செய்திகள்

காணாமல் போன உறவுகளின் உண்ணாவிரதம் நான்காம் நாளாக தொடர்கிறது: பல்வேறு தரப்புக்களும் ஆதரவு

காணாமல் போன உறவுகளினால் வவுனியாவில் கடந்த திங்கள் கிழமை ஆரம்பிக்கப்பட்ட சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டம் சீரற்ற காலநிலைக்கு மத்தியிலும் நான்காம் நாளாக தொடர்கிறது.

வவுனியா மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் ஏற்பாட்டில் காணாமல் போன உறவினர்கள் 14 பேர் வவுனியா பிரதான தபால் நிலையம் அருகில் தொடர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களில் நால்வரின் உடல் நிலை மிகவும் மோசமடைந்துள்ளது.

அரசாங்கமே ‘ காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு பதில் கூறு, சகல அரசியல் கைதிகளையும் நிபந்தனையின்றி விடுதலை செய், பயங்கரவாத தடைச்சட்டத்தை இரத்துச் செய்’ ஆகிய கோரிக்கைகளை முன்வைத்தே உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் மழை, கடும் பனி என்பவற்றுக்கு மத்தியில் தொடர்ந்தும் உண்ணாவிரதம் இருந்து வரும் நிலையில் இவர்களுக்கு ஆதரவாக அரசியல் கைதிகளின் உறவினர்கள் இருவரும் உண்ணாவிரதத்தில் இணைந்துள்ளனர்.

வவுனியா மாவட்ட வர்த்தகர்கள், முச்சக்கர வண்டி உரிமையாளர்கள், சிவில் அமைப்புக்கள், இளைஞர்கள், மற்றும் கிளிநொச்சி, மன்னார், முல்லைத்தீவு மாவட்ட காணாமல் போன உறவுகளின் உறவினர்கள் எனப்பலரும் வருகை தந்து ஆதரவு வழங்கி வருகின்றனர்.

போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு ஆதரவாக சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை கையில் காணாமல் போன உறவினர்களின் புகைப்படங்களை ஏந்தியவாறு அடையாள உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளதால் வவுனியா மாவட்டமே சோகத்தில் மூழ்கியுள்ளது.

இந்நிலையில் இப்போராட்டத்தில் ஈடுபட்டவர்களை நான்காம் தினத்தில், பிரதி அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், பாராளுமன்ற உறுப்பினர்களான சிவசக்தி ஆனந்தன், சாள்ஸ்நிர்மலநாதன், சாந்தி சிறிஸ்கந்தராஜா, வடமாகாண சபை உறுப்பினர்களான கமலேஸ்வரன், செ.மயூரன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிறேமச்சந்திரன், தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் செயலாளர் செ.கஜேந்திரன், ஜனநாயக மக்கள் முன்னனியைச் சேர்ந்த பாஸ்கரா மற்றும் பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்களும் வருகை தந்து தமது ஆதரவை வழங்கினர்.

IMG_3120

IMG_3043

IMG_3046

IMG_3054

N5