கன்பூசியஸ் நிலையம் – சீன கம்யூனிஸ்ட் கட்சியின் ஒரு ஊடுருவல் கருவி?
யதீந்திரா
அமெரிக்காவிற்கு சவால் விடுக்கும் ஒரு சக்தியாக சீனா எழுச்சியடைந்துவருகின்றது. இதில் தற்போது எவருக்குமே சந்தேகமில்லை. இன்றைய சீனாவின் எழுச்சியின் முதல் பகுதி டெங்சியோ ஒபியின் காலமென்றால், அதன் அடுத்த கட்டத்தை நகர்த்துபவராக தற்போதை சீனத் தலைவர் சி.ஜின்பிங்கின் இருக்கின்றார். சீன வரலாற்றில் மாவோவிற்கு பின்னர் மிகவும் செல்வாக்கு மிக்க தலைவராக சி.ஜின்பிங் நோக்கப்படுகின்றார். சீனாவை ஒரு மேலாதிக்க சக்தியாக எழுச்சியடைச் செய்யும் இலக்கில், ஜின்பிங்கின் நிர்வாகமானது, ஆக்கோரசமான செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றது. இந்த பின்புலத்தில் நோக்கினால், அமெரிக்க – சீன போட்டியே இன்றைய சர்வதேச அரசியல் விவாதங்களை ஆக்கிரமித்திருக்கின்றது.
ஆனால், அமெரிக்க – சீன முறுகல் நிலை பனிப்போர் நிலையை எட்டவில்லையென்றும் – இல்லை பனிப்போர் நிலையை நோக்கி உலகம் நகரத் தொடங்கிவிட்டதாகவும் – இரு வேறு பார்வைகளில் விவாதிப்போருண்டு. அண்மையில் அமெரிக்க வான் பரப்பின் மீது பறந்த சீன உளவு பலூன்கள் அமெரிக்காவினால் சுட்டு வீழ்த்தப்பட்டன. இது ஒரு வகையான பனிப்போர் அரசியலை நினைவுபடுத்துவதாகவே இருக்கின்றது. தாய்வான் விடயத்தில் அமெரிக்கா காண்பித்துவரும் ஈடுபாட்டை, சீனா தொடர்ந்தும் எதிர்த்து வருகின்றது. அமெரிக்காவின் சபாநாயகர் நான்சி பலுசி, தாய்வானுக்கு விஜயம் செய்ததை தொடர்ந்து, தாய்வான் விடயத்தில் சீனா கடும்தொனியிலேயே பேசிவருகின்றது. தாய்வான் விடயத்தில் தலையிடுவோர் அதன் விலையை கொடுக்க நேரிடுமென்று சீனா அவ்வப்போது எச்சரித்துவருகின்றது. ஆனால், தாய்வானுடனான அரசியல், பொருளாதார மற்றும் இராணுவ உறவுகளை அமெரிக்கா, தொடர்ந்தும் பலப்படுத்தி வருகின்றது.
சீனா அடிப்படையில் ஒரு சர்வாதிகார அரசியல் கட்டமைப்பை கொண்டிருக்கும் நாடாகும். இந்த பின்புலத்தில் நோக்கினால், சீனாவின் அரசியலும், இந்திய, அமெரிக்க மற்றும் மேற்குலகத்தின் அரசியல் அணுகுமுறைகளும் தலைகீழானது. அமெரிக்க – சீன போட்டியென்பது வெறுமனே பொருளாதார மற்றும், அதிகார போட்டியல்ல – மாறாக, இரண்டு அரசியல் முறைமைகளுக்கிடையிலான போட்டியாகும்.
அதாவது, சர்வாதிகார அரசியல் கட்டமைப்பிற்கும் தாராளவாத ஜனநாயக கட்டமைப்பிற்கும் இடையிலான மோதலாகும். கம்யூனிச – சர்வாதிகார கட்டமைப்பின் மூலம் வளர்சியடைந்திருக்கும் சீனா, அதனை உலகெங்கும் பரவல்படுத்தவும், அதனை நியாயப்படுத்துவதற்கான செயற்பாடுகளையும் தீவிரப்படுத்தியிருக்கின்றது. இந்த பின்புலத்தில்தான், சீனாவின் கன்பூசியஸ் நிலையத்தின் செயற்பாடுகள் உற்று நோக்கப்படுகின்றன.
