கிழக்கை கையாள்வதில் தமிழ் அரசியல் தலைமை தோல்வியடைந்துள்ளதா?
– அ.சி.யோதிலிங்கம்-
அரசியல் தீர்வு தொடர்பான கருத்தறியும் குழுவின் சந்திப்புக்களைத் தொடர்ந்தும் தமிழ்-முஸ்ஸீம் உறவுகள் நிலையும், அரசியல் செயற்பாடுகளும் எவ்வாறு இருக்கவேண்டும்? என்ற வாதங்கள் மீண்டும் களத்திற்கு வந்துள்ளன. “தமிழ் பேசும் மக்கள்” என்ற தமிழ் அரசியலின் மரபு ரீதியிலான எண்ணக்கருவை வளர்க்க வேண்டுமா? அல்லது முஸ்ஸீம் மக்கள் அரசியல் ரீதியாக கையாள்கின்ற “தமிழர்களும், முஸ்ஸீம்களும்” என்ற எண்ணக்கருவை வளர்க்க வேண்டுமா? என்பதே அந்த விவாதத்தின் கருப் பொருள்.
இப்பத்தியாளர் கடந்தமாதம் அனுபவ ரீதியாக கண்டு கொண்ட விடயங்களை முன்வைத்து தன்னுடைய கருத்துக்களை முன்வைக்கிறார்.இக்கருத்துக்கள் முடிந்த முடிவுகளல்ல, விவாதத்திற்கும் பரிசீலனைக்கும் உரியவை. அக்கறை கொண்டவர்கள் குறிப்பாக கிழக்கு மாகாணத்தை சேர்ந்தவர்கள் இந்த விவாதத்தில் பங்குகொள்ள வேண்டும் என பத்தியாளர் விரும்புகிறார். தமிழ் மக்கள் மட்டுமல்ல முஸ்ஸீம்களும் இந்த விவாதத்தில் பங்கு கொள்வது இருசமூகங்களுக்கும் பயனுடையதாய் இருக்கும் என்பது பத்தியாளரது அபிப்பிராயம். உணர்வு நிலையில் விவகாரங்களை அணுகாது அறிவு நிலையில் அணுகுவதே இரு சமூகங்களின் எதிர்காலத்திற்கும் ஆரோக்கியமாய் இருக்கும்.
இப்பத்தியாளர் கண்டு கொண்ட முதலாவது அனுபவம் கருத்தறியும் குழுவிற்கு இரு சமூகங்களைச் சேர்ந்தவர்களும் முன்வைத்த யோசனைகளாகும். முஸ்ஸீம் தரப்பலிருந்து கருத்துக்களை முன்வைத்தவர்களில் 95 வீதமானவர்கள் வட- கிழக்கு ஓருபோதும் இணைக்கக்கூடாது என்கின்ற கருத்தையே முன்வைத்தனர். பசீர்சேகுதாவூத் போன்ற ஒருசிலர் மட்டும் வட-கிழக்கு இணைக்கப்பட்டு தமிழர்களுக்கு ஓருஅதிகார அலகும் முஸ்ஸீம்களுக்கு ஒரு அதிகார அலகும் வழங்கப்பட வேண்டும் என்ற கருத்தை முன்வைத்துள்ளனர்.
ஈரோஸ் இயக்கத்தில் இருந்தமையினாலும், இரு சமூகங்களின் அபிலாசைகளையும் கோட்பாட்டு ரீதியாக புரிந்தவர் என்பதினாலும் இக்கருத்தை முன்வைத்திருக்கலாம். கொழும்பில் பணியாற்றும் நிந்தாவூரைச் சேர்ந்த சட்டத்தரணி மௌலானா கொழும்பு தமிழ்ச் சங்கத்தில் நடைபெற்ற கருத்தரங்கு ஒன்றில் உரையாற்றும் போது “பிரிந்த வடகிழக்கில் நிச்சயமற்ற முஸ்ஸீம் முதலமைச்சர் வேண்டுமா? அல்லது இணைந்த வடகிழக்கில் நிச்சயமான முஸ்ஸீம் முதலமைச்சர் வேண்டுமா”? என முஸ்ஸீம் தலமைகள் தீர்மானிக்க வேண்டும் எனக் குறிப்பிட்டார்.
