செய்திகள்

காணாமற் போனோர் தொடர்பில் சான்றிதழல்ல! நியாயமான ஆய்வு நோக்கியபொறிமுறையே அவசியம்: டக்ளஸ்

காணாமற்போன எமது உறவுகள் தொடர்பில் அவசரமாக சான்றிதழ்கள் வழங்குவதென்பது எமது மக்களுக்கான நியாயமாக அமையாது. எனவே, காணமற்போனவர்கள் தொடர்பில் நியாயமான ஆய்வினை மேற்கொள்ளக்கூடிய வகையிலான தேசிய பொறிமுறையே அவசியமென ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி(ஈ.பி.டி.பி.)யின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

இவ் விடயம் தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்துள்ள செயலாளர் நாயகம் அவர்கள், காணாமற்போனவர்கள் தொடர்பில் ஜனாதிபதி ஆணைக் குழு அமைக்கப்பட்டு, காணாமற்போனவர்களின் உறவுகளின் சாட்சியங்கள் பெறப்பட்டுள்ளன. மேலும் பெறப்படுகின்றன. இந்த ஆணைக் குழு தொடர்பில் எமது நிலைப்பாட்டினை நாம் ஏற்கனவே முன்வைத்துள்ளோம். இங்கு முன்வைக்கப்பட்டுள்ளதும், முன்வைக்கப்படுகின்றதுமான சாட்சியங்கள் தொடர்பில் பக்க சார்பற்ற வகையிலான முறையான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும். இதை நான் கடந்த 13ம் திகதி நாடாளுமன்றத்திலும் வலியுறுத்தியுள்ளேன்.

இங்கு சாட்சியங்களை வழங்கியுள்ள ஒரு சாரார், அறியாமைகள் காரணமாகவும், தூண்டப்பட்ட நிலைகளிலும், சுய தேவைகள் நிமித்தமும் சாட்சியங்களை வழங்கியுள்ளதாக சந்தேகங்கள் எழுந்துள்ளன. இந்த சந்தேகம் எமக்கு மட்டுமல்ல, பலருக்கும் உண்டு.

இந்த சாட்சியங்கள் முறையாக ஆராயப்பட்டதன் பின்னர், உண்மைகள் பகிரங்கப்படுத்தப்படல் வேண்டும். அவ்வாறு உண்மை என உறுதிப்படுத்தப்படுகின்ற சம்பவங்கள் தொடர்பில் பாதிக்கப்பட்டுள்ள எமது மக்களுக்கு நியாயமான பரிகாரங்கள் வழங்கப்பட வேண்டும். இதற்கமைவாக தேசிய பொறிமுறை ஒன்று உருவாக்கப்படல் வேண்டும் என செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

R-06