செய்திகள்

எவ்வாறான விசாரணைப் பொறிமுறை? அரசாங்கத்துக்குள் வலுவடையும் முரண்பாடு

போர்க்குற்ற விசாரணைகள் விடயத்தில், எந்தச் சந்தர்ப்பத்திலும் அனைத்துலக தலையீட்டை அனுமதிக்கமாட்டோம் என்று அமைச்சர் சம்பிக்க ரணவக்க உறுதியாகத் தெரிவித்திருக்கின்றார். போர்க்குற்றச்சாட்டுகள் குறித்து விசாரிக்கவுள்ள நீதிமன்றத்தில் வெளிநாட்டவர்கள் பங்கேற்பதற்கான வாய்ப்புகள் இன்னமும் திறந்த நிலையிலேயே இருப்பதாக வெளிவிவகார அமைச்சர் மங்கள  சமரவீர தெரிவித்துள்ள நிலையிலேயே, மற்றொரு அமைச்சரான அமைச்சர் சம்பிக்க ரணவக்க இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அமைச்சர் சம்பிக்க ரணவக்கவும் அரசாங்கத்தில் சக்திவாய்ந்த ஒரு அமைச்சர். ஜாதிக ஹெல உறுமயவின் தலைவர். அவருடைய கருத்தைப் புறந்தள்ளிவிட்டு அரசாங்கம் தமது செயற்பாடுகளை முன்னெடுக்கும் என எதிர்பார்க்க முடியாது.

இலங்கை அரச படைகளுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான இறுதிக்கட்டப் போரின் போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பில் விசாரணைகளை நடத்துவதற்கு சர்வதேச நீதிபதிகளை உள்ளடக்கிய கலப்பு நீதிமன்றம் ஒன்று அமைக்கப்பட வேண்டும் என ஜெனீவாவில் கடந்த செப்டம்பரில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துக்கு இலங்கை இணை அநுசரணையை வழங்கியிருந்தாலும், அரசின் செயற்பாடுகள் அதற்கு முரணாகவே உள்ளன. ஜெனீவா பிரேரணைக்கு இணை அநுசரணையை வழங்கியதன் மூலம் சர்வதேசத்தின் நற்பெயரை அரசாங்கம் சம்பாதித்துக்கொண்டுள்ளது. சர்வதேச ரீதியாக இலங்கை தொடர்பில் காணப்பட்ட இறுக்கமான நிலை இதன்மூலம் தளர்த்துள்ளது. இருந்தபோதிலும், கலப்பு நீதிமன்றம் என்பதை உள்நாட்டு அரசியலரங்கில் சந்தைப்படுத்துதில் அரசாங்கம் தடுமாறுவதைக் காணக்கூடியதாகவுள்ளது.

maithri-100இரு பிரதான கட்சிகளான ஐ.தே.க.வும், ஶ்ரீல.சு.க.வும் இணைந்து அமைத்துள்ள நல்லாட்சியிலும் இவ்விடயத்தில் முரண்பாடுகள் தெளிவாகத் தெரிகின்றன. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, சர்வதேச நீதிபதிகளுக்கு இடமளிக்கப்போவதில்லை என்பதை உறுதியாகக்கூறிவருகின்றார். நீதியும், நியாயமுமான விசாரணையை உள்நாட்டில் நடத்துவதற்கு நாம் தயாராகவுள்ளோம். அதனால், வெளிநாட்டு நீதிபதிகள் அவசியமில்லை என்ற கருத்தை ஜனாதிபதி அண்மைக்காலமாக வலியுறுத்திவருகின்றார். அவரது பிரதான அரசியல் வைரியான மகிந்த ராஜபக்ஷ முன்னெடுக்கும் பிரச்சாரங்களை முறியடிப்பதற்கான உபாயமாக அவர் இதனைக்கூறியிருக்கலாம். இலங்கைக்கு விஜயம் செய்திருந்த ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் அல் ஹ+சைனுடனான பேச்சுக்ளின் போதும் இதனைத்தான் அவர் தெரிவித்திருந்தார்.

மறுபுறத்தில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும், வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவும் முரண்பாடான கருத்தை வெளிப்படுத்திவருகின்றார்கள். விசாரணைப் பொறிமுறையில் சர்வதேச நீதிபதிகள் இடம்பெறுவதை நிரகரிக்க முடியாது என அவர்கள் கூறுகின்றார்கள். குறிப்பாக சர்வதேச அரங்குகளில் அவர்களுடைய இந்தக் கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன. அமெரிக்காவில் தற்போது விஜயத்தை மேற்கொண்டுவரும் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்திருக்கும் கருத்துக்கள்தான் இப்போது சா;ச்சைக்குள்ளாகியுள்ளன. ” மனித உரிமை மீறல்கள் தொடர்பான குற்றச்சாட்டுகள் குறித்து விசாரிக்கவுள்ள சிறப்பு நீதிமன்றத்தில் வெளிநாட்டவர்கள் பங்கேற்பதற்கான வாய்ப்புகள் இன்னமும் திறந்த நிலையிலேயே இருக்கின்றது” என  சமரவீர திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

