ஐ.தே.க. வின் தேர்தல் பிரசாரம் மேதினக் கூட்டத்தோடு ஆரம்பம்
எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலின் பிரசாரப் பணிகளை மேதினக் கூட்டத்தோடு ஆரம்பிக்க ஐக்கிய தேசியக் கட்சி தீர்மானித்துள்ளது.
இதன் பிரகாரம் ஐ.தே.க. வின் மேதினக் கூட்டம் பொரளை கம்பல் திடலில் நடத்தப்படவுள்ளதோடு அன்றைய தினம் கட்சித் தலைவரும் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க தேர்தல் பிரசாரப் பிரகடனத்தையும் வெளியிடவுள்ளார் என கட்சியின் ஊடகப் பேச்சாளரும் கல்வி அமைச்சருமான அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்தார்.
19 ஆவது அரசியலமைப்புத் திருத்தம் பாராளுமன்றத்தில் நிறைவேறினாலும் இல்லாவிட்டாலும் பாராளுமன்றம் கலைக்கப்பட்டு தேர்தலுக்குச் செல்வது உறுதியானதெனவும் அவர் குறிப்பிட்டார்.
இந்தத் தேர்தலில் பெரும்பான்மை ஆசனங்களை வெற்றிகொள்வதற்கு கட்சி வியூகங்களை அமைத்துச் செயற்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.




