கடும் வாக்குவாதங்களுடன் இடம்பெற்ற கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம்
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் நேற்று மாலை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமாகிய இரா.சம்பந்தன் தலைமையில் கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் இடம்பெற்றது. கடும் வாக்குவாதங்களுடன் நடைபெற்ற இக்கூட்டத்தில் அரசியல் தீர்வு முயற்சிகள், அரசியலமைப்பு சீர்திருத்தம் என்பன குறித்து விரிவாக ஆராயப்பட்டது.
இன்றுமாலை 5.00மணிமுதல் 8.30மணிவரை நடைபெற்ற இக் கூட்டத்தில் தமிழரசுக் கட்சியின் சார்பில் எம்.ஏ.சுமந்திரன், மாவை சேனாதிராஜா, புளொட் சார்பில் தர்மலிங்கம் சித்தார்த்தன், வி.ராகவன், ஈ.பி.ஆர்.எல்.எவ் சார்பில் சுரேஸ் பிரேமசந்திரன், சிவசக்தி ஆனந்தன், இரா.துரைரெட்ணம், சர்வேஸ்வரன், டெலோவின் சார்பில் என்.சிறீகாந்தா, கே.கருணாகரம் (ஜனா), எம்.கே.சிவாஜிலிங்கம், ஹென்றி மகேந்திரன் ஆகியோர் கலந்துகொண்டார்கள்.
இன்றைய கூட்டத்தில் அரசியலமைப்பு மாற்றம் மற்றும் அரசியல் தீர்வு சம்பந்தமான விடயம் முழுமையாக ஆராயப்பட்டது. முக்கியமாக மக்களிடமும், தமிழ்க் கட்சிகளிடமும் இருக்கின்ற சந்தேகங்கள் குறித்தும் அரசாங்கத் தரப்பைச் சார்ந்த உயர் தலைவர்களே முரண்பட்ட கருத்துக்களைக் கூறிக் கொண்டிருப்பது தொடர்பிலும் விரிவாக கலந்துரையாடப்பட்டது.
கலந்துரையாடலை ஆரம்பித்துவைத்து உரையாற்றிய வன்னி மாவட்ட எம்.பி. சிவசக்தி ஆனந்தன் தனது உரையில் கூறியதாவது:
“இணைந்த வடக்கு கிழக்கில் சமஷ்டி முறையிலான சுயநிர்ணய ஆட்சியை உருவாக்கி தமிழ் மக்களின் அபிலாஷைகள் உரிமைகள் ஆகியவற்றை பெற்றுக்கொடுப்போம் என 2013ஆம் ஆண்டு நடைபெற்ற மாகாண சபை தேர்தலிலும், 2015ஆம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலிலும் விஞ்ஞாபனங்களை மக்களிடத்தில் வழங்கி அதற்கே ஆணை பெற்றுள்ளோம்.
அவ்வாறிருக்கையில் தற்போது புதிய அரசியலமைப்புக்கான பணிகள் இடம்பெறுவதாக கூறப்படுகின்றது. ஆதில் என்ன நடக்கின்றது என்பது தெரியாத நிலையில் மக்கள் மத்தியில் பல சந்தேகங்களும் விமர்சனங்களும் காணப்படுகின்றன. குறிப்பாக ஒற்றையாட்சிக்குள் தீர்வை எட்டப்போகின்றோம். வடக்கு கிழக்கு இணைப்பில்லை என்ற விடயங்கள் அதிகம் பேசப்படுகின்றது. ஆகவே இந்த விடயங்கள் தொடர்பில் நாம் மக்கள் எமக்கு வழங்கிய ஆணையை மீற முடியாது.
