ஐ.நா. விசேட அறிக்கையாளர்கள் இருவர் இலங்கை வருகின்றனர் : உயர் ஸ்தானிகராலயம் அறிவிப்பு
இலங்கையில் இழைக்கப்பட்டதாகக் கூறப்படும் போர்க்குற்றங்கள் உள்ளிட்ட மனித உரிமை மீறல்கள் பற்றிய குற்றச்சாட்டுகள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்கு உள்ளக நீதி விசாரணைப் பொறிமுறைகளை அமைக்கும் நடவடிக்கைகள் இலங்கை அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டுவரும் நிலையில், ஐ.நா.வின் விசேட அறிக்கையாளர்கள் இருவர் எதிர்வரும் ஏப்ரல் மாத இறுதியில் இலங்கை வரவுள்ளனர்.
நீதிபதிகள் மற்றும் சட்டத்தரணிகளின் சுயாதீனம் பற்றிய ஐ.நா. விசேட அறிக்கையாளரான மோனிகா பின்டோ சித்திரவதை மற்றும் ஏனைய கொடூரமான, மனிதநேயமற்ற அல்லது இழிவுப்படுத்தும் விதத்தில் நடத்துதல் அல்லது தண்டனை பற்றிய ஐ.நா. விசேட அறிக்கையாளர் ஜுவான் ஈ. மென்டஸ் ஆகிய இருவருமே ஏப்ரல் மாத இறுதியில் இலங்கை வரவுள்ளதாக மனித உரிமைகளுக்கான ஐ.நா. உயர்ஸ்தானிகர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இவ்விரு விசேட அறிக்கையாளர்களும் கூட்டு விஜயமாகவே இலங்கை வரவுள்ளதுடன், எதிர்வரும் ஏப்ரல் மாதம் 29 ஆம் திகதி தொடக்கம் மே மாதம் 7 ஆம் திகதி வரை அவர்கள் இலங்கையில் தங்கியிருந்து தமது பணிகளை மேற்கொள்வார்கள் என்றும் ஐ.நா. உயர்ஸ்தானிகர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
மனித உரிமை மீறல்கள் தொடர்பான இலங்கையின் நீதி விசாரணைப் பொறிமுறையில் பொதுநலவாய மற்றும் ஏனைய வெளிநாட்டு நீதிபதிகள், அங்கீகரிக்கப்பட்ட சட்டத்தரணிகள் மற்றும் விசாரணையாளர்கள் உள்வாங்கப்பட வேண்டியதன் முக்கியத்துவம் 2015 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் ஜெனீவாவில் நடைபெற்ற ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட இலங்கை தொடர்பான தீர்மானத்தில் வலியுறுத்தப்பட்டிருந்தது. அமெரிக்காவின் பிரதான அனுசரணையில் சமர்ப்பிக்கப்பட்டிருந்த இந்தத் தீர்மானத்திற்கு இலங்கையும் இணை அணுசரணை வழங்கியிருந்தது.
இந்த நிலையில், இம் மாத ஆரம்பத்தில் 4 நாட்கள் உத்தியோகப்பூர்வ விஜயமாக இலங்கை வந்திருந்த மனித உரிமைகளுக்கான ஐ.நா. உயர்ஸ்தானிகர் செயிட் ராட் அல் ஹுசைன், மனித உரிமை மீறல்கள் பற்றிய குற்றச்சாட்டுகள் தொடர்பில் முறையான நீதி விசாரணை முறைமை தொடர்பான தீர்மானங்களை எடுப்பது இலங்கையின் இறையாண்மைக்குரிய உரிமை என்றும் தங்களால் பரிந்துரைகளையே முன்வைக்க முடியும் என்றும் தெரிவித்திருந்ததுடன், எனினும் இலங்கை தொடர்பான ஐ.நா. மனித உரிமைகள் பேரவைத் தீர்மானத்தின் அமுலாக்கம் தொடர்பில் தமது அலுவலகம் தொடர்ந்தும் கண்காணிக்கும் என்றும் குறிப்பிட்டிருந்தார்.
அத்துடன், நீதி விசாரணைப் பொறிமுறை தொடர்பில் இலங்கை எடுக்கும் தீர்மானத்தின் பெறுபேறுகள் பாதிக்கப்பட்ட மக்கள் திருப்தியடைவதாக இருக்க வேண்டுமென்றும் ஐ.நா. உயர்ஸ்தானிகர் இதன்போது சுட்டிக்காட்டி வலியுறுத்தியிருந்தார்.
இதேநேரம், மனித உரிமைகள் பேரவையின் இலங்கை தொடர்பான தீர்மானத்தின் பிரகாரம், மனித உரிமைகளுக்கான ஐ.நா. உயர்ஸ்தானிகர் அல் ஹுசைன் எதிர்வரும் ஜூன் மாதம் நடைபெறவுள்ள மனித உரிமைகள் பேரவையின் 32 ஆவது அமர்வில் மேற்படி தீர்மானத்தின் அமுலாக்கம் தொடர்பில் வாய்மூல மேம்படுத்தல் விளக்கமளிப்பொன்றை வழங்கவுள்ளதுடன், 2017 ஆம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெறவுள்ள 34 ஆவது அமர்வில் விரிவான அறிக்கையொன்றையும் சமர்ப்பிக்கவுள்ளார்.
இவ்வாறான நிலையிலேயே ஐ.நா. வின் விசேட அறிக்கையாளர்கள் இருவரும் ஏப்ரல் மாத இறுதியில் இலங்கை வரவுள்ளதுடன், 9 நாட்கள் இங்கு தங்கியிருந்து தங்களது கண்காணிப்பு மற்றும் மதிப்பீட்டு நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ளனர். இந்தக் கூட்டு விஜயத்தின் போது இருவரும் இலங்கையின் உள்ளக நீதி விசாரணைப் பொறிமுறை உள்ளிட்ட விடயங்கள் பற்றி ஆராய்வார்கள் என்பதுடன், வடக்கு உள்ளிட்ட பல பகுதிகளுக்கும் சென்று பல்வேறு தரப்பினரையும் சந்திப்பார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இதில், நீதிபதிகள் மற்றும் சட்டத்தரணிகளின் சுயாதீனம் பற்றிய ஐ.நா. விசேட அறிக்கையாளரான மோனிகா பின்டோ இந்தப் பதவிக்கு நியமிக்கப்படுவதற்கு முன்னதாக சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கான நியமனங்கள் பற்றிய ஆலோசனைக் குழுவில் பணியாற்றினார் என்பதுடன், சித்திரவதை மற்றும் ஏனைய கொடூரமான, மனிதநேயமற்ற அல்லது இழிவுபடுத்தும் விதத்தில் நடத்துதல் அல்லது தண்டனை பற்றிய ஐ.நா. விசேட அறிக்கையாளர் ஜுவான் ஈ. மென்டஸ் இந்தப் பதவிக்கு நியமிக்கப்படுவதற்கு முன்னதாக சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் வழக்கறிஞருக்கான விசேட ஆலோசகராகவும் சர்வதேச சட்டத்தரணிகள் அமைப்பு மனித உரிமைகள் நிறுவனத்தின் இணைத் தலைவராகவும் பதவிகளை வகித்துள்ளார் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.




