செய்திகள்

ஐ.நா அரசுக்கு காலத்தை நீடித்தால் நிலைமை இன்னும் மோசமாகும்! எச்சரிக்கிறார் சிவசக்தி ஆனந்தன் எம்.பி

அரசாங்கத்தின் கோரிக்கையை ஏற்று ஐ.நா கால நீடிப்பை வழங்குமாக இருந்தால் நிலைமை இன்றும் மோசமாகும் என வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்தார்.

வவுனியா கோதண்ட நொச்சிக்குளம் கிராமத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்தும் அங்கு கருத்து தெரிவித்த அவர்,

இரண்டு வரவு செலவுத்திட்டத்திலும் பாதுகாப்புக்கு அதிகளவான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இவ்வாறான வரவு செலவுத்திட்டமே இரண்டு தடவையும் வந்துள்ளது. மாகாணசபைக்கு கூட அரைவாசியான நிதியே வழங்கப்பட்டுள்ளது. நாங்களாகவே கொண்டு வந்த அரசின் ஊடாக எந்த அபிவிருத்தியையும் நாங்கள் செய்யமுடியாதுள்ளோம். வீதிக்கு கிரவல்கூட போடமுடியாதவர்களாகவே நாங்கள் உள்ளோம்.

வடக்கு கிழக்கில் பட்டதாரிகளின் போராட்டம், காணாமல்போனோரின் போராட்டம், காணி விடுவிப்பு தொடர்பான போராட்டம் என யுத்தகாலத்தையும் விட மோசமான நிலையில் அரசாங்கமும் நாங்களும் உள்ளோம். இந் நிலையிலும் நாங்கள் அரசிடம் இருந்து எதையாவது பிடுங்கி எமது பிரதேசத்திற்கு செய்யலாம் என நினைத்தால் அதற்கு பணம் இல்லாத நிலை காணப்படுகின்றது. பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு ஒதுக்கப்படும் நிதி என்பது ‘அழும் பிள்ளைக்கு டொபி கொடுப்பது’ மாதிரியாகவே உள்ளது. 1500 கிராமங்கள் உள்ள 3 மாவட்டங்களுக்கு ஒரு கோடி ரூபாவை தந்தால் என்ன செய்வது.

கடைசியாக வந்த வரவு செலவுத்திட்டத்திற்கு ஆதரவு வழங்கமோட்டோம் என பாராளுமன்ற குழுவில் தெரிவித்தோம். அதன்போது சம்பந்தன் எங்கள் எல்லோரையும் அழைத்து சென்று ஜனாதிபதியிடமும் பிரதமருடனும் சந்திப்பை ஏற்படுத்தினர். இதன்போது இந்த முறை எங்களுக்கு ஆதரவு அளியுங்கள். அமெரிக்காவில் இருந்து காசு வருகின்றது. ஜப்பானில் இருந்தும் சீனாவில் இருந்தும் காசு வருகின்றது. அதன் பின்னர் உங்கள் பிரதேசத்திற்கான தேவைகளுக்கான திட்டத்தை தயாரிப்போம் என தெரிவித்தனர். வாக்கெடுப்பு முடிந்து நாங்கள் வெளியில் வந்தபின்னர் இதுவரை ஒன்றும் இல்லை.

இந்த அரசாங்கம் இங்கு ஒரு கதையும் வெளிநாட்டில் ஒரு கதையும் ஐ.நாவுக்கு ஒரு கதையும் செல்கின்றது. ஆனால் எந்த நாடும் ஒரு நாட்டுக்கு உதவி செய்வதாக இருந்தால் மனித உரிமை மேம்பட்டிருக்கவேண்டும். மக்களுடைய தேவைகள் நிறைவேற்றப்படவேண்டும். ஐநா சாசனத்திற்கு கீழ் உள்ள நாடு அதன் முறைப்படி இயங்காத நிலையில் எவரும் எதையும் செய்யமாட்டார்கள்.

2015 ஆம் ஆண்டு இந்த அரசாங்கம் பல வாக்குறுதிகளை கொடுத்திருந்தது. ஆனால் எதையும் செய்யவில்லை. தற்போதும் ஜனாதிபதி இலங்கைக்குள் எவரும் வரமுடியாது போகமுடியாது என்கின்றார். எங்களுக்குள் எல்லாம் உள்ளது அதன் மூலம் விசாரணை செய்வோம் என்கின்றனர். ரவிராஜ் கொலை வழக்கிற்கு என்ன நடந்தது. குமாரபுரம் வழக்கிற்கு என்ன நடந்தது. எனவே நாம் இதனை ஏற்றமுடியாது. ஆனால் ஐநா. மனித உரிமை ஆணையாளர் தெரிவாக சிலவற்றை கூறிவிட்டார். ஆகவே இந்த விடயத்தில் நாங்கள் எங்களைப்பற்றி சுயவிமர்சனம் செய்யவேண்டிய தேவையுள்ளது.

இந் நிலையில் அரசங்கம் இன்னும் இரண்டு வருடங்களை தனக்கு வழங்குமாறு கேட்கின்றது. அதற்குள் எல்லா பிரச்சனையையும் முடித்துவிடுவோம் என்கின்றது. இரண்டு வருடத்தை கொடுப்பதால் எதுவும் இல்லை ஆனால் கடந்த ஒன்றரை வருடத்தில் என்ன நடந்துள்ளது. ஆகவே ஐ.நா அரசாங்கத்தின் கோரிக்கையை ஏற்று காலத்தை நீடிப்பது இன்னும் நிலைமையை சிக்கலாக்கும். அரசாங்கம் நிபந்தனைகளை செயற்படுத்தாவிட்டால் அதற்கான அழுத்தத்தை நாங்கள் கொடுக்கவேண்டும். அவ்வாறு அழுத்தத்தை கொடுக்காது நிபந்தனை அற்ற ஆதரவையே நாங்கள் கடந்த இரண்டு வருடமாக வழங்குகின்றோம்.

கடந்த வருடம் ஜெனிவாவில் கலப்பு விசாரணைக்கு சொன்று வந்து எதுவும் நடக்கவில்லை. நாங்கள் நிபந்தனையற்ற ஆதவை வழங்கிக்கொண்டு போகமுடியாது. அதேபோல் இன்னும் இரண்டு வருடம் வழங்கப்பட்டால் எல்லா விடயமும் மறக்கப்பட்டு விடும்.

ஆகவேதான் 11 பாராளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டு கால நீடிப்பு வழங்கப்படக்கூடாது என தெரிவித்துள்ளோம். எனினும் சம்பந்தரும் சுமந்திரனும் இதற்கு மாறான நிலைப்பாட்டில் உள்ளனர். தருவதை வாங்கிக்கொள்வோம், ஆதரவை வழங்குவதுதான் இராஜதந்திரமென்றால் அது தேவையில்லை என தெரிவித்தார்.

N5