வடகிழக்கு இணைக்கப்படக் கூடாது எனக் கருத்துத் தெரிவித்தவர்களில் சிலர் மேலும் ஒரு படி சென்று இணைக்கப்படக் கூடாது என அரசியல் யாப்பில் எழுதப்படல் வேண்டும் என்றும், முஸ்ஸீம் அரசியல் தலைமைகள் இது தொடர்பாக முடிவுகள் எடுக்கும் போது முஸ்ஸீம் சிவில் சமூகத்துடன் கலந்தாலோசிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளனர். முஸ்ஸீம்களின் பிரதான கட்சியான சிறீலங்கா முஸ்ஸீம் காங்கிரஸ், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப் போல கருத்தறியும் குழுவிற்கு எந்தக் கருத்துக்களையும் முன்வைக்கவில்லை.
ஆனால் முஸ்ஸீம் கட்சியின் செயலாளர் ஹசன் அலி முஸ்ஸீம் மக்களுக்கு ஒரு அதிகார அலகு கிடைக்குமானால் வட-கிழக்கு இணைப்பை ஆதரிக்கத் தயாராக இருக்கின்றோம் எனக் குறிப்பிட்டார்.
தமிழ்த்தரப்பைப் பொறுத்தவரை கருத்தறியும் குழுவிற்கு கருத்துத் தெரிவித்த அனைவருமே வட-கிழக்கு இணைக்கப்பட்ட அதிகார அலகு உருவாக்கப்படல் வேண்டும் எனக் கூறியுள்ளனர். அமைப்புக்கள் மட்டுமல்லாது தனிநபர் எவர்கூட இணைக்கப்படக் கூடாது எனக் கூறவில்லை. இந்த வகையில் வட-கிழக்கு இணைப்பு என்பது தமிழ் மக்களின் ஏகமனதான தீர்மானம் எனக் கூறலாம். தமிழ் மக்களின் கூட்டிருப்புக்கும், கூட்டுஅடையாளத்திற்கும், கூட்டுரிமைக்கும் இது மிக மிக அவசியமாக உள்ளதனாலேயே ஏகமனதான தீர்மானம் உருவாகியிருக்கின்றது. முன்னர் பிரதேச வாதம் காரணமாக கிழக்கில் இருந்த சிலர் வடகிழக்கு இணைக்கப்படக் கூடாது எனக் கூறியபோதும் இந்தத் தடவை ஒருவர் கூட வாய்திறக்கவில்லை. வட-கிழக்கு பிரிக்கப்பட்டபின் தோற்றம் பெற்ற நிலமையை அனுபவ ரீதியாக அனுபவித்தமையால் அதன் தாக்கம் அவர்களுக்கு நன்றாகவே தெரிகின்றது.
இப்பத்தியாளர் அனுபவரீதியாக கண்டு கொண்ட இரண்டாவது விடயம் கிழக்கு தமிழ் மக்களின் குறிப்பாக மட்டக்களப்பு அம்பாறை மாவட்டத் தமிழ் மக்களின் மனவுணர்வுகளாகும். சென்ற மாதம் 7 ஆம் திகதி மட்டக்களப்பில் செயற்படும் சமூக, பொருளாதார, கல்வி, அரசியல், சுற்றுப்புறச்சூழல் அபிவிருத்தி மையம் “உத்தேச அரசியல் யாப்பும் இனப்பிரச்சினைத் தீர்விக்கான முன்மொழிவுகளும”; என்ற தலைப்பில் ஆய்வுரை நிகழ்த்துமாறு இப்பத்தியாளரை அழைத்திருந்தது. பத்தியாளர் தனது ஆய்வுரையின் போது தமிழ்த்தேசம் திட்டமிட்டு அழிக்கப்படுவதுதான் இனப்பிரச்சினை என்றும் அதாவது தமிழ்தேசத்தின் தாங்கு தூண்களான நிலம், மொழி, பொருளாதாரம், கலாசாரம், மக்கள் கூட்டம் என்பன அழிக்கப்படுவது தான் இனப்பிரச்சினை என்றும் இதனால் தமிழ் மக்களுக்கான எந்தத் தீர்வும் இந்த அழிப்புக்களிலிருந்து தமிழ் மக்களிணைக் காப்பாற்றும் வகையில் தமிழ்த் தேசத்தை அங்கீகரிப்பதற்காக இருக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.
