காணாமல்போனோர் அலுவலகம் படையினருக்கு எதிரானதல்ல: மஹிந்த சமரசிங்க தெரிவிப்பு
இலங்கையில் அமைக்கப்படவுள்ள காணமல் போனோர் தொடர்பிலான அலுவலகம், ராணுவம் உள்ளிட்ட பாதுகாப்பு பிரிவினருக்கு எதிரானது அல்ல எனவும், அது பாதுகாப்பு தரப்பினரை பாதுகாக்கும் ஒரு செயல் எனவும் தொழிற்பயிற்சி அமைச்சர் மஹிந்த சமரசிங்க கொழும்பில் ஊடகவியலாளர் சந்திப்பின்போது தெரிவித்துள்ளார்.
காணாமல் போனார் தொடர்பான அலுவலகம் அமைப்பதற்கான சட்டமூலம், மஹிந்த ஆதரவு நாடாளுமன்ற உறுப்பினர்களின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் நேற்றைய தினம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டதன் பின்னணில் அமைச்சரின் இந்த கருத்து வந்துள்ளது.
செய்தியாளர் சந்திப்பில் தொடந்தும் கருத்து தெரிவித்த அமைச்சர் மஹிந்த சமரசிங்க, காணாமல் போனனோர் தொடர்பிலான அலுவலகம் அமைக்கப்படுவது ராணுவத்தை காட்டிக்கொடுக்கும் செயல் என ஒன்றிணைந்த எதிர்க்கட்சி கூறுகின்றபோதிலும், போரை முன்னின்று நடத்திய ராணுவத்தினரின் கௌரவத்தை பாதுகாப்பதற்காகவே இது அமைக்கப்படுவதாக அவர் கூறினார்.
இந்த பிரேரணையை நாடாளுமன்றத்தில் சமர்பிக்கும்போது, ஒன்றிணைந்த எதிர்கட்சி என்று தங்களை அழைத்துக்கொள்ளும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நடந்துகொண்ட விதம் குறித்தும் அமைச்சர் மஹிந்த சமரசிங்க தனது அதிருப்தியை வெளியிட்டார்.
இதனிடையே காணாமல் போனோர் தொடர்பில் அலுவலகம் அமைப்பதற்கான பிரேரணை நிறைவேற்றப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து, ஒன்றிணைந்த எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வெள்ளிக்கிழமையும் நாடாளுமன்ற வளாகத்தில் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தியுள்ளனர்.
-06




