செய்திகள்

குப்பை  கொட்டும் அரசியல்

வீரகத்தி தனபாலசிங்கம் 

அனர்த்தங்கள் நடந்து முடிந்த பிறகு மிகுந்த அறிவாளிகள் போன்று பேசுவதில் எமது அரசியல்வாதிகள் மகாவல்லவர்கள். சம்பவங்களுக்குப் பிறகு சகலரும் புத்திசாலிகளாகி விடுவார்கள். ரயில்வே கடவை விபத்துக்கள் தொடக்கம் வெள்ளப்பெருக்கு, மண்சரிவு, சூறாவளி மற்றும் சுனாமி வரை சகலவிதமான செயற்கை, இயற்கை அனர்த்தங்களிலும் பெருமளவில் உயிரிழப்புகளும் சொத்து அழிவுகளும் ஏற்பட்ட கையோடு எதிர்காலத்தில் அவற்றின் பாதிப்புக்களில் இருந்து தப்புவதற்கான பெருவாரியான யோசனைகளை அரசியல்வாதிகள் முண்டியடித்துக்கொண்டு முன்வைப்பார்கள். சில நாட்கள் கடந்ததும் எதுவுமே நடக்காதது போன்று எல்லாவற்றையும் மறந்துவிடுவார்கள். பிறகு அவர்கள் விழித்தெழுவதற்கு ஏதாவது ஒரு அனர்த்தம் புதிதாக நடந்தாகவேண்டும்.

தலைநகர் கொழும்புக்கு வெளியே மீதொட்டமுல்லயில் சித்திரைப் புத்தாண்டு தினத்தன்று குப்பை மேடு சரிந்துவிழுந்து 32 பேர் மரணமடைந்ததுடன் 150க்கும் அதிகமான வீடுகள் புதையுண்டு போன அனர்த்தத்தையடுத்து கடந்த 10 நாட்களாக எமது அரசியல்வாதிகள் எதிர்காலத்தில் இத்தகைய அனர்த்தங்கள் நிகழாதிருப்பதை உறுதி செய்யக்கூடியவை என்று தங்கள் மூளைகளில் உதிக்கின்ற பலவிதமான யோசனைகளை வெளியிட்டுக்கொண்டிருப்பதை அவதானிக்கக்கூடியதாக இருக்கிறது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு புதிய வீடுகளையும் நஷ்டஈட்டுக் கொடுப்பனவுகளையும் வழங்குவதற்கான நடவடிக்கைகளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் முன்னின்று வழிநடத்திக்கொண்டிருக்கும் அதேவேளை, குப்பைமேடு சரிவு அனர்த்தத்துக்கு பொறுப்பு யார் என்பது குறித்து அரசாங்கத் தரப்பும் எதிரணியும் பரஸ்பரம் குற்றச்சாட்டுகளைச் சுமத்தியவாறு மக்களின் அவலங்களுக்கு மத்தியிலும் கட்சி அரசியலைச் செய்து கொண்டிருப்பதையும் காணமுடிகிறது.

மீதொட்டமுல்ல குப்பைமேடு அனர்த்தத்துக்கு வழிவகுத்த காரணிகள் மற்றும்  அவற்றுக்கு  பொறுப்பானவர்களைக் கண்டறிவதற்கு  விசாரணை நடத்த ஓய்வுபெற்ற நீதிபதியொருவரை நியமிக்கப்போவதாகவும், அவரிடமிருந்து ஒருமாத காலத்துக்குள் அறிக்கையை எதிர்பார்ப்பதாகவும் கடந்த வியாழக்கிழமை கொழும்பு ஊடக நிறுவனங்களின் தலைவர்களையும் பத்திரிகைகளின் ஆசிரியர்களையும் சந்தித்துப் பேசியபோது ஜனாதிபதி சிறிசேன அறிவித்திருந்தார். பாதிக்கப்பட்ட மக்களுக்கான மீள்குடியேற்ற நடவடிக்கைகளைத் துரிதப்படுத்துமாறு அதிகாரிகளுக்கு ஏற்கனவே அறிவுறுத்திய ஜனாதிபதி மீதொட்டமுல்லயில் இருந்து குப்பை மேட்டை அடுத்த ஒரு சில மாதங்களுக்குள் இராணுவத்தின் மேற்பார்வையில் அப்புறப்படுத்துமாறும் உத்தரவிட்டிருந்தார்.