இதன் நடைமுறைச்சட்டவடிவம் தமிழர் தாயகத்தை உறுதிப்படுத்தல், சுயநிர்ணயமுடைய சுயாட்சி அதிகாரங்களை உறுதிப்படுத்தல், மத்திய அரசியல் தமிழ் மக்கள் ஒரு தேசமாகபங்கு பற்றுவதை உறுதிப்படுத்துதல், சுயாட்சி அதிகாரங்களுக்கும் மத்திய அரசின் கூட்டு அதிகாரங்களுக்குமான பாதுகாப்பை உறுதிப்படுத்தல் என்பனவாக இருக்க வேண்டும் என குறிப்பிட்டார். சுருக்கமாக அரசியல் தீர்வு “மத்தியில் கூட்டும் மாநிலத்தில் சுயாட்சியும”; என்ற கோட்பாட்டைக் கொண்டதாக இருத்தல் வேண்டும் என்றும் குறிபிட்டார். மட்டக்களப்பு சாள்ஸ் மண்டபத்தில் இடம்பெற்ற ஆய்வரங்கில் கலந்து கொண்ட எவரும் பத்தியாளரின் கருத்துக்களுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை.
கேள்வி நேரத்தின் போது ஒரு பொது மகன் முக்கியமான கேள்வியொன்றைக் கேட்டார். “வடக்கிணை விட கிழக்கு மாகாணம் வித்தியாசமான பிரச்சினைகளைச் சந்திக்கின்றது. தமிழ்- முஸ்ஸீம் முரண்பாடுதான் அதில் பிரதானமானது. மட்டக்களப்பு மாவட்டமும், அம்பாறை மாவட்டமும் முஸ்ஸீம் ஆதிக்கப்பிரச்சினையையும், திருக்கோணமலை மாவட்டம் சிங்கள ஆதிக்கப்பிரச்சினையும் சந்திக்கின்றது. இதனை முகம் கொள்வதில் தமிழ் அரசியல் தலமைகள் வரலாற்று ரீதியாகவே தோல்வியைக் கண்டுள்ளன. இந்தப்பிரச்சினையைக் கையாள்வதற்கான மூலோபாயங்கள், தந்திரோபாயங்கள்யாவை? என்பதே அந்தக் கேள்வி
இதற்கு பத்தியாளர் கூறிய பதில் “நான் யாழ்ப்பாண மாவட்டத்தைச் சேர்ந்தவன். இவ்வாறான பிரச்சினைகளை நாம் நேரடியாக அனுபவிக்கவில்லை. நீங்கள் தான் நேரடியாக அனுபவிப்பவர்கள். அதற்கான மூலோபாயம் தந்திரோ பாயங்களை நீங்கள்தான் கண்டுபிடிக்க வேண்டும். உண்மையில் இனப்பிரச்சிணையின் தாக்கம் கிழக்கில்தான் அதிகமாக உள்ளது. தமிழ்த் தேசத்தின் தூண்களான நிலம்,மொழி,பொருளாதாரம், கலாச்சாரம் அழிக்கப்படுவது கிழக்கில் தான் அதிகம் உள்ளது. ஆனால் தமிழ் அரசியல் தலைமையின் கவனக்குவிப்பு கிழக்கில் மட்டுப்படுத்தப்பட்டதே! தேசத்தின் தூண்கள் அழிக்கப்படுவதனை தடுப்பதற்கான சர்வதேச பாதுகாப்புப் பொறிமுறையை எவ்வாறு ஏற்படுத்துவது? என்பது பற்றி நீங்கள் தீவிரமாக யோசிப்பது நல்லது.”
