செய்திகள்

ஐ.நாவில் கடும் நிபந்தனையுடன் கால அவகாசம் வழங்க தமிழ் தேசியக் கூட்டமைப்பு தீர்மானம்! ஈபிஆர்எல்எப் மாத்திரம் எதிர்ப்பு

ஐ.நாவில் கடும் நிபந்தனையுடன் கால அவகாசம் வழங்குவதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு எதிர்ப்பில்லை என தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. அதில் அங்கத்துவம் வகிக்கும் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னனி கட்சி (ஈபிஆர்எல்எப்) மாத்திரம் இதில் உடன்படவில்லை என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற மற்றும் மாகாணசகைப உறுப்பினர்களுக்கான சந்திப்பு வவுனியாவில் உள்ள விருந்தினர் விடுதி ஒன்றில் காலை 10 மணியில் இருந்து 4 மணிவரை இடம்பெற்றது. இதன்பின் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது குறித்h ஊடக சந்தில் எதிர்கட்சித் தலைவர் இரா.சம்மந்தன், தமிழரசுக் கட்சித் தலைவர் மாவைசேனாதிராஜா, ரெலோ அமைப்பின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் ஆகியோரும் உடன் இருந்தனர். இதில் அவர் மேலும் தெரிவித்ததாவது,

தமிழ் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த மக்களால் தெரிவு செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களும் இணைந்த ஒரு கூட்டம் நடைபெற்றது. இதில் விசேடமாக ஐக்கிய நாடுகள் மனிதவுரிமை பேரவையில் இப்பொழுது இடம்பெற்றுக் கொண்டிருக்கின்ற பேச்சுவார்த்தைகள் தொடர்பாகவும், இலங்கை சம்மந்தமான தீர்மானம் நிறைவேற்றப்பட இருக்கின்ற சூழ் நிலையில் ஒரு உத்தியோகபூர்வமான வரைபு ஒன்றை சில நாடுகள் முன்வைத்திருக்கின்ற நிலைமையில் இலங்கையில் வாழுகின்ற தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப் படுத்துகின்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பு அதனுடைய தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்கள் எங்களுடைய நிலமையை எடுத்துச் சொல்வதற்காக நாள் முழுவதும் நாங்கள் கருத்து பரிமாறல்கள் செய்தோம்.

இதன் இறுதியில் எடுக்கப்பட்ட தீர்மானத்தை நான் இப்போது வாசிக்கின்றேன். ஐக்கிய நாடுகள் மனிதவுரிமை பேரவையால் 2015 ஐப்பசி முதலாம் திகதி இலங்கை அரசாங்கத்தின் இணை அணுசரணையுடன் நிறைவேற்றப்பட்ட எச்ஆர்சி 30- 1 என்ற தீர்மானத்தில் இலங்கை நிறைவேற்றவேண்டும் என்று கூறப்பட்ட அத்தனை வழிடயங்களும் முழுமையாக அமுல்படுத்தப்பட வேண்டும். இவை கடுமையான நிபந்தனையின் கீழ் நிறைவேற்றப்படுவதை ஐக்கிய நாடுகள் பேரவையின் உயர்ஸ்தானிகர் அலுவலகம் இலங்கையில் நிறுவப்பட்டு, மேற்பார்வை செய்யப்பட வேண்டும்.

இலங்கை அரசாங்கம் மேற்சொன்ன விடயங்களை தகுந்த பொறிமுறைகளின் மூலம் நிறைவேற்றத் தவறினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அந்த தீர்மானத்தின் மூலம் கிடைக்க வேண்டிய அனைத்து பெறுபேறுகளும் கிடைக்கும் வண்ணமாக அதற்குரிய பெறுபேறுகளை ஐக்கிய நாடுகள் பேரவை உறுதிசெய்ய வேண்டும். இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்ட போது ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னனி கட்சியின் செயலாளர் கௌரவ நடேசு சிவசக்தி ஆனந்தன் அவர்கள் இந்த தீர்மானத்தோடு தங்களது கட்சி இணங்க உடன்பாடில்லை என்பதையும் தெரிவித்தார். அதையும் நாங்கள் இங்கு குறிப்பிட்டுள்ளோம் எனத் தெரிவித்தார்.

இதேவேளை, ஜெனீவா விவகாரம் தொடர்பில் நீண்ட நேரமாக பேசப்பட்டு பலரும் தமது கருத்துக்களை முன்வைத்திருந்ததுடன், பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் குறித்த சந்திப்பு இடம்பெற்றிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

N5