காணாமல் போன உறவுகளைத் தேடிவந்த ஐந்து பேர் கடந்த 6 மாதத்தில் மரணம்
காணாமல் ஆக்கப்பட்டுள்ள தமது உறவினர்களை தேடிப் போராட்டத்தை ஆரம்பித்தவர்களுள் 5 பேர் கடந்த ஆறு மாத காலத்துக்குள் உயிரிழந்துள்ளனர்.
அந்தவகையில் கடந்த ஞாயிற்றுக் கிழமையும் தாய் ஒருவர் மரணமடைந்துள்ளார். கொழும்பில் கடந்த 2007ஆம் ஆண்டு வெள்ளைவானில் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட ரொஷான் லியோன் (மகன்) மற்றும் அமலன் லியோன் (கணவர்) ஆகியோரைத் தொடர்ந்து தேடிவந்த ஜெசிந்தா பீரீஸ் என்பவரே மாரடைப்பால் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமது உறவுகளுக்கு என்ன நடந்தது? அவர்கள் உயிருடன் இருக்கின்றனரா அல்லது இல்லையா? என்பதை அறியாமலேயே அவர்களின் உயிர்கள் பிரிந்துள்ளமை பெருந்துயரமான சம்பவமாகும். காணாமல் ஆக்கப்பட்டவர்கள் இருக்கின்றனரா அல்லது அவர்களுக்கு என்ன நடந்துள்ளது என்பதை அறிவித்திருந்தால்கூட அவர்களின் ஆத்மா சாந்தியடைந்திருக்கக்கூடும் என்று மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
ஜெசிந்தா பீரிஸ் என்பவர் தனது கணவனும், மகனும் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட நிலையில், நீதி கோரி பல வருடங்களாகப் போராட்டங்களில் ஈடுபட்டு வந்தார். கொழும்பில் கடற்படையின் இரகசிய முகாமில் கண்டெடுக்கப்பட்ட 12 அடையாள அட்டைகள் தொடர்பான வழக்கு கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகின்றது. வழக்கு விசாரணைகளிலும் கடந்த திங்கட்கிழமை ஜெசிந்தா பீரிஸ் பங்கேற்றிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
கடந்த 7 மாதங்களுக்கு முன்னர் தமது உறவுகளுக்கு என்ன நடந்தது என்ற கேள்விக்கு விடை தேடி போராட்டத்தை ஆரம்பித்த 5 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். கடந்த 8 வருடங்களுக்கு முன்னர் முள்ளிவாய்க்காலில் இராணுவத்திடம் சரணடைந்து காணாமல்போன தனது மகனைத் தேடி வந்த முன்னாள் போராளி வீமனின் தாயார் ஈஸ்வரன் ருத்ராதேவி மாரடைப்பு காரணமாக கடந்த 31ஆம் திகதி உயிரிழந்தார்.
இதபோல், தனது கணவர் காணாமல் ஆக்கப்பட்ட நிலையில் போராட்டத்தை ஆரம்பித்த துரைசிங்கம் ஈஸ்வரி, காணாமல் ஆக்கப்பட்ட தனது பிள்ளையைத் தேடிவந்த மகேந்திரராஜா, தனது பிள்ளையைத் தேடி போராட்டத்தை ஆரம்பித்திருந்த கீர்த்தனா உள்ளிட்ட ஐவர் ஏற்கனவே உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளுக்கு என்ன நடந்ததோ, ஏது நடந்ததோ என்ற ஏக்கமும், மன அழுத்தமுமே இவர்களின் மரணத்துக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது என மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.
N5