2004இல் ஆரம்பிக்கப்பட்ட சீன, கன்பூசியஸ் நிலையம், தற்போது 160இற்கு மேற்பட்ட நாடுகளில் அதன் செயற்பாடுகளை விஸ்தரித்திருக்கின்றது. உலகெங்கும் 400இற்கு மேற்பட்ட கன்பூசியஸ் நிலையங்கள் இதுவரையில் நிறுவப்பட்டுள்ளன. ஹன்பானா என்னும் அரசு சாரா, அரசாங்க அமைப்பொன்றே இதன் தலைமைக் காரியாலயமாக இருக்கின்றது. இதன் இயக்குனராக இருப்பவர், சின கம்யூனிஸ்ட் கட்சியின் உயர்பீடத்தின் உறுப்பினராவார். இது சீன கல்வி அமைச்சின் நிர்வாகத்தின் கீழ் இருக்கின்றது. இதில் சீன கம்யூனிஸ் கட்சியின் முக்கிய தலைவர்கள் உள்ளடக்கப்பட்டிருக்கின்றனர். 2013இல், கன்பூசியஸ் நிலையங்களின் ஊடாக, சீனா பற்றிய நல்ல பார்வைகளை வழங்குங்கள் என்று, ஜின்பிங், உத்தரவிட்டார்.

ஏனைய நாடுகளுக்குள் இலகுவாக ஊடுருவவும் நோக்கிலேயே, கன்பூசியஸ் நிலையம் என்னும் பெயர் தெரிவுசெய்யப்பட்டது. 2014இல் சைனா போஸ்ட் பத்திரிகையில் வெளிவந்த கட்டுரையொன்றின்படி, கன்பூஸியசுக்கு பதிலாக, மாவோ அல்லது, டென்சியோ ஒபிக்கின் பெயர் இந்த நிலையத்திற்குப் பயன்படுத்தப்பட்டிருந்தால், இந்த விடயத்தில், இந்தளவு முன்னேறியிருக்க முடியாதென்று குறித்த பத்திரிகை சுட்டிக்காட்டியிருந்தது. ஏனெனில் மாவோவின் வழியாக சீனா தொடர்பான உலகப் பார்வை எதிர்மறையாக இருக்கின்றது. இந்த எதிர்மறையான சிந்தனையை போக்குவதற்கான ஒரு கருவியே கன்பூசியஸ் நிலையம். இந்த நிலையத்தின் மூலம், சீனா தொடர்பில் நிலவிவரும் விமர்சனங்கள், குறிப்பாக தியன்மன் சதுக்க கொலைகள், சீனாவின் மனித உரிமைகளுக்கு எதிரான கொள்கைள், சர்வாதிகார ஆட்சிக் கட்டமைப்பு போன்றவை தொடர்பில், சாதகமான அபிப்பிராயத்தை மேற்குலக மாணவர்களுக்குள் புகுத்துவதற்கான ஒரு கருவியாகவே கன்பூசியஸ் நிலையத்தை சீனா பயன்படுத்திவருவதான குற்றச்சாட்டுக்கள் வலுவடைந்திருக்கின்றன. அதே வேளை சீன உளவுச் செயற்பாடுகளுக்கான ஒரு தளமாகவும் இந்த நிலையங்கள் பயன்படுத்தப்படுவதாக மேற்குலக பாதுகாப்பு நிபுனர்கள் எச்சரிக்கின்றனர்.