வொசிங்டனில் உள்ள அமைதிக்கான அமெரிக்க நிறுவகத்தில் ஆற்றிய உரையிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஜோன் கெரியுடனான சந்திப்பையடுத்தே, மங்கள சமரவீர இங்கு உரையாற்றியிருந்தார். “போர்க்குற்றங்கள் குறித்து உள்நாட்டு விசாரணையே நடத்தப்படும் என்றும் வெளிநாட்டவர்கள் பங்கேற்கமாட்டார்கள்” என்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துவரும் கருத்துக்களுடன் அமைச்சர் சமரவீரவின் உரை முற்றுலும் முரண்படுகின்றது. அது தொடர்பாக தன்னுடைய உரையில் குறிப்பிட்ட அமைச்சர் சமரவீர, “அது ஜனாதிபதியின் கருத்து மட்டுமே” எனக் குறிப்பிட்டிருப்பது கவனிக்கத்தக்கது. அதாவது ஜனாதிபதி தெரிவித்திருப்பது அரசாங்கத்தின் கருத்தல்ல என்பதுதான் அமைச்சர் தெரிவித்திருப்பதன் சாராம்சம். நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஒருவர் தெரிவித்திருப்பதை “அவரது சொந்தக் கருத்து” என அமைச்சர் ஒருவர் குறிப்பிட்டிருப்பது இதுதான் முதல் தடவையாக இருக்கலாம்.

champika-ranawaka-300x200இப்போது, “அமைச்சர் மங்கள சமரவீர அமெரிக்காவில் தெரிவித்திருப்பது அரசாங்கத்தின் நிலைப்பாடல்ல. அது அவரின் சொந்தக்கருத்து” என்ற வகையில் மற்றொரு அமைச்சரான சம்பிக்க ரணவக்க கருத்து வெளியிட்டுள்ளார். ” எமது நாட்டில் இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க்குற்றங்கள்  தொடர்பான விசாரணைகளுக்கு எந்த சந்தர்ப்பத்திலும் அனைத்துலக தலையீட்டை அனுமதிக்க மாட்டோம். ஒருசிலர் தெரிவிக்கும் கருத்துகளை நிலையான கருத்தாக கொள்ள முடியாது. அனைத்துலக விசாரணைக்கான கதவுகள் மூடப்பட்டுவிட்டன. ” என அமைச்சர் சம்பிக்க உறுதியாகக் கூறியிருக்கின்றார்.

ஆக, அரசாங்கத்தின் உண்மையான நிலைப்பாடு எது என்பதில் குழப்பம் ஏற்படுகின்றது. ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் இலங்கை விஜயத்தின் இறுதியில் ராய்டர் செய்திச்  சேவைக்கு அளித்துள்ள பேட்டியில் தெரிவித்திருக்கும் கருத்துக்களும் முக்கியமானவை. “வெளிநாட்டு நீதிபதிகளை நியமிக்க வேண்டும் என இலங்கைக்கு ஐ.நா. அழுத்தம் கொடுக்காது” என அவர் அப்போது குறிப்பிட்டிருந்தார். போர்க் குற்றங்கள் தொடர்பில் சர்வதேச விசாரணை ஒன்றைத்தான் தமிழர்கள் சார்ந்த அமைப்புக்கள் னெீவாவில் வலியுறுத்தியிருந்தன. கலப்பு நீதிமன்றம் என்பதே மிகக்குறைந்த ஒன்றகவே தமிழர் தரப்பு நோக்கியது. இப்போது நிலைமை உள்நாட்டு விசாரணையை நோக்கிச் சென்றுகொண்டிருப்பது தெரிகின்றது. தமிழர் தரப்பு மிகவும் பலவீனமான நிலையில் இருப்பதன் பிரதிபலிப்புதான் இது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப் பொறுத்தவரையில் என்னதான் எதிர்க்கட்சித் தலைமைப் பதவியைக் கையில் எடுத்திருந்தாலும், அழுத்தம் கொடுக்கக்கூடிய பலமான நிலையில் அது இல்லை என்பது தெரிகின்றது. சர்வதேசத்தையும், இந்தியாவையும் சார்ந்ததாகவே அதன் அரசியல் நகர்வுகள் இருந்தமையால் இந்தவிடயத்தில் கடுமையான அழுத்தத்தைக் கொடுக்கக்கூடி இயலுமையைக் கொண்டதாக தன்னை வெளிப்படுத்த முடியாத நிலையில் கூட்டமைப்பு உள்ளது. இந்த நிலையில் சம்பந்தன் எதிர்பார்ப்பது போல இவ்வருடத்தில் எவ்வாறு தீர்வு ஒன்றைப் பெற்றுக்கொள்ள முடியும்?

ஞாயிறு தினக்குரல்: 2016-02-28