சிங்கள தலைமைகள் ஒரு நிலைப்பாட்டில் தான் இருக்கின்றன. சமஷ்டியை ஏற்கமுடியாது. ஒற்றையாட்சிக்குள் தான் தீர்வு போன்ற விடயங்களை விட்டுக்கொடுக்காது இருக்கின்றன. அவ்வாறிருக்கையில் நாம் மக்கள் வழங்கிய ஆணையிலிருந்து மாறியுள்ளோம் எனில் நடைபெறவிருக்கும் உள்ளுராட்சி தேர்தலில் மாறியிருக்கும் எமது நிலைப்பாட்டை வெளியிட்டு மீண்டும் மக்களிடத்தில் ஆணைகோரவேண்டும். அதற்கு அவர்கள் அங்கீகாரமளிப்பார்களாயின் நாம் அதன்பிரகாரம் செல்ல முடியும் என்றார்.
சுரேஸ் பிரேமச்சந்திரன் இதனையடுத்து உரையாற்றிய போது கூறியதாவது:
“சிவசக்தி ஆனந்தன் கூறும் விடயத்துடன் நான் முழுமையாக இணங்குகின்றேன். பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் வடக்கு கிழக்கு இணைப்பு தற்போதைக்கு சாத்தியமில்லை எனக்கூறுகின்றார். ஒற்றையாட்சியை கைவிட முடியாது என ஜனாதிபதியும், பிரதமரும் வெளிப்படையாகவே கூறுகின்றனர். அதேநேரம் பௌத்த மதகுருமாரும் ஒற்றையாட்சியை கைவிட முடியாதென வலியுறுத்துகின்றனர்.
கடந்த காலங்களில் சிங்களத் தலைவர்கள் எவ்வாறு பெரும்பான்மை மக்களை வழிநடத்தினார்களோ அவ்வாறே தற்போதும் வழிநடத்துகின்றார்கள். முகிந்த ராஜபக்ஷ எவ்வாறு ஒற்றை ஆட்சி, வடக்கு கிழக்குவிடயங்களில் இறுக்கமாக இருந்தாரோ அதேபோன்று தான் தற்போதையவர்களும் இருக்கின்றார்கள்.
அவ்வாறிருக்கையில் அவர்களிடத்தில் எவ்வாறு நியாயமான தீர்வொன்றை எதிர்பார்க்கமுடியும். ஆகவே அரசியலமைப்பு உருவாக்கத்தின் பொது ஒற்றையாடசி முறை என்பது முழுமையாக நீக்கப்படவேண்டும். சமஷ்டி முறைமையிலான ஆட்சி என்பது குறிப்பிடப்பட்டு வடக்கு கிழக்கு இணைப்பு தொடர்பில் உறுதியாக தெரிவிக்கப்படவேண்டும்.
அதேநேரம் மிக முக்கியமாக இறைமை தொடர்பான விடயத்தை கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது. ஒற்றை ஆட்சிக்குள் அதிகாரப்பகிர்வு என்பது சாத்தியமாகாது. உண்மையிலேயே அதிகாரப்பரவலாக்கல் பற்றி பேசப்படுகின்றதா இல்லை அதிகாரப்பகிர்வு பற்றி பேசப்படுகின்றதா என்ற கேள்விகள் எழுக்கின்றன. ஆகவே அவை தொடர்பாக தெளிவுபடுத்தப்பட வேண்டும்.
சுமந்திரன் எம்.பி. இதற்குப் பதிலளித்து உரையாற்றிய போது தெரிவித்தது:
“தற்போது புதிய அரசியலமைப்புக்குரிய செயற்பாடுகள் இடம்பெற்று வருகின்றன. கடந்த மாதம் வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கை வெளியிடப்படுவதாக இருந்தது. இருப்பினும் மக்கள் விடுதலை முன்னணியின் கால அவகாசக் கோரிக்கையால் நாம் அதனை வெளியிடமுடியாது போனது. ஆவ்வாறு வெளிப்படுத்தப்பட்டிருந்தால் இந்த வினாக்களுக்கான விடைகள் கிடைக்கப்பெற்றிருக்கும்.