1

வெளிநாட்டு சுற்றுப் பயணத்தை மேற்கொண்டிருந்த பிரதமர்  விக்கிரமசிங்க அதை விரைவாக முடித்துக்கொண்டு நாடு திரும்பி மீதொட்டமுல்லக்குச் சென்று நிலைவரங்களை நேரில் பார்வையிட்டு பாதிக்கப்பட்ட மக்களுடனும் கலந்துரையாடினார். ஆனால், குப்பை மேடு சரிவு அனர்த்தம் நடந்த உடனடியாக வெளிநாட்டில் இருந்துகொண்டு பிரதமர் தெரிவித்ததாகக்  கூறப்படுகின்ற கருத்து குறித்து சிவில் சமூக அமைப்புக்கள் கடுமையான கண்டனத்தைத் தெரிவித்திருந்தன.  அதாவது மீதொட்டமுல்ல பிரச்சினைக்குத் தீர்வுகாண்பதற்கான செயன்முறைகளில் அரசாங்கம் கவனம் செலுத்திக்கொண்டிருந்த வேளையில் அனர்த்தம் நேர்ந்துவிட்டது என்று அவர் குறிப்பிட்டதாக செய்திகள் வெளியாகியிருந்தன.

இதனிடையே , முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ மீதொட்டமுல்ல குப்பை மேட்டை அப்புறப்படுத்துவதற்கான திட்டமொன்றை தனது அரசாங்கம் ஆரம்பிக்கவிருந்ததாகவும் அதற்கிடையில் 2015 ஜனவரியில் அரசாங்கம் தோற்கடிக்கப்பட்டதால் அத்திட்டத்தை முன்னெடுக்க முடியாமற் போய்விட்டது என்றும் கூறியிருக்கிறார். அதாவது, ஜனாதிபதித் தேர்தலில் தனக்கு தோல்வி கிட்டாமல் இருந்திருந்தால் சரிந்து வீழ்வதற்கு மீதொட்டமுல்லயில் குப்பைமேடு இருந்திருக்காது ­– மக்கள் பலியாகியிருக்கமாட்டார்கள் என்று நாட்டு மக்கள் நம்பவேண்டுமென்று அவர் எதிர்பார்க்கிறார் போலும். சிங்கள புத்தாண்டு சுப நேரங்களை கணிப்பதில் தவறு இழைக்கப்பட்டதும் குப்பை மேட்டு சரிவு அனர்த்தத்துக்கு ஒரு காரணமாயிருக்கக்கூடும் என்று முன்னாள் ஜனாதிபதி கூறியதாகவும் செய்திகள் மூலம் அறியக்கூடியதாக இருந்தது.

இது இவ்வாறிருக்க, கொழும்பின் குப்பை அகற்றல் பிரச்சினைக்கு சிறந்த தீர்வொன்றை முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோதாபய ராஜபக் ஷ முன்வைத்திருந்ததாகக் கூறும் ராஜபக் ஷாக்களின் விசுவாசியான கூட்டு எதிரணி பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில, அத்திட்டத்தை இன்றைய அரசாங்கம் நடைமுறைப்படுத்த வேண்டுமென்றும் அதற்கான  நற்பெயர் யாரைச் சென்றடையும் என்பதைப்பற்றி சிந்தித்து அரசாங்கம் தயக்கம் காட்டக்கூடாது என்றும் வலியுறுத்தியிருக்கிறார். கொழும்பு மாநகர எல்லைக்குள் தினமும் சேகரிக்கப்படுகின்ற குப்பைகளையும் ஏற்கனவே மீதொட்டமுல்லயிலும் புளுமெண்டால் பகுதியிலும் மேடாகக் குவிந்து கிடக்கும் குப்பைகளையும் ரயில் மூலம் புத்தளத்தில் உள்ள சுண்ணக்கல் குவாரியில் கொண்டு சென்று கொட்டுவதே கோதாபயவின் திட்டமாக இருந்தது என்று கூறப்படுகிறது. கோதாபயவுக்கு செல்வாக்குத் தேடுவதற்கு முன்னெக்கப்படுகின்ற பிரசாரங்களுக்கு மீதொட்டமுல்ல குப்பை மேடு சரிவு அனர்த்தத்தையும் பயன்படுத்துகின்ற ஒரு முயற்சியாக உதய கம்மன்பிலவின் கருத்துகளை கடந்த வாரம் கொழும்பு மருதானையில் சமூக, சமய நடு நிலையத்தில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் சிவில் சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள் கண்டனம் செய்தனர் என்பது கவனிக்கத்தக்கது.

