செய்திகள்

‘காணாமல் போன’ மூவர் மாலைதீவு சிறையிலிருந்து வெலிக்கடைக்கு மாற்றம்: விடுதலை செய்ய உறவினர் கோரிக்கை

காணாமல் போன மூவர் மாலைத்தீவு சிறைச்சாலையில் இருந்து வெலிக்கடைச் சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டுள்ளதுடன் அவர்களது உறவினர்கள் பார்வையிட்டுள்ளதாகவும் மனித உரிமைகள் மற்றும் அபிவிருத்தி நிலைய சட்ட உதவியாளர் சட்டத்தரணி ஆ.றொமினிக் பிறேமானந் தெரிவித்துள்ளார்.

கடந்த 2005, 2006, 2007 ஆம் ஆண்டுகளில் காணமால் போன முல்லைத்தீவு புளியம்பொக்கனையைச் சேர்ந்த பு.ரஞ்சித், ஓட்டிசுட்டானைச் சேர்ந்த மு.யோகராசா, வவுனியாவைச் சேர்ந்த க.இராமச்சந்திரன் ஆகியோரே இவ்வாறு கொண்டு வரப்பட்டுள்ளனர். இவர்களது பெற்றோர் மற்றும் சகோதரர்கள் திங்கள் கிழமை வெலிக்கடைச் சிறைச்சாலைக்குச் சென்று பார்வையிட்டனர். இது தொடர்பில் அவர்களைப் பார்வையிட்ட உறவினர்களிடம் கேட்ட போது,

தமது பிள்ளைகள் மற்றும் சகோதரர்கள் கடந்த 2005, 2006 மற்றும் 2007 ஆம் ஆண்டுகளில் காணாமல் போன நிலையில் மாலைதீவு கடற்கரையில் வைத்து மாலைதீவு பொலிசாரால் கைது செய்யப்பட்டு விடுதலைப்புலி சந்தேக நபர்கள் எனக் குற்றம்சாட்டப்பட்டு மாலைதீவு நீதிமன்றால் 15 வருட சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் மாலைத்தீவில் இருந்து தொலைபேசி ஊடாக எமது பிள்ளைகள் மற்றும் சகோதரன் மாலைதீவு சிறையில் இருப்பது பற்றிய தகவல்கள் எமக்கு கிடைத்தன. அதன்பின் காணாமல் போனோர் தொடர்பில் விசாரணை செய்யும் மக்ஸ்வெல் பரணகம தலைமையிலான ஜனாதிபதி ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்தோம். அவர்களும் எமது பிள்ளைகள் மற்றும் சகோதரன் மாலைதீவு சிறையில் உள்ளதாக கடந்த வருடம் செப்ரெம்பர் மாதம் கடிதம் மூலம் தெரியப்படுத்தினர். இந்நிலையில் அவர்களைப் பார்ப்பதற்கு எமக்கு சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. தற்போது கடந்த 10 ஆம் திகதி மாலைத்தீவில் இருந்து 14 சிறைக் கைதிகள் இலங்கை அரசாங்கத்திடம் கையளிக்கப்பட்டுள்ளனர். அதில் காணாமல் போன எமது உறவுகள் மூவரும் உள்ளனர். ஆனால் அது பற்றி எமக்கு அரசாங்கம் அறிவிக்கவில்லை.

இந்நிலையில் மாலைதீவில் இருந்து கிடைத்த தகவல்களின் அடிப்படையில் மன்னார் மாவட்ட பிரஜைகள் குழு, மனித உரிமைகள் மற்றும் அபிவிருத்தி நிலைய சட்ட உதவியாளர்களின் துணையுடன் அவர்களை பார்ப்பதற்கு முயற்சி செய்து திங்கள் கிழமை வெலிக்கடை சிறையில் பார்வையிட அனுமதி கிடைத்து பார்வையிட்டுள்ளோம். அவர்கள் 9 வருடகாலம் மாலைதீவு சிறைசாலையில் இருந்துள்ளார்கள். அவர்களை இனியும் சிறையில் வைத்திருக்காது எம்முடன் இணைந்து வாழ அனுமதி வழங்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

N5