செய்திகள்

காலிமுகத்திடல் போராட்டம் : நடந்தது என்ன?

தோட்டத் தொழிலாளர்களுக்கு 1000 ரூபா சம்பள அதிகரிப்பை பெற்றுக்கொடுக்குமாறு வலியுறுத்தி மலையக இளைஞர்கள் கொழும்பில் 24/10/2018 அன்று கூடி பாரிய போராட்டமொன்றை முன்னெடுத்தனர்.
காலை 10 மணியளவில் கொழும்பிலும் மற்றும் வெளியிடங்களிலிருந்தும் பெருந்திரளான மலையக இளைஞர்கள் காலிமுகத்திடலில் அணி திரண்டனர். இதேநேரத்தில் செட்டியார் தெரு மற்றும் பிரதான வீதி பகுதியிலிருந்து மேலும் பெருந்திரளான இளைஞர்கள் பேரணியாக வந்தனர். பேரணியாக வந்த இளைஞர்கள் ஹில்டன் ஹோட்டலுக்கு அருகில் பொலிஸாரினால் இடை மறிக்கப்பட்டு அங்கிருந்து பேரணியாக செல்ல விடாது பொலிஸாரே தங்களின் பஸ்களை பயன்படுத்தி காலி முகத்திடலுக்கு அவர்களை அழைத்துச் சென்றனர். அத்துடன் காலி முகத்திடலுக்குள் தமது போராட்டத்தை நடத்துவதற்கு பொலிஸார் எந்த தடைகளையும் விதிக்கவில்லை.
இதேநேரத்தில் காலி முகத்திடலுக்குள் அரசியல் கட்சிகளின் இளைஞர் அணி மற்றும் கட்சியின் உள்ளூராட்சி மற்றும் முன்னாள் மாகாண சபை உறுப்பினர்களும் இளைஞர்களோடு இளைஞர்களாக இருந்தனர். இ.தொ.கா மற்றும் த.மு.கூ ஆதரவு அணிகளும் அங்கு இருந்தன. அத்துடன் எதிர்வரும் மாகாண சபை தேர்தலை இலக்காக கொண்ட சிலரும் அங்கு இருந்தனர். அவர்கள் தங்களின் ஆதரவு அணிகளை பஸ்களில் தமது பிரதேசங்களிலிருந்து அழைத்து வந்திருந்தனர். குறிப்பாக நுவரெலியா , கேகாலை , இரத்தினப்புரி ஆகிய மாவட்டங்களில் எதிர்வரும் மாகாண சபை தேர்தலில் போட்டியிட திட்டமிட்டிருந்தவர்களும் தமது ஆதரவாளர்களுடன் வந்திருந்தனர்.
இதேவேளை இந்த கூட்டத்திற்குள் ஏற்பாட்டுக் குழு என்று சிலர் கழுத்தில் பட்டிகளை தொங்கவிட்டுக்கொண்டு அங்குமிங்கும் அலைந்துக்கொண்டிருந்தனர். அத்தோடு சிலர் பேஸ்புக்கில் நேரடி ஒளிப்பதிவு என்று அதிலேயே குறியாகவும் இருந்தனர்.
எவ்வாறாயினும் இந்த போராட்டம் மிகவும் வெற்றிகரமாகவே காலிமுகத்திடல் மைதானத்திற்குள் நடைபெற்றுக்கொண்டிருந்தது. ஆனபோதும் பிற்பகல் 11.30 மணிக்கு பின்னர் சில அரசியல்வாதிகள் அங்கிருந்த இளைஞர்கள் குழுக்கள் சிலவற்றை தூண்டிவிட்டு அவர்களை வீதிக்கு கொண்டுவர முயற்சித்தனர். அதன்படி அந்த குழு வீதிக்கு இறங்கியதை தொடர்ந்து அவர்களின் பின்னால் மற்றையவர்களும் வீதிக்கு செல்ல ஆரம்பித்தனர்.
