குறைந்தபட்ச எதிர்பார்ப்புகளையும் கூட நிறைவு செய்யாத இருவருட ஆட்சி
வீரகத்தி தனபாலசிங்கம்
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிதும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினதும் தலைமையிலான தேசிய ஐக்கிய அரசாங்கத்தின் 5 வருட பதவிக் காலத்தில் இரு வருடங்கள் நிறைவடைகின்ற நிலையில், அதன் இதுவரையான செயற்பாடுகள் தொடர்பிலான விமர்சனங்கள் பெரும்பாலும் நல்லாட்சியைக் கொண்டு வருவதாக அளிக்கப்பட்ட வாக்குறுதியை நம்பி வாக்களித்த மக்களின் எதிர்பார்ப்புகளில் இருந்து பெருமளவுக்கு விடுபட்டுப் போனதாகவே அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரல் இருக்கிறது என்ற குற்றச்சாட்டை மையமாகக் கொண்டவையாகவே அமைந்திருக்கின்றன. சுருக்கமாகச் சொல்வதனால் மக்களுக்கு உறுதியளித்தவற்றை அரசாங்கம் செய்யவில்லை. மாறாக எவற்றைச் செய்யக்கூடாது என்று மக்கள் எதிர்பார்த்தார்களோ அவற்றையெல்லாம் கடந்த இரு வருடங்களாக அரசாங்கம் தாராளமாகச் செய்து கொண்டிருக்கிறது. நல்லாட்சி பற்றிய உறுதி மொழிகளை அலட்சியம் செய்கின்ற அதேவேளை, முன்னைய ராஜ பக் ஷ ஆட்சியின் தவறுகளை அரசாங்கம் திரும்பவும் செய்துக் கொண்டிருக்கிறது. அதன் மூலம் தனக்குத் தானே பிரச்சினைகளை தொடர்ச்சியாக உருவாக்கிக் கொண்டிருக்கிறது.
ஜனநாயகத்தை மீட்டெடுப்பது பற்றியும் புதிய அரசியல் கலாசாரமொன்றை உருவாக்குவது பற்றியும் இரு வருடங்களுக்கு முன்னர் பேசிய அரசாங்கத் தலைவர்கள் ஆட்சி நிருவாகத்தின் எந்தவொரு செயற்பாட்டையும் சுமுகமாக முன்னெடுக்க முடியாமல் குழப்ப நிலைக்குள் தாங்களாகவே சிக்கிக் கொண்டிருக்கிறார்கள்.
நவீன இலங்கையின் அரசியல் வரலாற்றில் முன்னென்றுமில்லாத ஊழல் மோசடிகளையும் அதிகார துஷ்பிரயோகங்களையும் செய்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்ட ராஜபக் ஷாக்கள் ‘ஊழல் ஆட்சியை விரட்டியடிப்போம்’ என்ற முழக்கத்துடன் மக்களை அணி திரட்டி வீதிப் போராட்டங்களைத் தலைமை தாங்கி நடத்தக் கூடியதாக மிகக் குறுகிய காலத்துக்குள்ளாகவே அரசியல் சூழ்நிலை மாறியிருக்கின்ற விசித்திரத்தைச் காணக்கூடியதாக இருக்கிறது. ராஜபக் ஷ ஆட்சியைத் தோற்கடிப்பதற்கான அரசியல் இயக்கத்துக்கு உறுதுணையாகச் செயற்பட்டு ஆட்சி மாற்றத்துக்கு பெரும் பங்களிப்பைச் செய்த சிவில் சமூக அமைப்புகள் கடந்த செவ்வாய்க்கிழமை கொழும்பு விஹாரமாதேவி பூங்காவில் நடத்திய அமைதி வழிப் போராட்டத்தில் 2015 ஜனவரி ஜனாதிபதி தேர்தலில் நாட்டு மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்தன. அந்தப் போராட்டத்தில் அரசாங்கத்தின் முக்கிய அமைச்சர்கள் சிலரும்கூட கலந்து கொண்டு தமது ஆதரவை வெளிக்காட்டிய இன்னொரு விசித்திரத்தையும் கண்டோம். நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சி முறையை ஒழிக்க வேண்டும்; இன, மத தீவிரவாதத்துக்கு எதிராக உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்; ஊழல் மோசடிகள் மற்றும் குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்களை சட்டத்தின் முன்னிறுத்த வேண்டும்; இருவருடங்களுக்கும் அதிகமான காலமாக ஒத்திவைக்கப்பட்டுக் கொண்டிருக்கும் உள்ளூராட்சித் தேர்தல்களை