ஒரு பரந்த ஜக்கிய முன்னணிக்கான சாத்தியப்பாடு இருக்கின்றதா?
யதீந்திரா
ஒரு பரந்த ஜக்கிய முன்னணி தேவையான ஒன்றா என்று கேட்டால் – அதற்கான பதில் நிச்சயம் தேவை என்பதுதான். ஆனால் அதற்கான சாத்தியப்பாடு இருக்கின்றதா என்று கேட்டால், அதற்கான பதில் தெளிவற்றதாகவே இருக்கும். பெரும்பாலும் நம்பிக்கையீனமே வெளிப்படும். இதுதான் இன்றைய தமிழ் அரசியல் நிலைமை. ஏன் இவ்வாறானதொரு நிலைமை என்று கேட்டால் அதற்கு பதில் பலரிடடும் உண்டு ஆனால் அதனை எப்படி மாற்றியமைக்கலாம் என்று கேட்டால் எவரிடமும் பதிலில்லை.
2009இற்கு பின்னரான கடந்த ஒரு தசாப்தகால தமிழ் அரசியல் அணுகுமுறை முற்றிலுமாக தோல்வியடைந்துவிட்டது. 2009இற்கு பின்னரான தமிழ் அரசியல் அணுகுமுறையை இரண்டு காலகட்டங்களாக நோக்கலாம். ஓன்று, 2010 ஜனாதிபதி தேர்தலுக்கு பின்னரான காலகட்டம். இந்தக் காலகட்டம் முற்றிலும் மகிந்த ராஜபக்சவின் ஆளுகைக்குள் இருந்தது. இந்தக் காலகட்டத்தில்தான் அமெரிக்கா இலங்கையின் மீது அழுத்தங்களை பிரயோகித்தது. இறுதி யுத்தத்தின் போது நிகழ்ந்ததாக கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் பொறுப்புக் கூறுமாறு வலியுறுத்தப்பட்டது. இந்த அழுத்தங்களின் பின்னால் செல்வதே கூட்டமைப்பின் இக்காலகட்ட அரசியலாக இருந்தது. இதனை பிறிதொரு வகையில் கூறுவதானால், கூட்டமைப்பின் இக்காலகட்ட அரசியல் என்பது முற்றிலும் சர்வதேச சமூகம் என்னும் ஒரு சொல்லுடன் கழிந்தது. ஆனாலும் ராஜபக்ச அமெரிக்க அழுத்தங்களுக்கு பணியவில்லை. அதனை உலகாளாவிய முரண்பாடுகளின் வழியாக கையாள முடியுமென்று நம்பினார். அதாவது, அமெரிக்க அழுத்தங்களை எதிர்கொள்வதற்கு சீனாவுடன் நெருங்கிச் செல்வதை ஒரு உபாயமாகக் கைக்கொண்டார். அமெரிக்க அழுத்தங்கள் அதிகரித்த போது, இலங்கைக்கும் சீனாவுக்குமான நெருக்கமும் அதிகரித்தது. இலங்கையுடனான சீனாவின் நெருக்கம் அதிகரித்துச் செல்வது, இந்தியாவின் கரிசனைக்குரிய ஒன்றானது. இவ்வாறானதொரு சூழலில்தான் 2015இல் ஆட்சி மாற்றமொன்று இடம்பெற்றது. இந்த ஆட்சி மாற்றத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிரதான பங்குவகித்தது.
2015இலிருந்து 2019 வiரான காலகட்டம் இரண்டாவது காலகட்டமாகும். இக்காலகட்டம் முற்றிலும் நம்பிக்கையுடன் அணுகப்பட்டது. மைத்திரி-ரணில் தேசிய அரசாங்கம் இலங்கையின் அரசியல் வரலாற்றில் அபூர்வமான அரசாங்கம் என்று புகழப்பட்டது. அதிகம் இந்தப் புகழ்ச்சி வேலைகளில் கூட்டமைப்பே ஈடுபட்டது. இக்காலகட்டத்தில் கூட்டமைப்பு அரசாங்கத்திற்கு வெளியில் இருக்கவில்லை மாறாக, அரசாங்கத்தின் ஒரு அங்கமாகவே செயற்பட்டது. தாங்களும் அரசாங்கமும் இணைந்து ஒரு அரசியல் தீர்வை காண்போம் என்பதே கூட்டமைப்பின் பிரச்சாரமாக இருந்தது. இவ்வாறானதொரு சூழலில்தான், தேசிய அரசாங்கத்திற்குள் முரண்பாடுகள் தீவிரமடைந்தன. அதன் விளைவாக ரணில் – மைத்திரி பிளவு ஏற்பட்டது. இதன்போது கூட்டமைப்பு ரணில் விக்கிரமசிங்கவின் அணியாக மாறியது. இந்த இடத்தில் ஒரு விடயத்தை நோக்க வேண்டும். ஆரம்பத்தில் மகிந்த ராஜபக்சவிற்கு எதிராக மைத்திரியை ஆதரித்த கூட்டமைப்பு, பின்னர் மைத்திரியை எதிர்த்து ரணிலை ஆதரிக்கின்றது. மைத்திரி-ரணில் மோதலின் உச்சமாகவே ஒக்டோபர் 2018இல், ரணிலை மைத்திரி பதவிநீக்கி, மகிந்த ராஜபக்சவை பிரதமராக நியமிக்கின்றார். இது அரசியலமைப்பிற்கு முரணானது என்னும் அடிப்படையில் கூட்டமைப்பின் பேச்சாளர் மதியாபரனம் ஆபிரகாம் சுமந்திரன் மைத்திரியை எதிர்த்து செயற்பட்டார்.

