செய்திகள்

ஐ.தே.க.வில் போட்டியிட 16,000 விண்ணப்பங்கள்: தெரிவு செய்வதற்கு விஷேட குழு

ஐக்கிய தேசியக் கட்சியின் கீழ் போட்டியிடுவதற்காக 16 ஆயிரம் விண்ணப்பங்கள் சிறிகொத்தாவில் வந்து குவிந்திருப்பதாக அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல நேற்று தெரிவித்தார். இவர்களுள் காலத்திற்கு ஏற்ற வகையில் மக்களின் தேவைகளை நிறைவு செய்யக் கூடிய திறமைசாலிகளை தெரிவு செய்வதற்காக ஐ.தே.க தவிசாளர் மலிக் சமரவிக்கிரம தலைமையில் விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.

இதேவேளை ஐ.தே.க.வில் முன்னொரு போதும் இல்லாத வகையில் பெரும் எண்ணிக்கையான விண்ணப்பங்கள் வந்து குவிந்திருப்பதாகவும் அமைச்சர் கிரியெல்ல சுட்டிக்காட்டினார்.

எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் ஐ.தே.க. யானை சின்னத்தில் போட்டியிட வுள்ளது. எனினும் ஊழல், மோசடிகளில் ஈடுபடாத எவருடனும் இணைந்து போட்டியிட தயாரென்பதனால் எந்தவொரு கட்சியோ அல்லது தனிநபரோ ஐ.தே.க. வுடன் இணைந்து யானை சின்னத்தின்கீழ் போட்டியிட முடியுமெனவும் அவர் கூறினார்.

சிறிகொத்தவில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கருத்து தெரிவித்தபோதே ஊடகவியலாளர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கையில் அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க ஐ.தே.க. வில் போட்டியிட விரும்பினால் அனுமதிப்பீர்களா? என கேட்டதற்கு மோசடிகளில் ஈடுபடாத எவருக்கும் சந்தர்ப்பம் உண்டு. அந்த வகையில் முன்னாள் ஜனாதிபதி விரும்பினால் போட்டியிடலாம் என்றும் அமைச்சர் கூறினார்.