விரைவில் நடத்த வேண்டும்; மாகாண சபைத் தேர்தல்களை உரிய காலத்தில் நடத்த வேண்டும்; தேசிய இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண அதிகாரப் பரவலாக்கலை முன்னெடுக்க வேண்டும்; மத்திய வங்கி பிணை முறி கொள்வனவு ஊழல் விவகாரத்தில் சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக கட்சி மட்டத்திலும் அரசாங்க மட்டத்திலும் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை அந்தப் போராட்டத்தில் சிவில் சமூக அமைப்புகள் முன்வைத்தன. ஆட்சி மாற்றத்தைக் கொண்டு வருவதற்காக பல்வேறு இடர்பாடுகளுக்கு முகம்கொடுத்து பாடுபட்ட சக்திகளின் நம்பிக்கையை அரசாங்கம் பெருமளவுக்கு இழந்து விட்டது என்பதற்கு இது ஒரு பிரகாசமான உதாரணமாகும். வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கான ஆற்றல் தனக்கு இருக்கிறது என்பதை செயல்வழியாக அராசாங்கம் நிரூபிக்காத பட்சத்தில் மக்களின் ஆதரவை அது தொடர்ந்தும் இழந்து கொண்டே போகும் என்று இதே சிவில் சமூக அமைப்புகள் நீண்ட காலமாகவே சுட்டிக்காட்டி வந்திருக்கின்றன. ஆனால், வாக்குறுதிகளை நிறைவேற்றக்கூடிய ஆற்றல் தன்னிடம் இல்லை என்பதையே அரசாங்கம் தொடர்ச்சியாக நிரூபித்துக் கொண்டிருக்கிறது.

இலங்கையின் அரசியல் வரலாற்றில் முன்னென்றுமில்லாத வகையில் இரு பிரதான அரசியல் கட்சிகளான ஐக்கிய தேசியக் கட்சியும், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியும் சேர்ந்து அமைத்த தேசிய ஐக்கிய அரசாங்கம் இனப்பிரச்சினை உட்பட நாடு எதிர்நோக்குகின்ற முக்கியமான பிரச்சினைகளுக்குக் கருத்தொருமிப்பின் அடிப்படையில் தீர்வுகளை காண்பதற்கு பயனுறுதியுடைய முயற்சிகளை முன்னெடுப்பதற்குக் கிடைத்திருக்கக் கூடிய அரியவாய்ப்பு என்று எதிர்பார்க்கப்பட்டது. பாரம்பரியமான அரசியல் வைரிகளான இவ்விரு கட்சிகளும் இணைந்து நடத்தக்கூடிய அரசாங்கம் பல பிரச்சினைகளுக்கு முழு நிறைவான தீர்வுகளைத் தராவிட்டாலும் ஒப்பீட்டளவில் ஒரு முன்னேற்றகரமான அரசியல் ஏற்பாடுகளுக்கு வழிவகுக்கும் என்று நம்பப்பட்டது. ஆனால், இரு வருட பரீட்சார்த்தம் பெரும் ஏமாற்றமாகவே போய்விட்டது. நல்லாட்சி, புதிய அரசியல் கலாசாரம் என்றெல்லாம் இரு கட்சிகளினதும் தலைவர்களும், அரசியல்வாதிகளும் என்னதான் பேசினாலும் பழைய கட்சி அரசியல் மாச்சரியங்களில் இருந்து அவர்களால் விடுபடவே முடியவில்லை. தனித் தனியாக ஐக்கிய தேசியக் கட்சியும், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியும் ஆட்சியமைத்த கால கட்டங்களில் முன்னெடுக்கப்பட்ட கட்சி அரசியலுக்குப் புறம்பாக இரு கட்சிகளுமே சேர்ந்து அரசாங்கத்தை அமைத்திருக்கும் பட்சத்திலும் கட்சி அரசியலை எவ்வாறு முன்னெடுப்பது என்பதற்கான பரீட்சார்த்தமாகவே இந்த தேசிய ஐக்கிய அரசாங்கம் நிரூபிக்கப்பட்டு நிற்கிறது. இரு கட்சிகளுக்கும் இடையில் ஆட்சி நிருவாகத்தைப் பொறுத்தவரை உள்நாட்டுக் கொள்கைகளிலும் சரி, வெளியுறவுக் கொள்கைகளிலும் சரி முரண்பாடுகளே மிகையாக இருக்கின்றன. ஆரம்பக் கட்டத்தில் காணப்படக் கூடியதாக இருந்த ஒரு குறைந்தபட்ச இணக்கப் போக்கைக் கூட இப்போது காண முடியவில்லை.