உண்மையில் கூட்டமைப்பு இந்த இடத்தில் தமிழ் மக்களின் பிரதிநிதிகளாக நடந்துகொள்ளவில்லை. ஜக்கிய தேசிய கட்சியின் ஒரு அங்கமாகவே செயற்பட்டிருந்தது. தேசிய அரசாங்கம் எப்போது தோல்வியடைந்ததோ அப்போதே கூட்டமைப்பின் அனைத்து முயற்சிகளும் தோல்வியடைந்துவிட்டன. அதன் பின்னர் கூட்டமைப்பினால் முன்னெடுப்பட்ட சில விடயங்கள் பற்றி ஒரு வரியில் கூறுவதனால், அவை அனைத்தும் கூட்டமைப்பின் பெயரால் ஒரு சில தனிநபர்களின் லாபங்களுக்காக மேற்கொள்ளப்பட்டவைகளாகும்.
இந்த பின்புலத்தில் நோக்கினால் இப்போது மூன்றாவது காலகட்டம். இந்தக் காலகட்டத்தை எவ்வாறு தமிழர் தரப்பு எதிர்கொள்ளப் போகின்றது? முதல் இரண்டு கட்டங்களும் கூட்டமைப்பினால் மட்டுமே iகாயளப்பட்டது. அதில் கூட்டமைப்பு முற்றிலும் தோல்வியடைந்திருக்கின்றது. இவ்வாறானதொரு நிலையில் மூன்றாவது காலகட்டத்தை கையாளுவதற்கான ஏகபோக அனுமதியை கூட்டமைப்பிடம் கொடுக்கலாமா? அது புத்திசாதுர்யமான அரசியல் அணுகுமுறையாக இருக்குமா? ஓன்றில் இந்தக் காலகட்டத்தை பல தரப்புக்களாக iகாயள வேண்டும் அல்லது ஒரு பரந்தளவிலான ஜக்கிய முன்னணி தந்திரோபாயத்தின் ஊடாக கையாள வேண்டும். ஏனெனில் இதுவரை கால தமிழ் அரசியல் வரலாற்றின்படி, ஒற்றைத் தன்மையான அணுகுமுறைகளே ஆதிக்கம் செலுத்தியிருக்கின்றன. ஆனால் அந்த அணுமுறை மீண்டும் மீண்டும் தோல்வியையே சந்தித்திருக்கின்றது. இவ்வாறானதொரு சூழலில்தான் கடந்த பத்து வருடங்களாக கூட்டமைப்பு தனித்து அரசியலை கையாண்டுவந்தது ஆனால் அனைத்துமே படுதோல்வி. இவ்வாறானதொரு பின்னணியில், கூட்டமைப்பு தனித்து அரசியலை கையாளுமாயின் அது இருக்கும் நிலைமைகளை மேலும் சிக்கலாக்கும். அதே வேளை கூட்டமைப்பு குறிப்பாக தமிழரசு கட்சி ஜக்கிய தேசியக்கட்சியுடன் அதிகம் அடையாளப்படுத்தப்பட்ட ஒரு கட்சி. எனவே அதன் தலைமையில் புதிய ஆடசியாளர்களை எதிர்கொள்ள முடியாது. அப்படியாயின் இதனை எவ்வாறுதான் எதிர்கொள்ளுவது? சில தெரிவுகள் உண்டு.
தெரிவு ஒன்று : விக்கினேஸ்வரன் தலைமையில் ஒரு வலுவான கூட்டை ஏற்படுத்திய பின்னர், கூட்டமைப்புடன் வலுவானதொரு உடன்பாட்டை ஏற்படுத்திக் கொள்வதன் ஊடாக, ஒரு ஜக்கிய முன்னியாக செயற்பட முடியும். இதன் மூலம் ஒரு கட்சி தனித்து முடிவெடுப்பதை தடுக்கலாம். புதிய ஆட்சியாளர்களை எதிர்கொள்வதற்கான ஒரு உபாயம் என்னும் வகையிலேயே இந்த ஜக்கிய முன்னனியை நோக்க வேண்டும். ஒரு கட்சியின் ஆதிக்கத்தை இல்லாதொழிக்கும் வகையில் குறித்த ஜக்கிய முன்னணி கட்டாயமாக பொதுச் சின்னம் ஒன்றின் மூலமே தேர்தலை எதிர்கொள்ள வேண்டும். இது தொடர்பில் ஒரு வெகுசன அபிப்பிராயத்தை ஏற்படுத்த வேண்டும்.
