செய்திகள்

ஓமந்தை சோதனை சாவடி காணியை விடுவிக்க இராணுவத்தினர் இணக்கம்: பதிலீடாக 6 ஏக்கர் காணி இராணுவத்திற்கு..

ஓமந்தை சோதனைச் சாவடி காணியை விடுவிப்பதற்கு இராணுவத்தினர் இணக்கம் தெரிவித்துள்ளனர். பதிலீடாக இராணுவத்தினருக்கு ஏ9 வீதியில் வேறு 6 ஏக்கர் காணி வழங்குவதற்கு மாவட்ட அரசாங்க அதிபர் ரோஹண புஸ்பகுமார இணக்கம் தெரிவித்துள்ளார்.

வவுனியா மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இன்று ஓமந்தைச் சோதனைச்சாவடி அமைந்திருந்த இறம்பைக்குளம் காணி உரிமையாளர்களுக்கும் மேலதிக அரசாங்க அதிபருக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றது. இதன்போதே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மேலும் தெரியவருவதாவது,

மேலதிக அரசாங்க அதிபர் தலைமையில் மாவட்ட செயலகத்தில் இராணுவத்தினர் நிலைகொண்டுள்ள ஓமந்தை, இறம்பைக்குளம் காணி உரிமையாளர்களுடன் சந்திப்பு இடம்பெற்றது. இதன்போது ஓமந்தை சோதனைச்சாவடி அமைந்திருந்த 06 ஏக்கர் காணியை எடுத்து விட்டு மிகுதி காணியை விடுவிக்க இராணுவம் இணங்கியுள்ளதாக மேலதிக அரசாங்க அதிபர் திரேஸ்குமார் மக்களிடம் தெரிவித்திருந்தார்.

இதன்போது கருத்து தெரிவித்த மக்கள் அப்பகுதியில் சுமார் 65 குடும்பங்களுக்கு சொந்தமான காணி உள்ளதாகவும் கடந்த 23 ஆண்டுகளாக இராணுவத்தினர் அதனை தம்வசப்படுத்தி வைத்திருப்பதாகவும் தெரிவித்தனர். தமக்கு தமது எல்லோரது காணியும் முழுமையாக விடுவிக்கப்பட வேண்டும் என கோரியிருந்தனர்.

இதனையடுத்து குறித்த விடயம் தொடர்பில் அப்பகுதி காணி உரிமையாளர்கள் வன்னிப் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் மற்றும் வடமாகாண சபை உறுப்பினர் ம.தியாகராசா ஆகியோரது கவனத்திற்கு இந்த விடயத்தை கொண்டு வந்ததையடுத்து, மாவட்ட செயலகத்திற்கு வருகை தந்த அவர்கள் அம் மக்களுடனும் மாவட்ட அரசாங்க அதிபர் ரோஹண புஸ்பகுமார, மேலதிக அரசாங்க அதிபர் திரேஸ்குமார் ஆகியோருடன் கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.

இக்கலந்துரையாடல் முடிவடைந்த பின்னர் கருத்து தெரிவித்த சிவசக்தி ஆனந்தன் எம்.பி, ஓமந்தை சோதனைச்சாவடி அமைந்திருந்த இறம்பைக்குளம் காணியை முழுமையாக விடுவிக்க இராணுவத்தினர் இணங்கியுள்ளதாகவும், அவர்களுக்கு பதிலீடாக 06 ஏக்கர் காணி ஏ9 வீதியில் வழங்கவேண்டும் எனவும் அரசாங்க அதிபரிடம் தெரிவித்திருக்கின்றனர். இராணுவத்திற்கு ஏ9 வீதியில் வவுனியா வடக்கு பிரதேச செயலக பிரிவுக்கட்பட்ட வேறு 06 ஏக்கர் காணியை வழங்குவதற்கு அரச அதிபர் இணக்கம் தெரிவித்துள்ளதுடன் மக்களின் காணியை முழுமையாக விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்துள்ளதாகவும் தெரிவித்தார்.

IMG_0396

N5