இதன்போது பொலிஸார் அவர்களை கட்டுப்படுத்துவதற்காக சங்கிரில்லா ஹோட்டலுக்கு முன்னால் ஜனாதிபதி செயலகத்திற்கு அருகில் இளைஞர்களை நிறுத்தி வீதித்தடைகளை போட்டதுடன் தண்ணீர் வீச்சு வண்டிகளையும் மற்றும் கலகம் அடக்கும் பொலிஸாரையும் தயார் நிலையில் வைத்திருந்தனர். ஆனபோதும் அவர்கள் இளைஞர்கள் மீது கை வைக்கவில்லை. மிகவும் அமைதியான முறையிலேயே பொலிஸார் நடந்துக்கொண்டனர். இளைஞர்களின் கோரிக்கைகள் நியாயமானது நாங்கள் எந்த இடையூரையும் ஏற்படுத்தவில்லை. வேண்டுமென்றால் ஜனாதிபதி செயலகத்தில் அதிகாரிகளுடன் கலந்துரையாடுவதற்கு ஏற்பாடு செய்து தருகின்றோம். போராட்டத்தை ஏற்பாடு செய்தவர்களில் யாரேனும் 5 பேர் வந்தால் அங்கு சென்று பேசலாம். உங்களின் கோரிக்கைகளை அவர்களின் ஊடாக வழங்கலாம் என கூறினார்கள். ஆனால் அப்போது ஏற்பாட்டு குழுவென கழுத்தில் பட்டிகளை அணிந்திருந்த யாருமே முன்வரவில்லை. அத்துடன் அந்த இளைஞர்கள் வீதிக்கு கொண்டு வர காரணமாக இருந்த அரசியல்வாதிகளின் அந்த குழுக்களும் தலைமறைவாகவே இருந்தன.
இந்த போராட்டம் 11.30 மணி வரை மிகவும் அமைதியாகவும் வெற்றிகரமான முறையிலுமே நடைபெற்றன. ஆனால் பின்னர் அரசியல்வாதிகள் தலையிட்டு போராட்டத்தை திசை திருப்பியுள்ளனர். இதன்படி 7 மணி வரை கொட்டும் மழைக்கும் மத்தியில் அவர்கள் அங்கேயே இருந்தனர். அது வரை பொலிஸார் மிகவும் அமைதியான முறையிலேயே நடந்துக்கொண்டனர். கோரிக்கைகள் நியாயமானதே ஆனால் உங்களின் போராட்டத்திற்கு நோக்கமென்ற எதுவும் இல்லாது இருக்கின்றது. திட்டமிடல் இல்லாது இருக்கின்றது. சரியான தலைமைத்துவம் இல்லாது இருக்கின்றது. இப்படியான நிலைமையில் தொடர்ந்தும் இந்த இடத்தில் இருப்பது அர்த்தமற்றது. அத்துடன் இன்றைய தினம் போயா விடுமுறை தினம் அதிகாரிகள் யாரும் அலுவலகங்களில் இருப்பதும் கிடையாது இதனால் போராட்டத்தை கைவிட்டு செல்லுங்கள் என பொலிஸார் அடிக்கடி கோரிக்கைகளை விடுத்து வந்தனர். எவ்வாறாயினும் நியாயமான முறையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து சென்றிருந்த போதும்  சில இளைஞர்கள் குழுக்கள் தொடர்ந்தும் போராட்டத்தில் ஈடுபட்டது.
இவ்வாறான நிலைமையிலேயே பொலிஸார் அவர்களை அடித்து விரட்ட வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது. சிலரின் அரசியல் தேவைக்காக இளைஞர்களை தூண்டிவிட்டு இவ்வாறாக போராட்டத்தை திசை திருப்பிய நடவடிக்கைகளை ஏற்றுக்கொள்ளவே முடியாது. இந்த அரசியல்வாதிகள் தொடர்பாக மலையக இளைஞர்கள் புரிந்துக்கொள்வார்கள் என்று நம்புகின்றோம். -(3)