காங்கேசன்துறையில் பொதுமக்களின் காணிகளை விட நிபந்தனை : மீள்குடியேற்றம் தாமதம்
வலி.வடக்கு காங்கேசன்துறை பகுதியில் பொதுமக்களின் காணிகளை ஆக்கிரமித்து நிலைகொண்டுள்ள பொலிஸாருக்கான மாற்றுக்காணிகள் வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றபோதும் பொலிஸார் விதிக்கும் நிபந்தனையால் மீள்குடியேற்றத்திற்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
கீரிமலை பகுதியிலுள்ள காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலைக்குச் சொந்தமான 4 ஏக்கர் காணியை பொலிஸாருக்கு வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. வலி.வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்திலிருந்து அண்மையில் 201.3 ஏக்கர் காணி பொதுமக்களின் மீள்குடியேற்றத்திற்காக விடுவிக்கப்பட்டிருந்தது. இவ்வாறு விடுவிக்கப்பட்ட பகுதிகளில் காங்கேசன்துறைப் பகுதியில் மட்டும் 63 ஏக்கர் காணி விடுவிக்கப்பட்டிருந்தது.
இருந்தபோதும் காங்கேசன்துறை பகுதியில் பெருமளவான பிரதேசங்களை தம் வசப்படுத்தியுள்ளதுடன் அங்குள்ள பொதுமக்களின் வீடுகளிலும் பொலிஸாரே நிலைகொண்டுள்ளனர்.
குறிப்பாக பொலிஸ் உயர் அதிகாரிகள் பணிமனை, பொலிஸ் உத்தியோகஸ்தர்களுக்கான விடுதி, நூலகம், வைத்தியசாலை, வாகனம் பழுது பார்க்கும் இடம், சிற்றுண்டிச்சாலைகள், வாகனத்தரிப்பிடங்கள் போன்ற தேவைகளுக்காக பொலிஸார் அப்பகுதியில் உள்ள சுமார் 60 வீடுகளையும் அவற்றுடன் கூடிய காணிகளையும் பயன்படுத்தி வருகின்றார்கள்.
பகுதி விடுக்கப்பட்டுள்ளபோதும் அங்கு நிலைகொண்டுள்ள பொலிஸார் விலகிச் செல்லாத காரணத்தினால் மக்கள் அங்கு சென்று மீள்குடியேற முடியாத நிலை காணப்படுகின்றது. இந்தப் பகுதியை இராணுவக் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் இருந்து விடுவிக்கப்படுவதற்கு 2 மாதங்களுக்கு முன்னரே அப்பகுதியில் உள்ள பொதுமக்களின் காணிகளை விட்டு வெளியேறுமாறு யாழ்.மாவட்ட அரசாங்க அதிபரினால் யாழ்.மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபருக்கு கடிதம் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.
இருந்தபோதும் தமக்கான உரிய மாற்றிடம் வழங்கப்பட்டால் மட்டுமே அங்கிருந்து வெளியேறி செல்வோமென்று பொலிஸார் தெரிவித்திருந்தனர். இந்நிலையில் காங்கேசன்துறையில் நிலைகொண்டுள்ள பொலிஸாருக்கான மாற்றுக்காணிகள் வழங்குவது தொடர்பான ஆராய்வுகளை மேற்கொண்டுவந்த யாழ்.மாவட்டச் செயலகம் வலி. வடக்கிலிருந்து இடம்பெயர்ந்து தற்போது காணிகள் இல்லாமல் முகாம்களில் தங்கியுள்ளவர்களுக்கு வழங்குவதற்காக தெரிவுசெய்யப்பட்டுள்ள காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலைக் காணிகளில் பொலிஸாருக்கும் ஒரு பகுதியை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதன்படி கீரிமலைப் பகுதியில் இனங்காணப்பட்ட 2 தொடக்கம் 4 ஏக்கர் காணி பொலிஸாருக்கு வழங்குவதற்கு முடிவுசெய்யப்பட்டுள்ளது. இருப்பினும் இந்தக் காணிகள் பள்ளமாக உள்ளதால் அப்பகுதியை மண் போட்டு நிறுவ வேண்டியுள்ளதால் அதற்குப் பெருந்தொகை பணம் செலவிட வேண்டியுள்ளதாக பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டு வருகின்றது.
மேலும் வழங்கப்பட்டுள்ள மாற்றுக்காணியில் பொலிஸாருக்குத் தேவையான கட்டிடங்களை அமைத்த பின்னரே காங்கேசன்துறைப் பகுதியை விட்டு தாம் வெளியேறுவோம் என்றும் பொலிஸ் தரப்பால் தெரிவிக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் விடுவிக்கப்பட்ட காங்கேசன்துறைப் பகுதியிலிருந்து பொலிஸார் வெளியேற்றப்பட்டு அப்பகுதியில் பொதுமக்கள் மீள்குடியேற்றப்படும் செயற்பாடு தொடர்ந்தும் இழுபறி நிலையிலேயே உள்ளது.




