ஐரோப்பிய நாடுகள் நிபந்தனைகளை ஏற்க கிரீஸ் மக்கள் எதிர்ப்பு: நிதி அமைச்சர் ராஜினாமா
கடனில் சிக்கி தவிக்கும் கிரீஸ் ஐரோப்பிய நாடுகள் நிபந்தனைகளை ஏற்க எதிர்ப்பு தெரிவித்து மக்கள் வாக்களித்துள்ளனர்.
கலாச்சார பாரம்பரியம் மிக்க கிரீஸ் நாடு தற்போது பல லட்சம் கோடி கடனில் மூழ்கி உள்ளது. ஐரோப்பிய யூனியன், மத்திய வங்கி, பன்னாட்டு நிதியம் மற்றும் ஜெர்மனி, பிரான்ஸ், இத்தாலி, ஸ்பெயின், அமெரிக்கா, நெதர்லாந்து, இங்கிலாந்து, பெல்ஜியம், ஆஸ்திரியா, பின்லாந்து உள்ளிட்ட நாடுகளில் கடன் வாங்கியுள்ளது.
எனவே, நிதி நெருக்கடியை சமாளிக்க முடியாமல் சில நாட்களாக அனைத்து வங்கிகளும், பங்கு சந்தையும் மூடப்பட்டன. ஏ.டி.எம்மில் பணமின்றி மக்கள் தவிக்கின்றனர். அதை தொடர்ந்து கடன் கொடுத்த நாடுகள் பொருளாதார நெருக்கடியை தவிர்க்க சில நடவடிக்கைகளை எடுக்கும் படி கிரீசுக்கு நிபந்தனைகள் விதித்துள்ளது.
வரியை உயர்த்த வேண்டும். மானியங்கள் ரத்து செய்ய வேண்டும். சம்பளத்தை குறைக்க வேண்டும் என தெரிவித்தது. இது பற்றி மக்களிடம் பொது வாக்கெடுப்பு நடத்த பிரதமர் அலெக்சில் டிப்ராஸ் உத்தரவிட்டார்.அதன்படி நேற்று காலை முதல் விறுவிறுப்பாக ஓட்டெடுப்பு நடந்தது. வாக்குப்பதிவு முடிந்ததும் ஓட்டு எண்ணிக்கை நடந்தது. அதன் முடிவை கிரீஸ் மட்டுமின்றி உலக நாடுகள் முழுவதும் ஆவலுடன் எதிர்பார்த்தன.
சர்வதேச கடன் வழங்கும் அமைப்பின் நிபந்தனைகளை ஏற்பதில்லை என கிரீஸ் அரசும், பிரதமர் அலெக்சிஸ் சிப்ராசும் முடிவு செய்திருந்தனர். இந்த நிலையில் பொது வாக்கெடுப்பின் முடிவுகள் அறிவிக்கப்பட்டன.அதில் 61 சதவீம் பேர் அரசின் நிலைபாட்டுக்கு ஆதரவு தெரிவித்து உள்ளனர். அதாவது கடன் வழங்கிய அமைப்புகள் மற்றும் நாடுகளின் நிபந்தனைகளை ஏற்க கூடாது என கூறியுள்ளனர்.
மீதமுள்ள 39 சதவீதம் பேர் அரசின் நிலைபாட்டுக்கு எதிராக வாக்களித்துள்ளனர். அதாவது நிபந்தனைகளை ஏற்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.பொது வாக்கெடுப்பில் வெற்றி பெற்றதை தொடர்ந்து அரசின் ஆதரவாளர்கள் ஆயிரக்கணக்கானவர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். ஏதென்சில் உள்ள பாராளுமன்ற கட்டிடம் முன்பு சின்டாக்மா சதுக்கத்தில் கிரீஸ் நாட்டு கொடியுடன் திரண்டு ஆடிப்பாடி கொண்டாடினார்.
இது குறித்து பிரதமர் அலெக்சிஸ் சிப்ராஸ் டெலிவிஷனில் உரை நிகழ்த்தினார். அப்போது, ‘‘இன்று நாம் ஜனநாயகத்தை கொண்டாடி கொண்டிருக்கிறோம் என்றார். மேலும் இந்த ஞாயிறு ஐரோப்பிய வரலாற்றில் மிகவும் ஒளி மயமான நாள்’’ என்றும் வர்ணித்தார்.
‘மிகவும் கஷ்டமான சூழ்நிலையிலும் ஜனநாயகத்தை பிளாக் மெயில் செய்ய முடியாது’ என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது என பெருமிதத்துடன் கூறினார்.
கடன் வழங்கிய நாடுகள் மற்றும் அமைப்பின் நிபந்தனைகளை ஏற்க முடியாது என மக்கள் வாக்களித்துள்ளதால் ஐரோப்பிய நாடுகள் கூட்டமைப்பில் இருந்து கிரீஸ் வெளியேறும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
மேலும் ‘யூரோ’ நாணயத்தையும் பயன்படுத்த முடியாது. இந்த நிலையில் கடன் கொடுத்த நாடுகள் கிரீஸ் மீது நடவடிக்கை எடுக்கும் நிலை உள்ளது. அதை கிரீஸ் எப்படி சமாளிக்க போகிறது என்ற எதிர்பார்ப்பும் உள்ளது.
ஆனால் பொது வாக்கெடுப்பு முடிவுகள் வெளிவந்த போது நேற்று இரவு ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்கவும், பிரான்ஸ் அதிகர் பிரான்கோயிஸ் ஹோலண்டேயும் டெலிபோனில் பேசினர். அதன் பின்னர் கிரீஸ் மக்கள் வாக்களிப்புக்கு மதிப்பு அளிக்க போவதாக ஜெர்மனி பிரதமர் மெர்கல் முடிவு செய்துள்ளார்.
இந்த பரபரப்பான சூழ்நிலைக்கு இடையே கிரீஸ் நாட்டின் நிதி மந்திரி யானிஸ் வருபாகிஸ் தனது பதவியை ராஜினாமா செய்தார். கடன் வழங்கிய ஐரோப்பிய நாடுகளின் நிபந்தனைகளை ஏற்க வேண்டாம் என மெஜாரிட்டி மக்கள் வாக்களித்துள்ளதை அரசு வரவேற்று இருப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த முடிவை அவர் எடுத்துள்ளார்.






