காவத்தையில் பெரும் பதற்றம்: பொலிஸார், அதிரடிப் படையினர் குவிப்பு
காவத்தை கொட்டகெதென பிரதேசத்தில் தாயும் மகளும் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டிருந்த மூவரும் நிரபராதிகள் என கடந்த 28 ஆம் திகதி வியாழக்கிழமை தீர்ப்பளித்த கொழும்பு மேல் நீதிமன்றம் அம்மூவரையும் விடுதலை செய்ததையடுத்து அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து காவத்தை நகரில் கொட்டகெதென மற்றும் காவத்தை பிரதேச மக்கள் நேற்றுமுன்தினம் ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்த நிலையில் இதனை பொலிஸாரும் அதிரடிப்படையினரும் தடுத்து நிறுத்தியுள்ளனர்.
ஆர்ப்பாட்டம் நடத்தப்படவுள்ளதால் காவத்தை நகரில் உள்ள சகல வர்த்தக நிலையங்களையும் மூடுமாறு காவத்தை வர்த்தக சங்கத்தின் மூலம் சகல கடைகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டதையடுத்து கடைகள் அனைத்தும் இழுத்து மூடப்பட்டன. எனினும் இந்த ஆர்ப்பாட்டத்தை தடுப்பதற்காக காவத்தை நகரில் பொலிஸாரும் விசேட அதிரடிப்படையினரும் குவிக்கப்பட்டனர்.
காவத்தை நகருக்கு வரும் பொதுமக்களைப் பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் திருப்பி அனுப்பியதுடன் நகரில் எவரையும் நிற்கவேண்டாம் எனவும் மக்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். இதனால் காவத்தை மற்றும் அதனை அண்மித்த பிரதேசங்களில் பதற்றம் ஏற்பட்டதுடன் மக்கள் பெரும் அச்சமடைந்திருந்தனர்.
எனினும் கொட்டகெதென மற்றும் காவத்தை நகரை அண்மித்த பொதுமக்கள் எப்படியாவது ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டும் என்று கொட்டகெதென பிரதான வீதியில் குவிந்தவண்ணமிருந்தனர்.
இதை தடுப்பதற்கு பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினர் மும்முரமாக செயற்பட்டு மக்களைத் திரளவிடாது கலைத்தனர்.நூற்றுக்கணக்கில் பொலிஸாரும் அதிரடிப்படையினரும் கடமையில் ஈடுபடுத்தப்பட்டு ஆர்ப்பாட்டக்காரர்களை நகருக்குள் நுழையவிடாது தடுத்ததுடன் மக்களைச் சிறுசிறு கூட்டமாகக் கூட நிற்கவிடாது கலைத்தனர். இதனால் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறவில்லை. மோதல்கள் ஏதும் ஏற்படலாமென்று மக்கள் பெரிதும் அஞ்சினர்.
தங்கள் எதிர்ப்பு நடவடிக்கைக்கு இடமளிக்காத பொலிஸார் மற்றும் அதிரடிப்படையினர் மீது மக்கள் சினமடைந்துள்ளனர். கொட்டகெதென பகுதியில் நேற்று மாலையும் நூற்றுக்கணக்கில் மக்கள் திரண்டிருந்ததால் அப்பகுதிகளில் தொடர்ந்தும் பதற்றம் நிலவுகிறது.




