செய்திகள்

கிராம அலுவலர் தரம் 3க்கு ஆட்சேர்க்க விண்ணப்பம் கோரல்

இலங்கை ,உள்நாட்டலுவல்கள் அமைச்சினால்  கிராம அலுவலர் சேவையில் 3 ஆம் தரத்திற்கு சேர்த்துக் கொள்வதற்கான போட்டிப் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளதாக பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மலையக மக்கள் முன்னணியின் நிதிச் செயலாளரும் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் உபதலைவருமான அ.அரவிந்குமார் தெரிவித்துள்ளார்.
இப்பதவிக்கான கல்வித் தகைமைகள் மற்றும் தகுதிகள் அதிகளவில் மலையக இளைஞர்களுக்கு இருப்பதால் சம்பந்தப்பட்ட அனைவரும் இவ்வெற்றிடங்களுக்கு தவறாது விண்ணப்பிக்க வேண்டும்.
கல்வித் தகைமை, க.பொ.த. சாதாரண தர பரீட்சையில் தமிழ் மற்றும் கணிதம் அடங்கலாக நான்கு பாடங்களில் திறமைச் சித்தியுடன் ஒரே தடவையில் ஆறு பாடங்களில் சித்தியடைந்திருந்தல் வேண்டும். க.பொ.த. உயர்தரப் பரீட்சையில் 3 பாடங்களில் ஒரே அமர்வில் சித்தியடைந்திருத்தல் வேண்டும்.
விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படும் இறுதித் திகதிக்கு 21 வயதுக்கு குறையாமலும் 35 வயதுக்கு மேற்படாமலும் இருத்தல் வேண்டும்.
பரீட்சைக் கட்டணமாக 500 ரூபாவை தபால் உப தபால் அலுவலகத்திலோ அல்லது மாவட்ட செயலாளர் அலுவலகத்திலோ பிரதேச செயலாளர் அலுவலகத்திலோ பரீட்சை ஆணையாளர் நாயகத்தின் வருமானத் தலைப்பு இலக்கம் 20030213 இல் வரவு வைத்து அப்பற்றுச்சீட்டின் மூலப் பிரதியை விண்ணப்பப்படிவத்தில் அதற்கென ஒதுக்கப்பட்டுள்ள இடத்தில் ஒட்டுதல் வேண்டும். ( பற்றுச்சீட்டின் இலக்கம், திகதி மற்றும் எவ்வலுவலகத்தில் பணம் கட்டுப்பட்டுள்ளது என்பவற்றை தெளிவாக குறிப்பிடுதல் வேண்டும். பணம் செலுத்திய பற்றுச்சீட்டின் போட்டோ பிரதியையும் விண்ணப்பத்தின் பிரதியையும் விண்ணப்பதாரிகள் தம்வசம் வைத்துக் கொள்வது உபயோகமாக இருக்கும்.
பூரணப்படுத்தப்பட்ட விண்ணப்பப் படிவங்களை எதிர்வரும் 14.03.2016 ஆம்திகதிக்கு முன்பதாக பரீட்சை ஆணையாளர் நாயகம், இலங்கைப் பரீட்சைத் திணைக்களம், த.பெ.இல.1503, கொழும்பு என்ற முகவரிக்கு பதிவுத் தபாலில் அனுப்பப்படல் வேண்டும். விண்ணப்படிவம் அனுப்பப்படும் கடித உறையின் இடது பக்க மேல் மூலையில் கிராம  அலுவலர் 3 ஆம் தர ஆட்சேர்த்துக் கொள்ளப்படுவதற்கான போட்டிப் பரீட்சை 2016 என்று குறிப்பிடல் வேண்டும்.
விண்ணப்பப்படிவங்களை மலையக  மக்கள் முன்னணி மற்றும் மலையக  தொழிலாளர் முன்னணியின் அட்டன் தலைமைக் காரியாலயம் உள்ளிட்ட அனைத்து பிராந்திய மாவட்ட காரியாலயங்களிலும் பெறலாம். மலையக மக்கள் முன்னணியின் அனைத்து உள்ளூராட்சி சபைகளின் முன்னாள் உறுப்பினர்கள், அமைப்பாளர்கள் மற்றும் மாவட்டத் தலைவர்கள் ஆகியோருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
அதேவேளை இது தொடர்பான மேலதிக தகவல்களை எமது அனைத்து காரியாலயங்கள் மற்றும் பிரதேச அமைப்பாளரிடமிருந்தும் 051 4920300, 0514020302,  0512222793, 0522223052, 0552229838, 0554928206, 0552231526  ஆகிய தொலைபேசி இலக்கங்களோடு தொடர்பு கொண்டு பெற்றுக் கொள்ள முடியுமென மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
n10