இப்பத்தியாளர் அடுத்தநாள் கல்முனையில் ஒழுங்கு செய்யப்பட்ட அரசியல் தீர்வு பற்றிய கருத்தரங்கிலும் உரையாற்றினார். திடீரென ஒழுங்கு செய்யப்பட்ட கருத்தரங்கு என்பதால் பங்குபற்றியவர்களின் தொகை குறைவாகவே இருந்தாலும் அனைவரும் விடயங்களை நன்கு தெரிந்து கொண்ட முன்னேறிய பிரிவினராக இருந்தனர். மட்டக்களப்பில் வற்புறுத்திய விடயங்களை இங்கும்பத்தியாளர் முன்வைத்தார். கலந்துரையாடலின் போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மீதான அதிர்ப்தி மட்டக்களப்பை விட இங்கு அதிகமாக இருந்தது. இதில் பேசிய ஒருவர் “வடக்கைப் போலல்லாது இங்கு நாம் அன்றாடம் பிரச்சினையைச் சந்திக்கின்றோம். எமது இருப்பு நாளுக்கு நாள் கேள்விக் குறியாகிவருகின்றது.
வெளிநாட்டு ராஜதந்திரிகள் வடக்கிற்குத் தான் செல்கிறார்களே தவிர கிழக்கிற்கு வருவதில்லை கூட்டமைப்புத் தலமையும் அவர்களைஅழைத்துவருவதில்லை. கிழக்கில் இருக்கின்ற பாராளுமன்ற உறுப்பினர்களும் இதற்கான அழுத்தங்களை கூட்டமைப்புத் தலைமைகளுக்கு கொடுப்பதில்லை. வெளிநாடுகளுக்கு பயணம் செல்கின்ற போதும் கிழக்கின் பிரதிநிதிகள் அழைத்துச் செல்லப்படுவதில்லை. பயணம் செய்த வடக்குப் பிரதிநிதிகளும் கிழக்குப் பிரச்சினை பற்றி வாய் திறப்பதில்லை. சம்பந்தனை கிழக்குப் பிரதிநிதி எனக் கூறமுடியாது. அவர் பொது அரங்கில் கிழக்குப்பிரச்சினை பற்றி ஒருபோதுமே தீவிரமாக பேசியதில்லை, கிழக்கு மக்கள் பிரதிநிதிகளாக தலைமைக்கு தாளம் போடுபவர்களையே தலைமை நியமித்துள்ளது. அவர்களும் கிழக்குப் பிரச்சினையை பொது அரங்கிற்கு கொண்டு செல்வதில்லை.
“கல்முனை தமிழ்ப்பிரதேச செயலாளர் பிரிவை தரம் உயர்த்துவது தொடர்பாக கூட்டமைப்புத் தலமை பெரிய அளவிற்கு அக்கறை கொள்ளவில்லை. மக்கள் தாங்களாகவே அரசாங்கத்துடன் பேசி தீர்வுகாண முயற்சித்தமையையும் கூட்டமைப்பின் தலைமை குழப்பியுள்ளது. இப்பிரதேச செயலாளர் பிரிவை அரசியல் ரீதியாக வலுப்படுத்துவதில் தான் கல்முனைத் தமிழ் மக்களின் இருப்பு தங்கியுள்ளது. தமிழ் அரசியல் தலைமையின் வடகிழக்கு இணைப்பு என்ற கோரிக்கை வட-கிழக்கின் தமிழ் பிரதேசங்களை இணைத்தல் என்பதாக மாற்றம் பெற வேண்டும்.
