காணாமல் போனோர் இல்லையெனும் அரசு சான்றிதழ் வழங்க முற்படுவது ஏன் ? சுரேஷ்
அரசாங்கத் தரப்பினர் காணாமல் போனோர் இல்லையெனவும் மறுபக்கம் சான்றிதழ் வழங்க நடவடிக்கையெடுப்பதும் நடைமுறையில் முரண்பட்ட விடயங்களாகவுள்ளதென ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் ; காணாமல் போனோர் தொடர்பில் சான்றிதழ் வழங்குவது சர்வதேச ரீதியாக இயல்பான விடயமாகவுள்ளது. இதேவேளை காணாமல் போனோர் இல்லையென பிரதமர் கூறியுள்ளார். இதற்கு முன்னரும் பிரதமர் இரகசிய முகாம் இல்லையென கூறியுள்ளார். எனினும் அவ்வாறு கூறிய பின்னர் தடுத்து வைக்கப்பட்டவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
எனவே பிரதமர் காணாமல் போனோர் இல்லையென என்ன அடிப்படையில் கூறியுள்ளார் என்பது கேள்வியாகவுள்ளது. அவர் காணாமல் போனோர் தொடர்பில் விசாரணை ஆணைக்குழு அமைத்து கண்டறிந்தாரா அல்லது காணாமல் போனோர் தொடர்பில் அவருக்கு தகவல் கிடைத்துள்ளதா என்பது தெரியாதுள்ளது.
நாட்டில் இரகசிய முகாமில் எவரும் தடுத்து வைக்கப்படவில்லை என்பது தொடர்பில் விசாரணைக் குழு அமைக்காத நிலையில் சரணடைந்தவர்கள், முகாம்களில் மக்கள் முன் ஏற்றிச் சென்றவர்கள், இராணுவ சுற்றிவளைப்பில் கைது செய்யப்பட்டவர்கள் எங்கேயென கேள்வியெழுகின்றது. அவர்கள் இறந்து விட்டனரென்றால் எவ்வாறு கொல்லப்பட்டனர் என்பது குறித்து அவர்களது உறவினர்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்றார்.
R-06




