செய்திகள்

ஐ.நா செயலாளர் நாயக்தின் கவனத்தையீர்க்கும் போராட்டம்: த.தே.ம.மு. அழைப்பு

ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம், பான்கீ மூன் அவர்கள் நாளை வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்யும் போது, கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்றை நடத்துவதற்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி அழைப்பு விடுத்துள்ளது.

யாழ். பொது நூலகம் முன்பாக நாளை காலை 8.30 மணிக்கு இப்போராட்டம் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் அவ்வமைப்பின் செயலாளர் செல்வராஜா கஜேந்திரன் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

“யுத்தம் முடிந்து ஏழு ஆண்டுகளாகியும் மீள் குடியேற அனுமதிக்கப்படாதுள்ள மயிலிட்டி, பலாலி உள்ளிட்ட வலிவடக்கு, கேப்பாபிலவு உட்பட வடக்கு கிழக்கு பிரதேசங்களில் இடம்பெயர்ந்த மக்களின் உடனடி மீள் குடியேற்றத்தை வலியுறுத்தியும்!

போரின் போதும், அதற்குப் பின்னரும் கடத்தப்பட்டும், சரணடைந்தபின்னர் காணாமல் போகச் செய்யப்பட்டவர்களுக்கு என்ன நடந்ததென கண்டறிய வலியுறுத்தியும்!

அரசியல் கைதிகள் அனைவரையும் நிபந்தனையின்றி உடன் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும்!

போர்க்குற்றங்கள், இனவழிப்புக் குற்றங்கள் தொடர்பில் சர்வதேச பக்கச் சார்பற்ற விசாரணை நடாத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியும்!

உட்பட தமிழ் மக்கள் எதி;நோக்கிவரும் பிரச்சினைகளுக்கு ஐ.நா நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியும் இந்தக் கவனயீர்ப்பு போராட்டம் நடைபெறவுள்ளது.

இடம்பெயர்ந்த மக்கள் அமைப்புக்கள், காணாமல் போகச் செய்யப்பட்டவர்களின் உறவினர்களது அமைப்புக்கள், போரில் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் அமைப்புக்கள் உள்ளிட்ட பொது அமைப்புக்கள் இணைந்து நடாத்தவுள்ள மேற்படி போராட்டத்தில் அனைவரையும் கலந்து கொண்டு ஆதரவு வழங்குமாறு அழைக்கின்றோம்.”

-06