கடந்த இரு வருட காலத்திலும் இரு கட்சிகளினதும் அரசியல்வாதிகளில் பெரும்பாலானவர்கள் அடுத்த அரசாங்கத்தை தாங்கள் தனியாக எவ்வாறு அமைப்பது என்பது குறித்துச் சிந்தித்துக் கொண்டிருந்த அளவுக்கு சேர்ந்திருந்து ஆட்சியை நடத்தி நாட்டுப் பிரச்சினைகளுக்குத் தீர்வு ஒன்றை காண வேண்டும் என்ற அவசியம் குறித்து சிந்தித்தது கிடையாது என்றுதான் சொல்ல வேண்டும். அரசாங்கத்தில் இருந்து வெளியேற வேண்டுமென்ற முனைப்பு ஐக்கிய தேசியக் கட்சி அரசியல்வாதிகளை விடவும் சுதந்திரக் கட்சி அரசியல்வாதிகளிடமே தீவிரமானதாக இருக்கிறது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவைப் பொறுத்தவரை, சுதந்திரக் கட்சியின் தலைவராக இரண்டரை வருடங்களாக இருந்து வருகின்ற போதிலும் அவரால் கட்சியை முழுமையாக தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வர முடியவில்லை. இதற்குக் காரணம் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக் ஷ தலைமையிலான கூட்டு எதிரணியில் சுதந்திரக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களில் நாற்பதிற்கும் அதிகமானவர்கள் இருப்பதேயாகும். ஜனாதிபதியின் அணியில் இருக்கின்ற சுதந்திரக் கட்சி அமைச்சர்களும் பாராளுமன்ற உறுப்பினர்களும் கூட எதிர்காலத்தில் அவசியமானால் ராஜபக் ஷவுடன் சேர்ந்து இயங்குவதில் நம்பிக்கை கொண்டவர்களாகவே இருக்கிறார்கள். இதன் காரணமாக ஜனாதிபதிக்கு ஒரு திரிசங்கு நிலை. ஐக்கிய தேசியக் கட்சியுடனான முரண்பாடுகளை பேசித் தீர்த்துக் கொள்வதற்கு டிசம்பர் 31 வரை தனக்கு அவகாசம் தருமாறு தனது கட்சி அமைச்சர்களையும் பாராளுமன்ற உறுப்பினர்களையும் வேண்டுகின்ற அளவுக்கு அரசாங்கத்தில் இருந்து வெளியேற வேண்டுமென்ற தனது கட்சியினரின் நெருக்குதல் ஜனாதிபதிக்கு இருக்கிறது. ராஜபக் ஷ மீண்டும் ஆட்சியதிகாரத்துக்கு வந்துவிடக் கூடாது என்பதில் ஜனாதிபதிக்கும் பிரதமர் விக்கிரமசிங்கவுக்கும் இடையில் இருக்கின்ற புரிந்துணர்வே தேசிய ஐக்கிய அரசாங்கத்தை பெருமளவு முரண்பாடுகளுக்கு மத்தியிலும் இதுவரை தக்க வைத்துக் கொண்டிருக்கிறது.
ஆனால், வெறுமனே அத்தகையஅரசியல் அனுகூலத்தை அடிப்படையாகக் கொண்ட புரிந்துணர்வு மாத்திரம் ஆட்சி நிருவாகத்தை மக்களுக்கு பயனுறுதியுடையதாக நடத்துவதற்கு உதவப் போவதில்லை. இருவருடகால அனுபவம் அதை பிரகாசமாக நிரூபிக்கிறது.