தற்போது வழிநடத்தல் குழுவானது தேர்தல் முறைமை, காணி, ஆட்சிமுறைமை உள்ளிட்ட ஆறு முக்கியமான விடயங்களை தன்னகத்தே வைத்துள்ளது. அடிப்படை உரிமை, சட்டம் ஒழுங்கு, மத்திக்கும் மகாணத்திற்கும் இடையிலான உறவு, பொதுநிதி உள்ளிட்ட ஆறு விடயங்கள் குறித்து உபகுழுக்கள் நியமிக்கப்பட்டு அவற்றின் அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.
உபகுழுக்களின் அறிக்கையில் கூறப்பட்டுள்ள விடயங்கள் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடுகள் உள்ளிட்ட அனைத்து விடயங்களையும் உள்ளடக்கியே இடைக்கால அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. அதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சமஷ்டிக் கோரிக்கையும் உள்ளடக்கப்பட்டுள்ளது.
அதேபோன்று ஏனைய தரப்பினரின் கருத்துக்களும் உள்ளடக்கப்பட்டுள்ளன. ஆந்த அறிக்கை வெளியிடப்படுவதற்காக வழிநடத்தல் குழவின் அமர்வு இடம்பெற்றபோது ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் இரண்டு உறுப்பினர்கள் மீண்டும் கால அவகாசத்தை கோரியமையால் எதிர்வரும் 10ஆம் திகதியும் அந்தஅறிக்கை வெளியிட முடியாது போயுள்ளது.
அதேநேரம் ஒற்றையாட்சியை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் எதிர்க்கின்றார். எம்முடனான சந்திப்பின் போது அவர் அதனை பகிரங்;கமாகவே கூறியிருக்கின்றார். ஆது அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் நன்கு தெரியும். ஒற்றையாட்சி என்பது சிங்கள மொழியில் ஏகிய ரஜய எனவும், ஆங்கில மொழியில் யுனிற்றரி எனவும் பொருள் படுகின்றது.
உண்மையிலேயே சிங்களத்தில் ஏகிய ரஜய என்பது ஒருமித்த அல்லது ஐக்கிய என்று தான் பொருள்படுகின்றது. ஆங்கிலத்தில் யுனிற்றரி என்பது தான் தமிழ் மொழியில் ஒற்றையாட்சி என ஆட்சி முறையை குறிக்கும் சொல்லாக இருந்து வருகின்றது. ஆகவே சிங்க மொழியில் ஏகிய ரஜய என்ற சொற்பதத்துடன் அது ஆட்சி முறையைக் குறிக்கும் சொல் அல்ல என்ற அடிக்குறிப்பை இடவேண்டும் என்பதே எமது நிலைப்பாடாகும்.
பெரும்பான்மை மக்கள் ஏகிய ரஜய என்ற சொற்பதத்தை நீக்க முற்படுகையிலேயே தான் அச்சப்படுகின்றார்கள். நாடு பிளவுபட்டுவிடும் என கோஷமெழுப்புகின்றார்கள். ஆகவே நாம் அவ்வாறான அடிக்குறிப்பை சிங்கமொழியில் குறிப்பிட வலியுறுத்தியுள்ளோம்” என்று சுமந்திரன் தெரிவித்தார்.
வடகிழக்கு இணைந்த மாகாணத்தில்தான் ஒரு தீர்வைக் காணமுடியும் என்றும் அதேநேரத்தில் ஒற்றையாட்சி அமைப்புக்குள் ஒரு நியாயமான தீர்வைக் காணமுடியாது என்றும் அங்கு பேசிய அனைவருமே வலியுறுத்தினார்கள். அத்துடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பும் அரச கட்சிகளும் பேச்சுவார்த்தை நடாத்தி ஒரு உடன்பாட்டிற்கு வந்தால்தான் ஒரு நியாயமான தீர்வை எட்ட முடியும் என்றும், நடவடிக்கைக் குழுவிலோ அல்லது அரசியலமைப்பு நிர்ணய சபையிலோ பேசுவதால் தீர்வு ஒன்றினை எட்டமுடியாது என்றும் கருத்துக் கூறப்பட்டது. எனவே அரசுடன் பிரச்சினைகள் தொடர்பில் பேசப்பட வேண்டுமென்றும் வலியுறுத்தப்பட்டது.
