ஐஎஸ் அமைப்பு குறித்து மாத்திரம் அதிகம் கவனம் செலுத்துவதால் பரந்துபட்ட சிரிய யுத்த ஆபத்தை டிரம்ப் எதிர்கொள்கின்றார்
ரொய்ட்டர்- சமகளம்
சிரியா குறித்து முழுமையான தந்திரோபாயம் இல்லாமல் அமெரிக்கஜனாதிபதி டிரம்ப் ஐஎஸ் அமைப்பிற்கு எதிரான தாக்குதல்களை தீவிரப்படுத்துமாறு உத்தரவிட்டுள்ளதை சுட்டிக்காட்டியுள்ள இராணுவ ஆய்வாளர்கள் இதன் காரணமாக அவர் சிரியாவில் பரந்துபட்ட யுத்தஅபாயத்தை எதிர்கொள்கின்றார் என தெரிவித்துள்ளனர்.
அமெரிக்க விமானங்களால் சிரிய விமானம் சுட்டுவீழ்த்தப்பட்டது நவீன யுத்தங்களில் நடைபெறாத ஓரு விடயம்.18 வருடங்களில் இடம்பெற்றுள்ள முதல் சம்பவம் என இதனை குறிப்பிடலாம்.
தன்னால் தாக்குதல்களை மேற்கொள்ள முடியும் என்பதை நிரூபிப்பதற்காக அமெரிக்கா கடந்த மூன்று மாதங்களில் பல தாக்குதல்களை மேற்கொண்டுள்ளது.
சிரியாவின் இரசாயன தாக்குதல்களை தொடர்ந்து அந்த நாட்டின் விமானத்தளத்தின் மீது ஏவுகணை தாக்குதல்களை அமெரிக்கா மேற்கொண்டிருந்தது. மேலும் ஈரான் ஆதரவு ஆயுதக்குழுக்களிற்கு எதிராக பல தாக்குதல்களை மேற்கொண்டுள்ளது.

இவை அனைத்தும் தற்பாதுகாப்பு நோக்கத்துடன் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள். எனினும் இந்த தாக்குதல்கள் சிரியா குறித்த முழுமையான தந்திரோபாயத்தின் ஓரு பகுதியாக இடம்பெறவில்லை என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
அமெரிக்காவை பொறுத்தவரை முழுமையான தந்திரோபாயம் எதுவும் அதனிடம் இல்லை என மத்தியகிழக்கு நிறுவகத்தின் சார்லஸ் லிஸ்டர் தெரிவிக்கின்றார். அமெரிக்காவின் தந்திரோபயா ரீதியிலான நடவடிக்கைகள் அதற்கு மூலோபாய ரீதியில் பல பிரச்சினைகளை உண்டுபண்ணுகின்றது என்றும் அவர் தெரிவிக்கின்றார்.
சிரியாவின் அரசியல் எதிர்காலம் குறித்து டிரம்பும் அவரது ஆலோசகர்களும் நீண்ட கால தந்திரோபாயத்தை வகுக்கவில்லை அதுவே பிரச்சினை எனவும் அதிகாரிகளும் ஆய்வாளர்களும் தெரிவிக்கின்றனர். ஓபாமா போன்று டிரம்பும் ஐஎஸ் குறித்தே கவனம் செலுத்துகின்றார் சிரிய ஜனாதிபதியின் எதிர்காலம் மற்றும் மத்தியகிழக்கின் குழப்பமான கூட்டணி குறித்து அவர் சிந்திக்கவில்லை என ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

அமெரிக்காவின் தாக்குதல்கள் சிரிய ஜனாதிபதியையும் அவரது ஆதரவாளர்களையும் தடுத்து நிறுத்தப்போவதில்லை என்கிறார் யுத்தம் குறித்த கற்கைக்கான நிறுவகத்தை சேர்ந்த ஜெனீபர் கபெரில்லா. பொதுமக்கள் தலைமையிலான தந்திரோபாயம் இல்லாததும் ஐஎஸ் அமைப்பு குறித்து மாத்திரம் அமெரிக்கா கவனம் செலுத்துவதும் சிரிய அரசாங்கத்திற்கு சார்பாக அமையும் என அவர் தெரிவிக்கின்றார்.
வெள்ளை மாளிகை பேச்சாளரை இது குறித்து கருத்தை பெறுவதற்கு தொடர்பகொள்ள முடியாத நிலை காணப்பட்டது. அதேவேளை வெள்ளை மாளிகையின் மூத்த அதிகாரியொருவர் ஐஎஸ் அமைப்பதே முக்கிய நோக்கம் அதனை செய்தால் மோதல் தணிப்பு குறித்தும் கவனம் செலுத்தலாம் அதன் பின்னர் அரசியல் தீர்வு குறித்து கவனம் செலுத்தலாம் என தெரிவிக்கின்றார் ஆனால் அந்த விடயத்திற்கு இன்னமும் நீண்ட காலம் பிடிக்கும் என தெரிவித்தார்.




