கலைப்புலி தாணுவை கைது செய்ய சிவில் கோர்ட்டு உத்தரவு
கன்னியாகுமரி மாவட்டம், புதுக்குடியிருப்பில் உள்ள ‘நியூ தியேட்டர்’ உரிமையாளர் சி.டேவிட். இவர், சென்னை 10-வது உதவி சிவில் கோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், ‘வி.கிரியேஷன் திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தின் உரிமையாளர் கலைப்புலி எஸ்.தாணு எனக்கு ரூ.2 லட்சம் தரவேண்டும். இதுகுறித்து நாகர்கோவில் முதன்மை சார்பு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தேன்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, ரூ.2 லட்சத்தையும், அதற்குரிய வட்டி தொகையையும் சேர்த்து கலைப்புலி தாணு எனக்கு வழங்கவேண்டும் என்று கடந்த 2013-ம் ஆண்டு ஜூன் மாதம் 13-ந் தீர்ப்பளித்தார். ஆனால், தாணு பணத்தை வேண்டுமென்றே வழங்காமல் இழுத்தடித்து வருகிறார்.
அவரது பெயரில் சொத்துக்கள் சென்னையில் உள்ளன. தற்போது பல கோடி ரூபாய் செலவு செய்து ‘கபாலி’ என்ற திரைப்படத்தை தயாரித்துள்ளார். எனவே, வசதி இருந்தும் பணம் தராத தாணுவை கைது செய்ய உத்தரவு பிறப்பிக்கவேண்டும்’ என்று கூறியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி, மனுவுக்கு பதில் அளிக்க எஸ்.தாணுவுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார். இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதி கணேசன் முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி, கலைப்புலி தாணுவை வருகிற 28-ந் தேதிக்குள் போலீசார் கைது செய்யவேண்டும் என்று உத்தரவிட்டார். விசாரணை 28-ந் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
N5




