செய்திகள்

கந்தபுராணத்தில் முருகப்பெருமானின் விஸ்வரூப தரிசனம் காணல் பற்றற்ற முற்றுற்ற முருகநிலை

மருத்துவர். சி. யமுனாநந்தா

இறைவனின் வியாபகத்தை முற்றாக உணரக்கூடியவர்கள் மெய்ஞானிகளாவர். கந்தபுராணத்தில் முருகப்பெருமானின் விஸ்வரூப தரிசனம் பரமேஸ்வரரூபமாக ஒரூபமாக அறுமுகக் கடவுள் தேவர்களுக்குக் காட்சி அளிக்கின்றார்.

எண்டிசையு மீரெழுதிறத்துலகும் எண்கிரியுமேழு கடலுந்
தெண்டிரையும் நேமிவரையும் பிறவும் வேறுதிரிபாகி யுளர்சீர்
அண்டநிரை யானவு மனைத்துயிரும் எப்பொருளுமாகி அயனும்
விண்டும் அரனுஞ்செறிய ஓருருவு கொண்டனன் விறற்குமரனே.
(திருவிளையாட்டுப்படலம் 88)

அதாவது எட்டுத்திக்குகளும், எண்கிரியும், ஏழுகடலும் தென்திசையும் சக்கரவாள மலையும் பிற பொருள்களும,; வெவ்வேறு மாறுபாடு உடைய அண்டநிரைகள் அனைத்தும், அனைத்து உயிர்களும் எப்பொருளும் பிரமதேவரும் திருமாலும் சிவபிரானும் அமைய ஒரு திருவுருவாகக் குமரக்கடவுள் விஸ்வரூபம் அமைந்திருந்தது.

குமரக்கடவுள் விஸ்வரூபத்தை அதாவது பரமேஸ்வர ரூபத்தைப் பார்ப்பது எவ்வாறாயின் தளவாடியில் நாம் எவ்வாறு எமது விம்பங்களை காணலுறுகின்றோமோ அவ்வாறே சரத்தின் விஸ்வரூபமே சரவணன்.

ஆனதொரு பேருருவு கொண்டு குமரேசனுற அண்டர்பதியும்
ஏனையரும் அற்புத மிதற்புதமிதென்று தொழுதெல்லவருமாய்
வானமிசை நோக்கினார்கள் மெய்வடிவம் யாவையும் வனப்புமுணரார்
சாறு வளவா அரிது கண்டனர் புகழ்ந்தினைய சாற்றினார்களால்.
(திருவிளையாட்டுப்படலம் 90)

பரமேஸ்வர விஸ்வரூபத்தில் பூவுலகம் வரையுள்ள கீழுலகங்கள் எல்லாம் திருவடிகளாகவும் திக்கின் எல்லைகள் சிறந்த புயங்களாகவும் மேலுலகத்தினெல்லை முழுதும் சிரசுகளாகவும், மண்ணுலகத்திற்கும் விண்ணுலகத்திற்கும் இடைப்பட்ட வெளி முழுதும் திருமேனியாகவும், பண்ணசைவு வேதங்கள் வாயாகவும், புத்திதத்துவம் முழுதும் செவிகளாகவும், பிரமதேவரும் திருமாலும் வலம் இடமாகவும், உமை மனமாகவும் பஞ்சகிருத்தியம் செய்யும் சிவன் ஆன்மாவாகவும் அமைந்தருள்.
மண்ணளவு பாதலமெலாஞ் சரணம் மாதிர வரைப்பும் மிகுதோர்
விண்ணளவெலா முடிகள் பேரொளியெலாம் நயனம் மெய்ந்நடுவெலாம்
பண்ணளவு வேத மணிவாய் உணர்வெலாஞ் செவிகள் பக்கம் அயன்மால்
எண்ணளவு சிந்தையுமை ஐந்தொழிலும் நல்கியருள் ஈசனுயிரே.
(திருவிளையாட்டுப்படலம் 89)

பிரபஞ்சம் யாவும் சிவனின் விஸ்வரூபத்தில் அடங்கும். சிவனின் யோக அசபைநிலை, பார்வதி திருக்கல்யாணம், ஆறுமுக அவதாரத்தில் கந்தனின் மழலைச் செய்கைகள், கற்பப்பிரளயம், சங்காரகாலம் யாவும் சிவவிஸ்வரூப ஓர் உரு நிலையாகும். இதுவே சிவனின் குண்டலினி சக்தியாகும்.

தோன்றல் வந்திடலும் விண்பால் துந்துபி கறங்கலுற்ற
ஆன்ற தொல்மறைகளெல்லாம் ஆர்த்தன அயனும் மாலும்
வான்றிகழ் மகத்தின் தேவும் முனிவரும் மலர்கள் தூவி
ஏன்றெமை யருளுகென்றே எத்திசையெடுத்துச் சூழ்ந்தார்
(திருவவதாரப்படலம் 93)

சிவனடியார்கள் தமது மாமிச நேத்திரத்தால் பௌதீக சோதியினை மாத்திரம் காண்பர். சிவனின் விஸ்வரூபத்தினைக் காண்பதற்கு ஞானநேத்திர நிலையினை அடைதல் வேண்டும். முருகப்பெருமானின் விஸ்வரூபத்தினை தேவர்கள் காண்பதற்கு முருகப் பெருமான் ஒளிகண்மிக்க ஞானக்கண்களை அருளியதாகக் கந்தபுராணத்தில் கூறப்பட்டுள்ளது.

கருணை செய்தொளிகள் மிக்க கண்ணவர்க்கு கருளிச் செவ்வேள்
அருணமார் பரிதிப்புத்தேள் அனந்தகோடிகள் சேர்ந்தென்ன
தருணவில் வீசநிநின்ற தனதுரு முற்றுங்காட்ட
இரணிய வரைக்கண் நின்ற இந்திரன் முதலோர் கண்டார்.
(திருவிளையாட்டுப்படலம் 92)

விஸ்வரூபதரிசனம் கிடைத்தல் சிவசாருப்பியமான. காலசாருப்பியமாகும். இது சீவன் முத்தர் நிலையாகும். ஆனால் அஃது கிட்டியும் தேவர்களின் ஆசையும் கன்மமும் அசுரரை அழித்தலையே முதன்மையாக அமைந்தது. இவ்வாறே அருச்சுனனுக்கு கிருஸ்ண பகவான் விஸ்வரூபதரிசனம் கிடைத்தபோதும் பாரத ஆசை அகலவில்லை. அவ்வாறே இற்றைக்காலத்திலும் நாம் மெய்யுணர்வு பெற்;றாலும் எம்மால் உலக இச்சைகளை அடக்க முடியாது கஸ்டப்படுகின்றோம். பாரில் பற்றற்ற மெய்நிலையடைதல் முற்றுற்ற முருக நிலையே ஆகும்.