செய்திகள்

உள்ளூராட்சித் தேர்தலில் தமிழ்ப் புத்திஜீவிகள் களமிறங்கட்டும்

தமிழ் மக்களாகிய நாம் ஏமாற்றப்பட்டு விட்டோம் என்பதை இன்னமும் புரிந்து கொள்ள முடியவில்லை என்றால் இதுதான் எங்கள் தலைவிதி என்று சொல்வதைத் தவிர வேறு எதைத்தான் சொல்ல முடியும்.

யுத்தம் முடிந்து ஏழு ஆண்டுகள் நிறைவடைந்து விட்டன. தமிழினத்தை அழித் தொழிக்கும் வகையில் வன்னி யுத்தம் நடத்தப்பட்டது.

விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்தில் தடைசெய்யப்பட்ட ஆயுதப் பிரயோகம் நடத்தப் பட்டது என்பதற்கான ஆதாரங்களும் அவ்வப்போது முன்வைக்கப்பட்டன.

பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் கொன்றொழிக்கப்பட்டும் காணாமல்போகச் செய்யப்பட்டும் நடந்த நிட்டூரத்துக்குப் பின்னர் எங்களுக்கு எந்தத் தீர்வும் கிடைக்கவில்லை.

இதற்குக் காரணம் போருக்குப் பின்பு தமிழ் மக்களிடம் ஒரு பலமான – தரமான அமைப்பு இருக்காமைதான்.

தமிழ் அரசியல் தலைமை என்பது சிங்கள ஆட்சியாளர்களுக்கு முண்டுகொடுக்கும் கொழும்பைத் தலைமையகமாகக் கொண்டு இயங்குகிறது.

கொழும்பில் வாழக்கூடிய தமிழ் அரசியல் தலைமையின் முடிவெல்லாம், சிங்கள ஆட்சியாளர்களுடன் சேர்ந்து போவது, அவர்கள் தருவதைப் பெற்று உண்டு உறங்குவது.

அவ்வாறு செய்வதன் மூலம் தென் பகுதியில் இருக்கக்கூடிய தங்கள் சொத்துக்களையும் உடைமைகளையும் தமக்கு வருமானம் ஈட்டித்தரும் தொழில்துறைகளையும் பாதுகாப்பது என்பதுதான்.

இவை எதனையும் நாம் சிந்திக்கவில்லை. எங்களுக்கு ஏற்பட்ட பேரிழப்புகளுக்குக் கூட எதுவும் கிடையாது என்ற அவலமான நிலைமைக்கு நாம் வந்துவிட்டோம்.

இந்த நிலைமையைக் கூறுவது எங்கள் தமிழ் அரசியல் தலைமைகளைக் குறைகூறுவதற்காகவோ அல்லது அவர்கள் மீது குற்றம் சாட்டுவதற்காகவோ அல்ல.

மாறாக எங்கள் உறவுகள் துடிதுடிக்கக் கொல்லப்பட்டனரே,  எங்கள் தாய்மார் இன்னமும் அழு கண்ணீருடன் தங்கள் பிள்ளைகளைத் தேடுகின்றனரே, தமிழர்கள் என்பதால் எங்கள் சகோதரர்கள் விளக்கம் விசாரணையின்றி சிறைகளில் வாடுகின்றனரே. இவற்றையெல்லாம் காணும்போது எங்கள் இதயம் கருகிப் போகிறதல்லவா!

எதிர்காலத்திலாவது எங்கள் இனம், எங்கள் சந்ததி நிம்மதியாக வாழ வேண்டும் என்ற நினைப்பு வலுக்கிறதல்லவா!

இந்த நினைப்புக்கள் இல்லை என்றால் நாங்கள் தமிழினம் என்று சொல்வதில் அர்த்தம் உண்டா? அதனால்தான் சொல்கிறோம். நாங்கள் ஏமாற்றப்படுகிறோம்.

எனினும் இதைக்கூட நம்மவர்கள் மறைப்புச் செய்து சிங்கள ஆட்சியாளர்களைக் காப்பாற்றுகின்றனரே இது தகுமா? நீதி ஆகுமா?

ஆம், அன்புக்குரிய தமிழ்ப் புத்திஜீவிகளே! இனிமேலாவது நாம் ஒன்றுபடுவோம். எங்களுக்கு நடக்கும் அநீதி பற்றி; எங்களை ஏமாற்றும் கொடுமை பற்றிச் சிந்திப்போம். தமிழ்த் தலைமைக்கும் தக்க விளக்கம் கொடுப்போம். அந்த விளக்கம் செவிவழியன்று.

மாறாக தமிழ்ப்புத்திஜீவிகள் தேர்தல் களமிறங்கி நிலைமையை  மக்களுக்குச் சொல்லட்டும். தேர்தல் வழிப்பதவிகளைப் பெற்று தமி ழினத்துக்காகக் குரல் கொடுக்கட்டும். இதற்கான அடித்தளம் நடைபெறவிருக்கும் உள்ளூராட்சித் தேர்தலிலிருந்து ஆரம்பிக்கட்டும்.

இதுவே நம் எல்லோரையும் விழிப்படையச் செய்யும் ஒரே மருந்தாகும்.

வலம்புரி