தெரிவு இரண்டு : பொதுச் சின்னம் மற்றும் வலுவான உடன்பாட்டிற்கு தமிழரசு கட்சி உடன்படாத நிலையில், ஏனையவர்கள் அனைவரும் ஓரணியாக இணையும் வகையில் ஒரு ஜக்கிய முன்னனியை ஏற்படுத்திக் கொள்ளலாம். ஒரு ஜக்கிய முன்னனியை ஏற்படுத்திக் கொள்ள வேண்டுமாயின் சில அடிப்படையான விட்டுக் கொடுப்புக்கள் அனைவருக்கும் அவசியப்படும். அதே வேளை ஒருவரது கடந்தகால நிலைப்பாடுகளை அடிப்படையாகக் கொண்டு நிகழ்கால சவால்களை நோக்கக் கூடாது. அவ்வாறான புரிதல் இருந்தால் மட்டுமே இவ்வாறானதொரு ஜக்கிய முன்னணி சாத்தியப்படும்.
தெரிவு மூன்று : கூட்டமைப்பிலுள்ள கட்சிகள் இதற்கு உடன்படாத பட்சத்தில், விக்கினேஸ்வரனது தலைமையை ஏற்றுக்கொள்ளக் கூடிய கட்சிகள் ஒரணியில் வருவதன் ஊடாக, கூட்டமைப்பிற்கு மாற்றான ஒரு தலைமையை ஏற்படுத்தலாம். இதன் மூலமும் ஒரு கட்சி தனித்து விடயங்களை கையாளுவதை தடுக்க முடியும். ஒரு கட்சி தனித்து விடயங்களை கையாளுமாயின் அது எப்போதும் மோசமான விளைவுகளையே தரும்.
என்னதான் ஜக்கிய முன்னணி, மாற்றுத் தலைமை தொடர்பில் விவாதங்கள் செய்தாலும் அதன் அரசியல் பெறுமதி அதன் தேர்தல் வெற்றியில்தான் தங்கியிருக்கின்றது. எனவே எந்தவொரு உக்தியும் தேர்தலில் வெற்றியை கொடுக்கக் கூடியதாக இருக்க வேண்டும். வெறும் கோட்பாடுகளையும் சுலோகங்களையும் வைத்து தேர்தலை எதிர்கொள்ள முடியாது. ஏனெனில் தேர்தல் வெற்றியே எந்தவொரு கூட்டுக்கும் அரசியல் ரீதியில் பெறுமதியை வழங்குகின்றது. எனவே ஜக்கிய முன்னணி உபாயம் நிச்சயம் தேர்தலில் வெற்றியை பெறுவதையும் இலக்காகக் கொண்டிருக்க வேண்டும். உதாரணமாக விக்கினேஸ்வரன் தேர்தலில் தோல்வியடைவாராக இருந்தால் அதன் பின்னர் அவரது கருத்துக்களை அரசாங்கமும் பிறநாடுகளும் கருத்தில் கொள்ளப் போவதில்லை. எனவே ஜக்கிய முன்னணி உபாயம் விக்கினேஸ்வரனை தோற்கடித்துவிடவும் கூடாது. அதற்கு ஏற்றவாறு ஜக்கிய முன்னணிக்கான உபாயம் வகுக்கப்பட வேண்டும். உதாரணமாக சுமந்திரனின் அழைப்பை ஏற்று விக்கினேஸ்வரன் கூட்டமைப்புடன் இணைவாராயின் அவர் நிச்சயம் தேர்தலில் தோல்வியடைவார். எனவே அந்த அழைப்பை சாதகமாக பரிசீலியுங்கள் என்று எவரேனும் விக்கினேஸ்வரனிடம் கூறுவார்களாயின் அவர்கள் விக்கினேஸ்வரனை தோற்கடிக்கும் வேலைத்திட்டமொன்றில் இருப்பவர்களாவர். ஏனெனில் விக்கினேஸ்வரனை உள்ளுக்குள் வைத்துக் கொண்டே அவரை தோற்கடிக்கும் உபாயம் பற்றியே தமிழரசு கட்சியினர் சிந்திப்பர். எனவே ஜக்கிய முன்னணி தொடர்பில் சிந்திக்கும் தரப்பினர் தேர்தல் வெற்றியை கருத்தில்கொண்டே சிந்திக்க வேண்டும். வெறும் புரிந்துனர்வு உடன்பாடுகளும், புலமைத்துவ விளக்கங்களும் தேர்தலில் வெற்றியை ஏற்படுத்தாது. எனவே இது தொடர்பில் ஈடுபடும் புத்திஜிவிகள் என்போர் புதிய அரசியல் கூட்டுக்கள் தொடர்பில் சிந்திக்கும் போது, தேர்தல் வெற்றியை மறந்துவிடக் கூடாது.