கொழும்பு மாநகர சபையின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவரும் தற்போதைய கூட்டு எதிரணியின் பாராளுமன்ற உறுப்பினருமான வாசுதேவ நாணயக்கார மாநகரக் கழிவுகளைப் பயன்படுத்தி பெரும் பணம் சம்பாதிக்கும் சில மோசடிக்காரர்கள் காரணமாக கொழும்பு குப்பைப் பிரச்சினை ஒருபோதுமே தீர்க்கப்படப் போவதில்லை என்று கூறியிருக்கிறார். இந்த மோசடிக்காரர்கள் அரசியல்வாதிகளுக்கும் அரசாங்க அதிகாரிகளுக்கும் இலஞ்சத்தைக் கொடுத்து குப்பைப் பிரச்சினையைத் தீர்த்து வைப்பதற்கான சகல முயற்சிகளையும் குழப்பியடிக்கிறார்கள். குப்பைகளின் மூலமாக ஆதாயம் தருகின்ற வர்த்தகத்தை செய்யும் இந்த பேர்வழிகள் குப்பை மேடுகளை இல்லாமல் செய்வதற்கான திட்டங்களைச் சீர்குலைப்பதற்கு எத்தகைய நடவடிக்கைகளையும் மேற்கொள்ளத் தயங்கமாட்டார்கள் என்று நாணயக்கார குற்றஞ்சாட்டியிருக்கிறார். அதேவேளை, இன்னொரு கூட்டு எதிரணி அரசியல்வாதியும் ராஜ பக் ஷ அரசாங்கத்தின் முன்னாள் அமைச்சருமான பேராசிரியர் திஸ்ஸ விதாரண மீதொட்டமுல்ல குப்பை மேட்டை அங்கிருந்து அகற்றாமல் பசளையாக மாற்ற முடியுமென்று ஒரு யோசனையைத் தெரிவித்திருக்கிறார்.

இதேவேளை, பெருநகரம் மற்றும் மேற்குப் பிராந்திய  அபிவிருத்தி  அமைச்சர்  பாட்டளி சம்பிக ரணவக்க நாடுபூராவும் குப்பைகளை  அகற்றும் பணிகளை  ஒழுங்கமைப்பதற்கு தனியானதொரு  மத்திய  கழிவற்றல்  முகாமைத்துவ   அதிகார சபை அமைக்கப்படவேண்டுமென்ற  யோசனையை  முன்வைத்திருக்கிறார். .குப்பை அகற்றல் பிரச்சினை  தொடர்பில் மக்களின் மனநிலையில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு உள்ளூராட்சி சபைகள் குப்பை  அகற்றலுக்காக  மக்களிமிடருந்து  கட்டணத்தை   அறவிடுவது பயன்தரக்கூடிய ஒரு  ஏற்பாடாக  அமையும் என்று நகர அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் கலாநிதி ஜகத் முனசிங்க தெரிவித்திருக்கிறார்.

2

குப்பை  அகற்றல்  நடவடிக்கைகள்  தொடர்பில் அமைச்சர்  சம்பிக்க ரணவக்கவுடன் கடந்த சில  நாட்களாக    சச்சரவில்  ஈடுபட்டுவரும்  மேல்மாகாண  முதலமைச்சர்  இசுறு  தேவப்பிரிய  மேல் மாகாண சபைக்கு  அரசாங்கம்  முழுமையான   அதிகாரங்களைத்   தருமாக  இருந்தால்  மாகாணத்தில் இருக்கும்  சுமார் 25 குப்பை கொட்டும் இடங்களை  மூன்று வருடங்களில்    துப்புரவு செய்து தரமுடியும்  என்ற  குறிப்பிட்டிருக்கிறார். இதனிடையே மீதொட்டமுல்ல குப்பை மேட்டினால் மக்களுக்கு  ஆபத்து நேரப் போகிறது என்று   அடிக்கடி எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டதையும் பொருட்படுத்தாமல்  அதிகாரிகள் அலட்சியமாக  இருந்ததனாலேயே  அனர்த்தம்  நேர்ந்திருக்கிறது என்று குற்றஞ் சாட்டியிருக்கும் ஜனதா விமுக்தி பெரமுனை ( ஜே.வி. பி )  இதற்கு  பொறுப்பான  அதிகாரிகளுக்கு  எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கத் தீர்மானித்திருப்பதாக  அறிவித்திருக்கிறது