இவைகள் எல்லா விடயங்களுக்குமாக இரா.சம்பந்தன் பதிலளித்தபோது, தமிழ் மக்களுடைய அபிலாசைகளை பூர்த்தி செய்யாத ஒரு தீர்வை நாம் ஏற்றுக்கொள்ள மாட்டோம். ஒற்றையாட்சிக்குள் ஒரு தீர்வை ஏற்றுக்கொள்ள முடியாது. வட கிழக்கு இணைப்பு மிக முக்கியமானது, ஆனால் இன்றைய காலகட்டத்தில் முஸ்லிம்கள் வடகிழக்கு இணைப்பைப் பற்றி பேசுவதிலேயே ஆர்வம் காட்டவில்லை.
ஏனென்றால் அவர்களைப் பொறுத்தமட்டில் ஒரு தனியான அலகாக கிழக்கு மாகாணம் இருக்கின்றது. அதிலே அவர்கள் பெரும்பான்மையாக இருக்கின்றார்கள். அவர்களுக்கு நிச்சயமாகத் தெரியும் தாங்கள் எப்போதும் ஆட்சிப் பொறுப்பை பிடிக்க முடியும் என்று. இத்தகைய காரணங்களால் அவர்கள் அதுபற்றி பேசுவதற்குக் கூட அக்கறை காட்டவில்லை.
இருந்தாலும் முஸ்லிம்களுடன் ஒரு உடன்பாட்டுக்கு வராமல் வடகிழக்கு இணைப்பைக் கொண்டுவருவது மிகமிகக் கடினம். ஆகவே, அவர்களுடன் பேச்சுவார்த்தைகளைத் தொடர்வதற்கான முயற்சிகளை நாங்கள் எடுக்க வேண்டும். பல்வேறு வழிகளிலே இந்தப் பிரச்சினையை அணுகமுடியும். எனவே, எல்லாவற்றையும் பற்றி முஸ்லிம்களுடன் பேச்சுவார்த்தை நடாத்தப்பட வேண்டும் என்றார்.
அதேநேரத்தில் தமிழரசுக் கட்சி உள்ளுராட்சிசபைத் தேர்தலில் தனியாக போட்டியிட முயற்சிக்கின்றதா என்று ராகவன் கேள்வியெழுப்பியபோது, அதற்கு பதிலளித்த மாவை சேனாதிராஜா, இல்லை நாங்கள் அப்படியான ஒரு முயற்சியும் எடுக்கவில்லை என்று கூறினார். அவ்வாறாயின் ஏன் வலிவடக்கிலும், வலி தெற்கிலும் பிரகாஸ் மற்றும் சுகிர்தன் ஆகியோர் தமிழரசுக் கட்சிக்கென்று வேட்பாளர்களை தெரிவுசெய்கின்றனர் என்று ராகவம் மீண்டும் கேள்வியெழுப்பினார்.
இதற்கு பதிலளித்த மாவை சேனாதிராஜா, எனக்கு அது பற்றி தெரியாது. அது தனிப்பட்ட ஆட்களின் செயற்பாடாக இருக்கலாம். அதை நாங்கள் ஏற்றுக்கொள்ளவும் இல்லை என்று கூறினார். அப்போது இடைமறித்த சிறீகாந்த எந்தக் கட்சியாக இருந்தாலும் தனியாகச் போய் கேட்பார்களாயின் அவர்கள் மக்களால் நிராகரிக்கப்படுவார்கள் என்று தெரிவித்தார்.:-06




