ஐ.தே.க.வுடன் இணைந்து மு.கா. போட்டி: ஆசனப் பகிர்வு குறித்து இன்னும் முடிவில்லை
நாடாளுமன்றத்துக்கு நடைபெறவுள்ள தேர்தலில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து போட்டியிடவுள்ளதாக அறிவித்துள்ளது. இதை உறுதிப்படுத்தினார் அக்கட்சியின் துணைப் பொதுச்செயலர் நிசாம் காரியப்பர்.
எனினும் இரு கட்சிகளும் எங்கு, எப்படி, எதன் அடிப்படையில் போட்டியிடுவார்கள் என்பது முடிவாகவில்லை என்றும், அது அடுத்த சில தினங்களில் தெரியவரும் எனவும் அவர் கூறினார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மீண்டும் அதிகாரங்களைக் கைப்பற்றுவதை தடுக்கும் நோக்கிலேயே ஸ்ரீலங்கா காங்கிரஸ் தேர்தல் தொடர்பான இந்த முடிவை எடுத்துள்ளது என்கிறார் நிசாம் காரியப்பர்.
சிறுபான்மை மக்கள் அச்சமின்றி வாழவேண்டும் எனும் எண்ணப்பாடு, கட்சியில் மேலோங்கி இருந்ததே ஐக்கிய தேசியக் கட்சியுடனான உறவுக்கு முக்கியக் காரணம் எனவும் அவர் தெரிவித்தார்.
சில மாவட்டங்களில் தமது கட்சி தனியாகவும், சில மாவட்டங்களில் ஐக்கிய தேசியக் கட்சிக்கு பாதிப்பு வராத வகையிலும் போட்டிடும் வாய்ப்புகளும் கட்சியால் பரிசீலிக்கப்பட்டு வருகிறது எனவும் கூறுகிறார் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் துணைப் பொதுச் செயலர் நிசாம் காரியப்பர்.