இவ்வாறாக ஒவ்வொரு அரசியல்வாதியும் ஒவ்வொரு யோசனையையும் குற்றச்சாட்டையும் முன்வைத்துக்கொண்டிருக்கும் நிலையில் கடந்த சில நாட்களாக தலைநகரில் வீதிக்கு வீதி சிறிய குப்பை மேடுகள் உருவாகிய வண்ணமிருந்தன. கொழும்பு மாநகருக்குள் சேகரிக்கப்படும் குப்பைககளை மீதொட்டமுல்லயில் கொட்டுகின்ற பணிகள் நிறுத்தப்பட்டதால் இந்த நிலைமை தோன்றியது. இடைக்கால ஏற்பாடாக கொழும்புக்கு வெளியே சில இடங்களைத் தெரிவுசெய்து அங்கே குப்பைகளை கொட்டுவதற்கு வாகனங்கள் சென்றாலும் அப்பகுதிகளில் மக்கள் ஆர்ப்பாட்டங்களைச் செய்து தடுத்து வருகிறார்கள். குப்பை கொட்டுவதற்கு நீதிமன்ற உத்தரவைப் பெற்றபோதிலும்கூட மக்களின் எதிர்ப்பால் அதை நடைமுறைப்படுத்த முடியாத நிலையில் அரசாங்க அதிகாரிகள் இருக்கிறார்கள். மீதொட்டமுல்லயில் மக்களுக்கு ஏற்பட்ட அவலம் தங்களுக்கு ஏற்பட்டு விடக்கூடாது என்ற அந்தந்தப் பகுதி மக்களின் அக்கறை நிச்சயமாக நியாயமானதே. ஏனென்றால், தற்காலிக ஏற்பாடு என்று ஆரம்பித்து பின்னர் அதுவே நிரந்தர ஏற்பாடாக்கப்பட்டுவிடும் என்று மக்கள் அஞ்சுகிறார்கள். இதுவே மீதொட்டமுல்லயில் நடந்தது.

