைகளை தங்களது தலைவர்கள்தான் சம்பந்தப்பட்டவர்களிடம் எடுத்துச்சொல்லவேண்டும் என்றும் அவை நிறைவேற்றப்படவேண்டும் என்றும் மக்கள் எதிர்பாத்திருந்தனர்.
ஆனால் அந்த நிலை இன்று மாறிவருகின்றது.மக்கள் தலைவர்களை முந்திக்கொண்டு தீர்மானம் எடுக்கவும் செயற்படவும் முற்படுகினற்னர்.தலைவர்களுடைய செயற்பாடுகளும் தீர்மானங்களும் தடுமாற்றம் நிறைந்துள்ளதாக மக்கள் கருதுகின்றனர்.
இதுவரை காலமும் தலைவர்களுக்கு பின்னாலேயே மக்கள் சென்றுகொண்டிருந்தார்கள்.ஆனால் தற்போது மக்கள் முன்னேபோக தலைவர்கள் பின்Nனு செல்லவேண்டிய நிலையேற்பட்டுவருகின்றது.
தலைவர்களிடம் பொறுப்புகளை ஒப்படைத்துவிட்டு பார்த்துக்கொண்டிருக்க மக்கள் இப்போது தயாராக இல்லை.தலைவர்களால் மட்டும் பொறுப்புகளை சுமக்கமுடியாது என்பதை மக்கள் உணரத்தலைப்பட்டுவிட்டனர்.
எனவேதான் தங்கள் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு தாங்களும் முழுமையான பங்களிப்பினை செய்யவேண்டும் என மக்கள் முன்வரத்துவங்கியுள்ளனர்.இதன்வெளிப்பாடாகவே தமிழ் மக்கள் தோற்றம்பெற்றதுடன் எழுக தமிழ் நிகழ்வும் நடைபெற்றுவருகின்றது.
வடகிழக்கு இணைப்பு,தங்களை தாங்களே நிர்வகிக்கும் வகையிலான சமஸ்டி தீhவு,திட்டமிட்ட குடியேற்றங்கள்,பௌத்த மயமாக்கல் நிறுத்தப்படல்,போர்குற்ற விசாரணை பொறிமுறை ஒன்றினுடாக மேற்கொள்ளப்படல்,தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை உட்பட 11 கோரிக்கைகளை முன்வைத்து இந்த எழுக தமிழ் நிகழ்வு நடாத்தப்படுகின்றது.
அதன் கீழ் எதிர்வரும் 21ஆம் திகதி மட்டக்களப்பில் எழுக தமிழ் நிகழ்வு நடாத்தப்படவுள்ளது.இந்த நிகழ்வில் இனமத கட்சி வேறுபாடுகள் இன்றி வடகிழக்கை சேர்ந்த அனைவரையும் கலந்துகொள்ளுமாறு அழைக்கின்றோம்.
தமிழ் மக்கள் பேரவை ஒரு அரசியல் கட்சியில்லை.இதனை தமிழ் தேசிய கூட்டமைப்பு சரியாக விளங்கிக்கொள்ளவில்லை.தமிழ் மக்கள் பேரவை எந்த தேர்தலிலும் போட்டியிடாது.அதனை காலப்போக்கில் தமிழ் தேசிய கூட்டமைப்பு விளங்கிக்கொள்ளும்.
வடக்கில் எழுக தமிழுக்கு வழங்கிய ஆதரவுபோல் கிழக்கு மாகாணத்திலும் எழுக தமிழுக்கு தமிழ் மக்கள் ஆதரவினை தருவார்கள் என்று நாங்கள் நம்புகின்றோம்.
இன்று பௌத்த மயமாக்கல் என்ற பெரிய அலை இரண்டு சிறுபான்மை மக்களையும் அடித்துச்செல்லும் நிலையுள்ளதன் காரணமாக இந்தவேளையில் தனித்து நின்று பலமிழந்து அழிந்துபோகாமல் ஒன்றாக இருக்கவேண்டும் என்பதற்காக எமது அயல்வீடான முஸ்லிம் சகோதரர்களுடனும் பேச்சுவார்த்தைகளை நடாத்திவருகின்றோம்.
வடகிழக்கு இணைந்திருக்கவேண்டும் என்று பல முஸ்லிம் சகோதரர்கள் விரும்புகின்றார்கள்.நாங்கள் சில அரசியல் தலைவர்களை சந்தித்துள்ளோம்.இணைந்திருப்பதே எதிர்காலத்தில் இரண்டு இனங்களுக்கும் நல்லது என பலர் கருகின்றனர்.
n10