2013இல், சிக்காக்கோ பல்கலைக்கழக்கத்தை சேர்ந்த பேராசிரியர், மார்ஷல் சாஹ்லின்ஸ், கன்பூசியஸ் நிலையம் சிக்காக்கோ பல்கலைக்கழக்கத்தில் எவ்வாறு நடந்து கொள்கின்றது, நிலையத்தின் தீர்மானங்களின் கம்யூனிஸ்ட்; கட்சியின் உயர் பீடம் எவ்வாறு தலையீடு செய்கின்றது போன்ற விடயங்கள் தொடர்பில் விரிவான கட்டுரையையொன்றை வெளியிட்டிருந்தார். 2019இல் அமெரிக்க செனட், கன்பூசியஸ் நிலையங்களுக்கான அனுமதியை மறுபரீசீலனை செய்ய வேண்டுமென்று அறிக்கையிட்டிருந்தது. கன்பூசியஸ் நிலையம் சீனாவின் பிரச்சாரத்திற்கான ஒரு தளமாக பயன்படுத்தப்படுவதாக அமெரிக்க ராஜாங்கத் திணைக்களம் 2020இல் அறிவித்தது. தற்போது, பிரித்தானியாவில், இந்த விடயம் ஒரு அரசியல் விவாதமாக மாறியிருக்கின்றது.
பிரித்தானியாவில், 30 பல்கலைக்கழகங்களில் கன்பூசியஸ் நிலையங்கள் இயங்கிவருகின்றன. கன்பூசியஸ் நிலையங்களின் செயற்பாடுகள் பிரித்தானிய சட்ட நடைமுறைகளுக்கு மாறாக முன்னெடுக்கப்படுவதாக தற்போது, கண்டறியப்பட்டுள்ளது. பிரித்தானிய பல்கலைக்கழங்களில் பின்பற்றப்படும் கருத்துச் சுதந்திர நடைமுறைகளுக்கு மாறாக கன்பூசியஸ் நிலையங்களின் நடவடிக்கைகள் அமைந்திருப்பதாக குற்றச்சாட்டுக்கள் பரவலாக எழுந்திருக்கின்றன. இதன் மூலம், பிரித்தானியாவின் சிவில் சுதந்திரம் கேள்விக்குள்ளாகியுள்ளதாக கண்டறியப்பட்டதை தொடர்ந்து, பிரித்தானிய பிரதமர் அனைத்து கன்பூசியஸ் நிலையங்களையும் மூடுவதற்கான உத்தரவை பிறப்பித்திருக்கின்றார். சீனாவை பொறுத்தவரையில் அமெரிக்க மற்றும் மேற்குலகம் பனிப்போர் மனநிலையில் செயற்படுவதாக குற்றம்சாட்டிவருகின்றது. ஆனால் கன்பூசியஸ் நிலையங்களின் செயற்பாடுகளை, தொடர்சியாக, கண்காணித்ததன் மூலம், சில விடயங்களை பிரித்தானிய அதிகாரிகள் வெளியிட்டிருக்கின்றனர்.

அதாவது, கன்பூசியஸ் நிலையங்களுக்கான பணியாளர்கள் – தேர்வு செய்யும் முறைமையானது, பிரித்தானிய சட்டங்களுக்கு முரணாணது. அதாவது, பணியாளர்களை தெரிவு செய்யும் போது, அவர்களது அரசியல், பால்நிலைத் தெரிவு, மதம், இனவாத பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டவர்களா என்பதை நோக்குதல், அவர்களது அரசியல் நடத்தைகள் அத்துடன் பணிக்காலத்தில் குழந்தை பெற்றுக்கொள்வதில்லை என்னும் உறுதிமொழி போன்ற விடயங்களின் அடிப்படையிலேயே பணியாளர்கள் தெரிவு செய்யப்படுகின்றனர். இவ்வாறான நடைமுறை, பிரித்தானிய சட்டத்திற்கு முற்றிலும் முரணானது.
சீனாவின் மென்வலு அதிகாரத்தை விரிவாக்குவதற்கான ஒரு கருவியாகவே கன்பூசியஸ் நிலையங்கள் பயன்படுத்தப்படுகின்றன. அமெரிக்கா, கடனா, பிரித்தானியா மற்றும் ஏனைய மேற்குலக நாடுகளின் பல்கலைகழக நிர்வாகம் தற்போது விழிப்படைந்துவிட்டது. சீனாவின் செல்வாக்கை விரிவாக்குவதற்கான கம்யூனிஸ்ட் கட்சியின் ஒரு கருவியாகவே, கன்பூசியஸ் நிலையங்கள் பயன்படுத்தப்பட்டுவருவது, கண்டுகொள்ளப்பட்டதை தொடர்ந்து, மேற்குலக நாடுகள் கன்பூசியஸ் நிலையங்களுக்கான அனுமதியை இரத்துச் செய்திருக்கின்றன. கன்பூசியஸ் நிலையங்கள், சீன கம்யூனிஸ்ட் கட்சியின் ஊடுருவல் திட்டமென்னும் சர்ச்சைகள் எழுந்ததை தொடர்ந்து, இவற்றை ஆராய்வதற்கான சிறப்பு குழுவொன்றை இந்தியா நியமித்திருந்தது. இந்தியாவில் இரண்டு கன்பூசியஸ் நிலையங்கள் மட்டுமே இயங்கியிருக்கின்றது.