2009 ஆண்டுவரை கொட்டாஞ்சேனை புளுமெண்டால் பகுதியில் உள்ள நிலப்பரப்பொன்றிலேயே கொழும்பு மாநகரசபை குப்பைகளைக் கொட்டிவந்தது. அந்த ஆண்டு குப்பைமேட்டில் தீப்பிடித்ததையடுத்து அப்பகுதிமக்கள் அங்கு குப்பைகளை கொட்டுவதற்கு அனுமதிக்க போவதில்லை என்று போராட்டத்தில் ஈடுப்பட்டனர். பிரச்சினை நீதிமன்றம் வரை செல்லவே குப்பை கொட்டுவதற்கு புளுமெண்டால் பகுதியைத் தவிர்த்து மாற்று இடமொன்றை கண்டுப்பிடிக்குமாறு  கொழும்பு மாநகர சபைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. அதையடுத்தே கொலன்னாவ நகரசபையினால் குப்பை கொட்டுவதற்கு ஏற்கனவே பயன்படுத்தப்பட்டு வந்த மீதொட்டமுல்ல பகுதியில் கொழும்பு மாநகர சபை குப்பைகளை கொட்ட ஆரம்பித்தது. மீதொட்ட முல்லயில் 2 ஏக்கர் நிலமே இதற்கென முன்னர் ஒதுக்கப்பட்டிருந்தது. கடந்த 7 வருடங்களில் குப்பைமேடு 300 அடியாக உயர்ந்து 16 ஏக்கர் நிலத்தை ஆக்கிரமித்திருக்கிறது. கொழும்பு மாநகரசபை தினமும் 800 தொன் திண்மக்கழிவை மீதொட்டமுல்லயில் கொட்டிவந்தது. 2 ஏக்கர் நிலப்பகுதியில் இரு வருடங்களுக்கு மாத்திரமே குப்பை கொட்டுவதற்கு உச்ச நீதிமன்றம் அனுமதித்திருந்த நிலையில் இவ்வளவு காலமும் தொடர்ந்து அங்கு குப்பைகள் கொட்டப்பட்டு பெரும் அனர்த்தம் நேரக் கூடியதாக நிலைவரம் மாறியதற்கு ராஷபக் ஷ அரசாங்கமும் இன்றைய அரசாங்கமும் தான் பதில் கூறவேண்டும். .மீதொட்டமுல்ல மக்கள் பலதடவைகள் போராட்டங்களில் ஈடுப்பட்டிருந்தார்கள். கடந்த வருடம் மக்களின் எதிர்ப்பு போராட்டத்தையடுத்து அப்பகுதியில் குப்பை கொட்டுவதை நிறுத்துவதாக  கொழும்பு மாநகரசபை நீதிமன்றத்திற்கு அறிவித்தது. கம்பஹா மாவட்டத்தின் ஏக்கல பகுதியை தெரிவு செய்த போதிலும், அங்குள்ள மக்களின் எதிர்ப்பு காரணமாக (அவர்களின் போராட்டத்தை அதிமேற்றிராணியார் கார்டினல் மல்கம் ரஞ்சித்தும் பௌத்தபிக்குமாரும் ஆதரித்தனர்.) அதுவும் கைவிடப்பட்டது. புத்தளத்தில் கைவிடப்பட்டிருக்கும் சுண்ணக்கல் குவாரியில் கொழும்பு குப்பைகளை  கொட்டுவதற்கான இன்னொரு திட்டம் சுற்றாடல் பாதுகாப்பு செயற்பாட்டாளர்களின் எதிர்ப்பின் விளைவாக ஒப்பேறவில்லை. வில்பத்து வன விலங்கு பூங்கா வலயத்தின் எல்லைக்காவல்பகுதியில் இருந்து ஒரு மைல் தூரத்திற்குள் அந்த சுண்ணக்கல் குவாரி அமைந்திருக்கிறது என்பதே இந்த செயற்பாட்டாளர்கள் தங்கள் எதிர்ப்பிற்கு கூறிய காரணம்.

இத்தகையதொரு சூழ்நிலையிலேயே குப்பை கொட்டுவதற்கு இடத்திற்கு இடம்மாறி கொண்டிருப்பதே அரசாங்கத்தின் தந்திரோபாயமாக இருந்துவந்தது. மக்கள் எதிர்ப்புக் காட்டத் தொடங்கியதும் அந்த தந்திரோபாயத்தையும் அரசாங்கத்தினால் தொடர்ந்து முன்னெடுக்க முடியவில்லை. உண்மையிலேயே மிகவும் சிக்கலான இந்த பிரச்சினையை கையாளுவதற்கு இது உகந்ததொரு தந்திரோபாயமல்ல.

உலகளாவிய ரீதியில் ஒப்பிடும் போது இலங்கையின்  திண்மக்கழிவு சேகரிப்பு ஒரு சொற்பமே. உலகின் பல பெரிய நகரங்கள் இலங்கை வருடாந்தம் சேகரிக்கின்ற திண்மக்கழிவுகளை காட்டிலும் கூடுதலான கழிவுகளை தினமும் சேகரிக்கின்றன என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். அந்த நகரங்களில் சேகரிக்கப்படுகின்ற திண்மக்கழிவுகளில் பெரும் பகுதி மீள்சுழற்சிக்கு உட்படுத்தப்படுகிறது. இலங்கையின் திண்மக்கழிவு அகற்றல் பிரச்சினைக்கு நீண்டகால அடிப்படையிலான எந்தவொரு திட்டமும் இல்லாமையும் அரச நிறுவனங்களுக்கிடையில் ஒருங்கிணைப்புச் செயற்பாடு இல்லாமையுமே காரணம் என்று இத்துறை சார்ந்த நிபுணர்கள் குற்றஞ்சாட்டுகிறார்கள்.