இது இந்தியாவின் பாண்டிச் சேரியைப் போல் அல்லாது முன்னாள் பாகிஸ்தான் அரசு போல அல்லது தற்போதைய பலஸ்தீன அரசு போல நிலத் தொடர்ச்சியற்றிருக்கலாம். எதிர் காலத்தில் முஸ்ஸீம்களும் விருப்பம் தெரிவித்தால் முழுவடகிழக்கு இணைப்பு பற்றி தீர்மானிக்கலாம் முஸ்ஸீம்கள் விருப்பமற்று இருக்கும் வரை அவர்களை சிரமப்பட்டு தோளில் சுமக்க வேண்டியதில்லை” என்றார்.
இன்னொருவர் கருத்துத் தெரிவிக்கும் போது “தமிழ் அரசியல் தலைமைக்கு அம்பாறை மாவட்டத் தமிழர்கள் பற்றி பெரிய அக்கறையில்லை.அவர்கள் அம்பாறை மாவட்டத்தை முஸ்ஸீம்களுக்கு கொடுக்க தயாராக இருந்தனர்” என கோபத்துடன் குறிப்பிட்டார்.
மட்டக்களப்பிலும், கல்முனையிலும் மக்கள் கூறிய கருத்துக்கள் “தமிழ் பேசும் மக்கள்” என்ற தமிழ் அரசியல் தலமையின் பாரம்பரிய கோட்பாடு தோல்வியடைந்துள்ளது என்பதையே வெளிப்படுத்துகின்றது.இந்த தோல்வியடைந்த கோட்பாட்டை தமிழ் அரசியல் தலைமை தொடர்ந்தும் பின்பற்றுவதுதான் கிழக்கு அரசியலைக் கையாள்வதில் தொடர்ச்சியான தோல்விகளை அவர்களுக்கு கொடுத்திருக்கின்றது. இந்தக் கோட்பாடு காரணமாக தமிழ்-முஸ்ஸீம்முரண்பாடு கிழக்கில் இருக்கின்றது என்பதை அவர்கள் ஏற்றுக் கொள்ளவே தயங்குகின்றனர். மக்கள் மத்தியில் நெருக்கடி முற்றி வளர்ந்து வந்தபோதும்கூட கண்டும் காணாமலும் இருந்துள்ளனர். அந்த விவகாரங்களைத் தீர்ப்பதற்கான மூலோபாயஙகள், தந்திரோபாயங்களை வகுத்துக் கையாள்வதில்லை.
மாறாக முஸ்ஸீம்கள் ஆரம்பகாலம் தொடக்கமே தமிழ் பேசும் மக்கள் என்ற கோட்பாட்டை ஏற்கவில்லை. அவர்கள் மதத்தை அடிப்பையாகக் கொண்ட தனித்துவமான இனத்தவர் என்பதை நிறுவுவதிலேயே கவனமாக இருந்தனர். நடைமுறையிலும் அதை நோக்கியே செயற்பட்டனர். புpரதிநித்துவப்பிரச்சினை வந்தபோது தமிழர்கள் எம் சார்பில் பிரதிநிதித்துவத்தை வகிக்கமுடியாது நாமே எம் சார்பில் பிரதிநிதித்துவத்தை வகிக்கமுடியும் என வாதிட்டு தனியான பிரதிநிதித்துவத்தை 1889 இல் பெற்றனர். தொடர்ந்து தமிழ் மொழிப்பாடசாலகளை தமிழ்ப்;பாடசாலைகள், முஸ்ஸீம் பாடசாலைகள் எனப்பிரிக்க வேண்டும் எனக் கோரி அதிலும் வெற்றி கண்டனர். கிழக்கில் முஸ்ஸீம் பிரதேசங்களை வலுப்படுத்துவதிலும் முன்னேறினர். 30 வருடப் போரும் அதற்கான வாய்ப்புக்களைக் கொடுத்து. அவர்கள் அவ்வாறு தமது இன அடையாளத்தை வலியுறுத்துவது தவறு என்றும் கூற முடியாது. அது ஒரு மக்கள் கூட்டத்தின் உரிமை.
