கறுப்பு ஜூலையின் சில அனுபவங்கள்
ரைசாவிக்கிரமதுங்க
யூலை 23 1983- இந்த நாள் சிலரிற்கு மறக்க முடியாத முக்கியத்துவம் வாய்ந்தது. சிலர் காலவோட்டத்தில் இதனை மறந்துவிட்டனர். யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற சம்பவம்,ஏற்கனவே சிங்களவர்களிற்கும் தமிழர்களிற்கும் இடையில் காணப்பட்ட முறுகலை கலவரமாக்கியது.
இதன் காரணமாக சிங்கள காடையர் கும்பல் நூற்றுக்கணக்கான அப்பாவி தமிழர்களை தாக்கியதுடன் அவர்களை அவர்களின் சொத்துக்களை சூறையாடியது, தீக்கிரையாக்கியது.
கறுப்பு யூலை இலங்கை மீது ஏற்படுத்திய கடும் தாக்கத்தை கிரவுண்ட்வியுஸ் தொடர்ச்சியாக பதிவுசெய்து வருகின்றது. கறுப்பு யூலை பற்றியஅனைத்து சொல்லாடல்களும் எரியும் டயர்கள், அச்சம் போன்றவற்றை கொண்டிருக்கின்றன.
ஆனால் இதற்கு மாறான கதைகளும் உள்ளன. தங்கள் அயல்களில் வாழ்ந்த தமிழர்களின்உயிர்களை சொத்துக்களை காப்பாற்றுவதற்காக போராடிய ஆண்கள், பெண்களின் வீரக்கதைகள் உள்ளன. அவர்கள் தமிழர்களிற்கு புகலிடம் வழங்கியதுடன், பெறுமதி மிக்க சொத்துக்களை காத்துள்ளனர், காடையர் கும்பலை எதிர்த்துள்ளனர்.
இங்கு தரப்படும் ஓவ்வொரு அனுபவமும் கொழும்பின் ஓவ்வொரு பக்கத்திலும் இடம்பெற்ற சம்பவங்கள் பற்றியது,கிரவுண்ட் வியுஸ் இந்த சம்பவங்களை பதிவுசெய்வதற்காக இப்பகுதிக்கு விஜயம் மேற்கொண்டது. சிங்களவர்களிடமிருந்து காப்பாற்றப்பட்டவர்கள் மற்றும் தமிழர்களை காப்பாற்றிய சிங்களவர்களின் அனுபவங்களை பதிவுசெய்தது.
அதிலிருந்து சில அனுபவங்கள்….
வாசல வீதியில் என்ன நடந்தது?
எங்கள் வீதியின் ஆரம்பத்தில் வசிந்து வந்த தமிழர்களின் வீடுகளை தாக்குவதற்கு கும்பலொன்று முயன்றது.எனது தந்தையும், நானும் எனது சகோதரனும் எங்களால் முடிந்த அளவிற்கு பலரை தடுத்து நிறுத்தினோம். அவர்களிடம் மன்றாடியே அவர்களை தடுக்க எங்களால் முடிந்தது. வாசலவீதியில் உள்ள எனது தந்தையின் வீட்டில் 50ற்கும் மேற்பட்ட தமிழர்கள் தஞ்ஞம் புகுந்திருந்தனர். சிலர் காயமடைந்திருந்தனர், சிலரின் காயங்களில் இருந்து இரத்தம் வெளியேறிக்கொண்டிருந்தது.
எனது வீட்டிற்கு முன்னால் உள்ள வீட்டில் வசித்துவந்த பொறியிலாளர் தனது மனைவியின் தாலி உட்பட பெருமளவு நகைகளை பிஸ்கட் டின் ஓன்றிற்குள் போட்டு மறைத்து வைத்திருப்பதாக கண்ணீர் மல்க தெரிவித்தார். நான் உடனே அந்த வீட்டிற்கு சென்றேன். அவர்கள் அந்த வீட்டை சூறையாடிக்கொண்டிருந்தனர். ஆனால் குறிப்பிட்ட பிஸ்கட் டின்னை அவர்கள் கவனிக்கவில்லை.
நான் அவர்களுடன் சேர்ந்து திருடுவது போன்று அந்த பிஸ்கட் டின்னை தேடினேன். அது அசுத்தமான ஆடைகள் வீசப்பட்ட கூடைக்குள் காணப்பட்டது நான் அதனை எடுத்து வந்து அவரிடம் கொடுத்தேன்.
இதற்கு மூன்று நாட்களிற்கு பின்னர் ஜனாதிபதி ஜே ஆர் ஜயவர்த்தன ஊரடங்கு உத்தரைவை பிறப்பித்தார்.
தமிழ் குடும்பங்கள் எங்கள் வீட்டிலேயே தொடர்ந்தும் தங்கியிருந்தனர். எங்களால் அவர்களிற்கு வழங்க முடிந்ததை உண்டு அச்சத்துடன் நாட்களை கழித்தனர்.