3

ஆபிரிக்க நாடான எதியோப்பியாவின் தலைநகர் அடிஸ்அபாபாவில் பாரிய குப்பை மேடு சரிந்ததில் 46 பேர் பலியான அனர்த்தம் நிகழ்ந்து ஒரு மாத காலத்துக்குள் மீதொட்டமுல்ல அனர்த்தம் இடம்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

பெரிய வெள்ளியுடன் சித்திரைப் புத்தாண்டும் ஒருங்கிசைந்து வந்த தினத்தில் மீதொட்டமுல்லயில் இடம்பெற்றது இயற்கை அனர்த்தம் அல்ல. அத்துடன், எதிர்பார்க்காததும் அல்ல. 300 அடி உயரமான குப்பை மேடு எந்தத் திகதியில் எந்த நேரத்தில் நிலைகுலையும் என்பது மாத்திரம் தான் மக்களுக்கும் அதிகாரிகளுக்கும் தெரியாமல் இருந்ததே தவிர, அனர்த்தம் எதிர்பார்க்கப்பட்ட ஒன்றேயாகும். அந்தக் குப்பை மேட்டுக்கு எந்த விதத்திலும் பொறுப்பானவர்கள் அல்லாத வறிய மக்கள் அரசாங்கங்களின் அலட்சியப் போக்கிற்கு  பெரும் விலையைச் செலுத்தியிருக்கிறார்கள். தொடர்ந்தும் குப்பைகளைக் கொண்டு வந்து கொட்டவேண்டாம் என்று ஒரு மாதத்துக்கு முன்னர் கூட மீதொட்டமுல்ல மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்கள். மழை பெய்யுமேயானால் அந்தக் குப்பை மேடு மீண்டும் சரியும் அபாயம்  இருப்பதாக அதிகாரிகள் எச்சரிக்கை செய்திருக்கிறார்கள்.

தற்காலிகமாக குப்பை கொட்டுவதற்குக் கூட இடமொன்றைத் தேடிக் கொள்ள முடியாமல் அரசாங்கம் தடுமாறிக் கொண்டிருக்கிறது.

குப்பை கொட்டுவதற்கு  தெரிவு செய்யப்பட்ட  இடங்களில்  மக்கள் காட்டும்  எதிர்ப்பை   முறியடிக்கும் ஒரு நடவடிக்கையாக  குப்பை அகற்றல் பணிகள் சகல உள்ளூராட்சி  சபைகளினாலும்  மேற்கொள்ளப்பட வேண்டிய  அத்தியாவசிய  சேவை என்று  ஜனாதிபதி சிறிசேன வர்த்தமானிப் பிரகடனத்தை   வெளியிட நிர்ப்பந்திக்கப்பட்டார். கம்பஹா  மாவட்டத்தின்  தொம்பே  பகுதியில்  ஆர்ப்பாட்டம் செய்த மக்கள் மீது பொலிஸார் கண்ணீர்ப்புகைக் பிரயோகம்  செய்ய வேண்டிய  அளவுக்கு நிலைவரம் சென்றிருக்கிறது.

பொது மக்கள் பாதுகாப்புச் சட்டத்தின் ஏற்பாடுகளின் கீழேயே இந்த வர்த்தமானிப் பிரகடனம் வெ ளியிடப்பட்டுள்ளதால் குப்பை  கொட்டுவதற்கு மேற் கொள்ளப்படும் நடவடிக்கைகளை  தடுக்க முயற்சிப்பவர்களும் அவர்களுக்கு தூண்டுதலாக  இருக்கக் கூடியவர்களும் கைது செய்யப்பட்டு  வழக்குத் தொடரப்பட முடியும்.

குப்பை  அகற்றல் நடவடிக்கைகளைப்  பொறுத்தவரை இது காலவரையில்  அரசாங்கங்கள்   மக்களுக்கு  பாதிப்பில்லாத வகையில் நிரந்தரமான  ஏற்பாடுகளில்  கவனம் செலுத்தாமல் அவ்வப் போது வசதிக்கேற்றமுறையில் இடைக்கால ஏற்பாடுகளை  மேற்கொண்டுவிட்டு  வாளாவிருந்த காரணத்தாலேயே  மக்கள்  இப்போது கொதித்தெழுகிறார்கள்  என்பதை  இன்றைய ஆட்சியாளர்கள்  புரிந்து கொள்ள வேண்டும். மீதொட்டமுல்ல  அனர்த்தத்திற்குப் பின்னரும் கூட ஆட்சியாளர்கள்  பேசுவதைப் போன்று   செயலில் காட்டுவார்களா என்ற நியாயமான சந்தேகம் மக்களுக்கு இருக்கிறது.