செய்திகள்

கிழக்கில் நடைபெறும் இன வன்முறையை கிளறும் செயற்பாடுகள்  

கிழக்கு மாகாணத்தில் யுத்தத்திற்கு பின்னரான போக்கு தமிழ் மக்களை அடிமைகளாக உணரவைத்துள்ளது.அதிகாரமற்ற அரசியல் ஆழுமை அற்ற தலைமைகள் பாரபட்சமான அபிவிருத்தி வேலை வாய்ப்பில் புறக்கணிப்பு காணி அபகரிப்பு ஒரு இனத்திற்கு சார்பான அரச நிர்வாக கொள்கை தமிழ் மக்களின் அனைத்து நிர்வாகங்களின் மீதான ஆக்கிரமிப்பு என தமிழ் சமூகத்தின் மீதான அத்துமீறல்கள் இன்று இளைஞர்கள்  மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஒப்பீட்டளவில் கிழக்கு மாகாணத்தில் உள்ள தமிழர்கள் ஏனைய சமூகங்களை விடவும் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளனர்.

அரசியல் அதிகாரங்கள் உட்பட அரச நிர்வாகம் வரை முஸ்லீம் தலைமைகளின் கட்டுப்பாட்டில் உள்ளது. கிழக்கு மாகாண முதலமைச்சர் முஸ்லீம்களுக்கான முதலமைச்சராகவே செயல்பட்டுள்ளார். தமிழ் அரசியல் தலைமைகள் தட்டி கேட்க முடியாத கையாளாக தலைவர்களாக உள்ளனர்.

கிழக்கில் தமிழ் மக்களுக்கு எதிராக முஸ்லிம் அரசியல்வாதிகளால் மேற்கொள்ளப்படும் செயற்பாடுகள் தமிழ் சமூகம் முஸ்லீம் சமூகத்தின் மீது கொண்டிருந்த நம்பிக்கையை இல்லாது செய்துள்ளது. அதேவேளை எதையும் தடுத்து நிறுத்தவோ தட்டிக்கேட்கவோ முடியாத நிலையில் தமிழ் அரசியல் தலைமகள் இருப்பது இளைஞர் மத்தியில் ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக தொடர்ச்சியாக தமிழ் மக்களுக்கு கிழக்கில் அநீதி நடப்பதாக இளைஞர்கள் உணர்கிறார்கள்.

இதன் வெளிப்பாடுகள் இன்று சமூக வலைத்தளங்களில் பிரதிபலிப்பதுடன் யார் யாரையெல்லாம் இன வாதிகள் என்று ஆர்ப்பாட்டம் செய்தார்களோ அவர்களை தேடி சென்று அவர்களது இனவாதத்தை இன்று ஆயுதமாக பயன்படுத்த தொடங்கியுள்ளனர்.

கிழக்கில் நடப்பது அதிகார மோதலோ அல்லது ஆட்சி அமைப்பதற்கான சட்டையோ அல்ல இது இரண்டு இனத்தின் இருப்புக்கான போராட்டம்.

இதில் கடந்த  60 ஆண்டுகாலமாக சிங்கள அரசுடன் போராடி இருப்பதை எல்லாம் இழந்த தமிழ் சமூகம் இன்று முஸ்லிம் அரசியல்வாதிகளின் செயற்பாடுகளால் மேலும் மேலும் இழப்பதாக உணர்கின்றனர்.

இந்தநிலையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் இயலாமை இளைஞர்களையும் மாற்று சக்திகளையும் களத்தில் இறங்க தூண்டியுள்ளது.

இலங்கையில் இரத்த ஆறு ஓடவேண்டும் முஸ்லீம்களுக்கு எதிரான வன்முறை வெடிக்க வேண்டும் என்று செயற்படும் வெளி சக்திகள் கிழக்கில் உள்ள இந்த கொந்தளிப்பான சூழ்நிலையை பயன்படுத்த முயற்சிக்கின்றார்கள்.

எனவே இது குறித்து தமிழ் முஸ்லீம் தலைமைகள் உடனடியாக கவனம் செலுத்த வேண்டும் குறிப்பாக தமிழ் சமூகத்தின் நியாயமான யதார்த்தமான எண்ணங்களுக்கு, கோரிக்கைகளுக்கு மதிப்பளித்து தமிழ் மக்கள் மீது திணிக்கப்படும் காணி அபகரிப்பு மற்றும் ஆக்கிரமிப்புகளை கைவிட்டு கிழக்கில் இரண்டு சமூகங்களும் சமத்துவத்துடன் வாழும் சூழலை உருவாக்க முயற்சிக்க வேண்டும்.

அதை விடுத்து தமிழ் சமூகம் எப்படி போனாலும் பரவாயில்லை இஸ்லாமிய சமூகம் வாழ்ந்தால் போதும் என்று முஸ்லீம்களோ அல்லது முஸ்லீம் சமூகம் எப்படி போனாலும் பரவாயில்லை தமிழ் சமூகம் வாழ்ந்தால் போதும் என்று தமிழர்களோ சிந்திப்பீர்களாக இருந்தால் அது அழிவிற்கே வழிவகுக்கும்.

குறிப்பாக கிழக்கில் நடக்கும் காணி அபகரிப்பு பாரபட்சமான அபிவிருத்தி குறித்து தமிழ் முஸ்லீம் தலைமைகள் கவனம் செலுத்தாது மக்களை மோதவிட்டு பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்காது வேடிக்கை பார்ப்பது தொடருமாக இருந்தால் கிழக்கில் குழு மோதல்கள் உருவாகி பின்னர் அது இனமோதலாக மாறக்கூடிய சந்தர்ப்பம் உண்டு.

அதிலும் இந்த விஷயத்தில்  சிங்கள சக்திகளுடன்  தமிழ் இளைஞர்கள்  சேர்ந்து செயற்பட முயற்சிப்பது வன்முறை ஒன்று உருவாகுவதற்கான களநிலையை அதிகரித்துள்ளது. இதனை முன்கூட்டியே காப்போம்.

மட்டு.நகரான்