தெற்காசியாவில் அதன் செல்வாக்கை அதிகரித்துக் கொள்வதற்கான வாய்ப்புக்களை தேடிக்கொண்டிருக்கும் சீனா, தற்போது, இலங்கை பல்கலைக்கழங்களிலும் கன்பூசியஸ் நிலையங்களை ஆரம்பிப்பதில் அதிக ஆர்வத்தை காண்பித்துவருகின்றது. தென்னிலங்கையில் மூன்று நிலையங்களை இதுவரையில் நிறுவியிருக்கின்றது. இதன் ஒரு பகுதியாக வடக்கு கிழக்கு பல்கலைக்கழங்களிலும் கன்பூசியஸ் நிலையத்தை ஸ்தாபிப்பதற்கான முயற்சிகளில் தீவிரம் காண்பித்துவருகின்றது. இது தொடர்பில் இரண்டு பல்கலைக்கழகங்களையும் அணுகியிருக்கின்றது. இந்த விடயத்தை நமது பல்கலைக்கழங்கள் எவ்வாறு எதிர்கொள்ளப் போகின்றன?
இந்த விடயத்தை சரியாக புரிந்துகொள்ளாமல் நமது பல்கலைக்கழங்கள் காலை விடுமாக இருந்தால், மேற்குலக பல்கலைக்கழங்களில் ஏற்பட்ட சிக்கல்கள் போன்று, ஒரு வேளை அதனைவிடவும் சிக்கல்களுக்கு முகம்கொடுக்க நேரிடலாம். வளர்ச்சியடைந்த நாடுகளின் பலக்லைக்கழகங்களே கன்பூசியஸ் நிலையத்தை கையாள முடியாமல் தடுமாறுகின்ற போது, வடக்கு மற்றும் கிழக்கு பல்கலைக்கழங்களால் எவ்வாறு இதனை எதிர்கொள்ள முடியும்?
ஒரு விடயத்தை சரியாக புரிந்துகொள்ள வேண்டும். மேற்குலக நாடுகளின் அல்லது இந்திய பல்கலைக்கழங்களோடு கல்விசார் தொடர்புகளை பேணுவதற்கும், சீனாவின் பல்கலைக்கழங்களோடு இணைந்து பணியாற்றுவதற்குமுள்ள சிக்கல்கள் மாறுபட்டது. மேற்குலக, இந்திய பல்கலைக்கழகங்கள் சுயாதீனமானவை. ஜனநாயக கட்டமைப்புக்களின் கீழ் இயங்குபவை. எனவே அவ்வாறான பல்கலைக்கழங்களோடு இணைந்து பணியாற்றுவதில் அரசியல்ரீதியான சிக்கல்கள் இடம்பெறப்போவதில்லை. ஆனால் சீனாவின் பல்கலைக்கழங்களின் தீர்மானங்கள் சுயாதீனமானவை அல்ல. மாறாக, அனைத்துத் தீர்மானங்களுமே, கம்யூனிஸ் கட்சியின் கட்டுப்பாட்டில் இருக்கின்றது. இந்த பின்புலத்தில் நோக்கினால் சீனாவின் அனைத்து நிறுவனங்களுமே, சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் சர்வாதிகார கட்டமைப்பிற்கான பிரச்சார நிறுவனங்கள்தான். இதனை புரிந்துகொண்டே, அகலக் காலை வைப்பது தொடர்பில் சிந்திக்க வேண்டும்.