ஆனால் தமிழ் அரசியல் தலைமை இந்தப் போக்கினை தெளிவாக அடையாளம் காணாது அவர்கள் சம்மதிக்காத தமிழ் பேசும் மக்கள் கோட்பாட்டையே தொடர்ந்தும் உயர்த்திப்பிடித்து வந்தது. அதற்கேற்பவே தனது மூலோபாயங்களையும் தந்திரோபாயங்களையுயும் வகுத்துச் செயற்பட்டது. இக் கோட்பாடு எந்தக்காலத்திலும் சிறிதளவு கூட வெற்றிபெறவில்லை. தமிழரசுக் கட்சியிலும், ஆயூத இயக்கங்களிலும் முஸ்ஸீம்கள் நபர்களாக இணைந்தார்களே தவிர சமூகமாக இணையவில்லை. மறுபக்கத்தில் இந்தக் கோட்பாடு காரணமாக கிழக்கில் அரசியல் ரீதியாக தமிழ்ப்பிரதேசங்கள் வலுப்படுத்துவது கைவிடப்பட்டது.
முஸ்ஸீம்கள் மட்டக்களப்பு மாவட்டத்தில் தமது இன அடையாளத்தைப் பாதுகாப்பதற்காக முஸ்ஸீம் பிரதேச சபைகள், முஸ்ஸீம் கல்வி வலயம் என்பதைப் போராடிப் பெற்றனர். இதே போல அம்பாறை மாவட்டத்தில் தமிழ் கல்வி வலயத்தையும், கல்முனைப்பிரதேச செயலாளர் பிரிவு தரமுயர்த்தப்படுவதையும் போராடிப் பெற்றிருக்க வேண்’டும் தமிழ் வீதிகள் முஸ்ஸீம் பெயர்களாக மாறுவதை தடுத்து நிறுத்தியிருக்க வேண்டும். தற்போது அரசாங்கத்தில் கூட்டமைப்புக்கு இருக்கின்ற செல்வாக்கினைப் பார்க்கின்ற போது சம்பந்தன் மனம் வைத்தால் 24 மணித்தியாலத்திற்குள் இவற்றைப் பெற்றுக் கொள்ளமுடியும்.
தற்போதைய நிலையில் தமிழர்கள் தங்களது நலன்களையும், முஸ்ஸீம்கள் தங்களது நலன்களையும் பார்த்துக் கொள்வதே இருசமூகங்களுக்கும் ஆரோக்கியமாக இருக்கும். இந்த வகையில் பார்க்கும் போது தமிழ் அரசியல் தலைமை “தமிழ் பேசும் மக்கள்” என்ற கோட்hட்டைக் கைவிட்டு “தமிழர்கள் “ என்ற வகையிலேயே கோட்பாட்டையும் மூலோபாயங்களையும் தந்திரோபாயங்களையும் வகுத்துக் கொள்ள வேண்டும். இது தமிழ் அரசியல் தலைமை இதுவரை காலம் பின்பற்றிய அணுகுமுறைக்கு முற்;றிலும் புதிய அணுகுமுறை. ஆனால் வரலாறு இதைத்தான் வற்புறுத்துகின்றது. இதைத்தான் பின்பற்றுவது என முடிவெடுத்தால் வட-கிழக்கு இணைப்பு என்பது வட-கிழக்கின் தமிழ்ப்பிரதேசங்களை இணைத்தல் என்பதாக மாற்றமடைதல் வேண்டும். இந்தக் கோட்பாட்டு மாற்றமே கிழக்கில் தமிழ் பிரதேசங்களை அரசியல் ரீதியாக வலுப்படுத்துவதற்கு உதவக் கூடியதாக இருக்கும்.
இவ்வாறு இரு தரப்பும் தம்மை வலுப்படுத்தும் போது யதார்த்தம் இரு சமூகங’களையும் சுமூகமான வாழ்வுக்காகபுள்ளியை நோக்கிக் கொண்டு வரும். இந்நிலை வரும் போது முழுமையான வட-கிழக்கு இணைப்பிற்கு முஸ்ஸீம்களும் தமது சம்மதத்தை தெரிவிக்க முற்படலாம் .





