செய்திகள்

ஏற்றிவைத்த விடுதலைத் தீ எமக்குள்ளே எரிந்தெரிந்து உங்களுக்கு விளக்கேற்றும் !

கார்த்திகைக் கொடி

‘பூ’ பூக்கும்

நீர்திவலை விழிதாண்டி உருண்டோடி

எங்கள் முகம் நனைக்கும் !

நேற்று உங்கள்  மூச்சுணர்ந்த

காற்று எ (ம்)மை  வருடி …..

இதயத் துயராற்றும் !

சாற்றிய தியாகங்கள் -உங்கள்

சளைக்காத வீரம்…

தோற்றிடா தன்மானம்

துவண்டிடா நெஞ்சுரம் – என்றும்

போற்றிய தேசத்திற்காய்

உயிரீந்த புதல்வர்களே !- நீங்கள்

ஏற்றிவைத்த விடுதலைத் தீ

எமக்குள்ளே எரிந்தெரிந்து

உங்களுக்கு விளக்கேற்றும் !

நாற்றென்று எ(ம்)மை எண்ணி

கருவறுக்க துணிந்த எதிரிக்கு

சொல்லி வைப்போம் – நாங்கள்

நெற்கதிர்களல்ல! –

“கார்த்திகைக் கொடிகள் !!”

மீண்டும் உயிர்ப்போம்

புதுப்  பொலிவுடன்

-கொற்றவை