நள்ளிரவில் கும்பலொன்று தமிழ்வீட்டிற்குள் நுழைந்து மரத்திலான கராஜை உடைத்து உள்ளே நிறுத்தப்பட்டிந்து வொக்ஸ்வேகன் காரை வெளியே இழுத்து தீமூட்டியது.
டீன்ஸ்வீதியில் நடந்தது என்ன?
நான் 25ம் திகதி தான் இலண்டனில் இருந்து நாடு திரும்பியிருந்தேன். குடிவரவு திணைக்களத்தில் காணப்பட்ட அதிகாரியொருவர் எனது கடவுச்சீட்டை பார்த்தபின்னர். நீங்கள் தமிழர் கவனமாகயிருங்கள், வெளியில் கலவரங்கள் இடம்பெறுகின்றன என தெரிவித்தார. நான் அவ்வேளை அதன் முக்கியத்துவத்தை உணர்ந்திருக்கவில்லை.
ஆனால் என்னை அழைத்துச்செல்வதற்காக எனது பெற்றோர்கள் விமானநிலையம் வந்திருக்கவில்லை. நான் விமானநிலைய தொலைபேசி மூலம்அவர்களை தொடர்புகொண்டவேளை,எவ்வளவு ஆபத்து என்றாலும் தான் வருவதாக அம்மா தெரிவித்தார்.
தீடீர் என எனது அம்மாவின் நண்பியொருவரை அங்குகண்டேன். அவர் முன்னாள்கடற்படை கப்டன் ஓருவரின் மனைவி. பெரும்பான்மை இனத்தை சேர்ந்தவர். அவர் வீட்டிற்கு தொடர்புகொண்டு ஓருவரையும் விமானநிலையத்திற்கு வரவேண்டாம் என தெரிவிக்குமாறு என்னை கேட்டுக்கொண்டார். நான் இதனை தெரிவித்ததும் எனது பெற்றோர் நிம்மதியடைந்தனர்.
எனது அம்மாவின் சினேகிதியின் காரில் நான் விமானநிலையத்திலிருந்து புறப்பட்டேன்- பின் ஆசனத்தில் அமர்ந்திருந்து நகரை பார்த்துக்கொண்டுவந்தேன். எங்கு பார்த்தாலும் தீயாக காணப்பட்டது.
வாகனங்களில் இருந்து தமிழர்கள் இழுத்து உயிருடன் எரிக்கப்படுவதை நான் பார்த்தேன்.
அவர்கள் எங்கள் காரை தடுத்துநிறுத்திய ஓவ்வொருவேளையும், தமிழர்கள் யாரும் இல்லை, நாங்கள் அனைவரும் சிங்களவர்கள் என எனது தாயின் நண்பி தெரிவித்தார்.
டீன்ஸ் வீதியில் எங்கள் வாகனத்தை மறித்த அவர்கள் அதனை செலுத்திவந்த பெண் யார் என அறியமுற்பட்டனர். ஆனால் பின் ஆசனத்தில் மிகுந்த அச்சத்துடன் அமர்ந்திருந்த 18வயது இளைஞன் என்பதை அறியமுயலவில்லை.
நான் உயிர் தப்பியது ஆச்சரியமான விடயம்.
டிக்மன் வீதி
காடையர் கும்பல் கிறீன்லான்ட்ஸ் ஹோட்டலை சூறையாடிக்கொண்டிருந்தது. அவர்கள் வருகிறார்கள் என அறிந்ததும் நாங்கள் மனித சங்கிலியை உருவாக்கினோம். முன்னாள் ஜனாதிபதிகளின் ஆலோசகராக விளங்கிய இலங்கையின் பிரபல இராஜதந்திரி பிரட்மன் வீரக்கோனும் எங்கள் மத்தியில் காணப்பட்டார்.
அந்த பகுதியில் தமிழர்கள் எவரும் இல்லை என காடையர் கும்பலிடம் தெரிவித்தோம். கும்பல் ஓன்றுடன் மோதுவது ஆபத்து என்பதை அவர்கள் அறிந்திருந்தனர். எங்கு எதிர்ப்பு காணப்பட்டதோ அங்கு அவர்கள் எதனையும் செய்யவில்லை. ஆனால் இரவில் மீண்டும் வருவோம் என அவர்கள் அச்சுறுத்தினர். அவர்கள் கல்வி கற்றவர்கள் போன்று காணப்பட்டனர்.
தமிழ் அதிகாரியொருவரின் வீட்டை அந்த கும்பல் சூறையாடிக்கொண்டிருந்தது ( அவர்கள் 70,80 வயது தம்பதியினர்- அந்த வீட்டிற்கு சென்ற அவர்களின் அயல்வீட்டவர் ஓருவர் கும்பலுடன் சேர்ந்து கொள்ளையடிப்பதை போன்று நடித்து ஏன் வயது போன தம்பதியினரை சிரமப்படுத்துகிறீர்கள் என அவர்களிடம் தெரிவித்து அவர்களை திசைதிருப்பினார். சிங்களத்தில் உரையாடிய முஸ்லீம்களும் தங்களால் முடிந்த உதவிகளை செய்தனர்.