பொருளாதார ரீதியிலும் சரி அரசியல் ரீதியிலும் சரி அரசாங்கத்திடம் நீண்டகால நலன்களின் அடிப்படையான நோக்கு எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்குப் பதிலாக அரசாங்கத்தின் பொருளாதார முகாமைத்துவம் வாழ்க்கைச் செலவை தொடர்ச்சியாக அதிகரித்துக் கொண்டே போகிறது. அரசாங்கத்தினால் முன்வைக்கப்படுகின்ற பொருளாதார அபிவிருத்தித் திட்டங்களுக்கான எதிர்ப்பு வெளியில் எதிரணியிடமிருந்து வருவதற்கு முன்னதாக அரசாங்கத்திற்குள் இருந்தே வெளிப்பட்டு விடுகிறது. இரு வருடங்களாக பிரதமர் விக்கிரமசிங்கவின் தலைமையின்கீழ் பொருளாதார முகாமைத்துவம் தொடர்பான அமைச்சரவைக்குழு இயங்கி வந்தது. பொருளாதாரம் மற்றும் அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பிலான முக்கியமான தீர்மானங்களை இந்தக் குழுவே மேற்கொண்டு வந்தது. இப்போது அத்தகைய தீர்மானங்களை எடுப்பதற்கு தேசிய பொருளாதார கவுன்சில் ஒன்றை ஜனாதிபதி நியமித்திருக்கிறார். இது பிரதமர் தலைமையிலான குழுவுக்கு மேலானதாக இருக்கும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. பொருளாதாரக் கொள்கை மற்றும் அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பில் அரசாங்கத்தின் ஐக்கிய தேசியக்கட்சி முகாமே மேலாதிக்கம் செய்துவருகின்றது என்று சுதந்திரக்கட்சி முகாம் தொடர்ச்சியாக குற்றஞ்சாட்டி வந்திருக்கிறது. அடுத்த மூன்று வருட காலத்துக்கான பொருளாதாரத் திட்டங்களை துரிதப்படுத்துவதற்கான முக்கிய தீர்மானங்களை எடுப்பதே தேசிய பொருளாதாரக் கவுன்சிலின் நோக்கம் என்று ஜனாதிபதி தரப்பில் கூறப்பட்டிருந்தாலும், இது உண்மையில் ஐக்கிய தேசியக்கட்சியின் மேலாதிக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்கான ஒரு தந்திரோபாயமே என்பதில் சந்தேகமில்லை. கட்சி அரசியல் நோக்கங்களை அடிப்படையாகக் கொண்ட இவ்வாறான சூழ்ச்சித்தனமான அணுகுமுறைகளே அரசியலமைப்பு வரைவுச் செயன்முறைகள் மற்றும் முன்னைய அரசாங்க காலத்து ஊழல் மோசடிகளுக்கு எதிரான நடவடிக்கைகள் உட்பட சகல முனைகளிலும் அரசாங்கத்தின் செயற்பாடுகளில் மந்த நிலைக்கு பிரதான காரணமாகும்.

ஒட்டு மொத்தத்தில் நோக்குகையில் இன்றைய அரசாங்கத்தைப் பதவிக்குக் கொண்டுவருவதற்கு வாக்களித்த மக்களின் குறைந்த பட்ச எதிர்பார்ப்புகளைக்கூட பூர்த்தி செய்ய முடியாத கையாலாகாத நிலையில் ஜனாதிபதி சிறிசேனவும் பிரதமர் விக்கிரமசிங்கவும் இருக்கிறார்கள். இத்தகைய சூழ்நிலை ராஜபக் ஷாக்களுக்கு மிகவும் வசதியானதாக அமைந்து வருகிறது. அரசாங்கம் அதன் பதவிக் காலத்தின் எஞ்சிய மூன்று வருடங்களையும் பூர்த்தி செய்யும் வரை காத்திருப்பதற்கு ராஜபக் ஷாக்கள் தயாரில்லை என்றே தெரிகிறது. சகல முனைகளிலும் எதிர்ப்பியக்கத்தை முன்னெடுத்து இந்த அரசாங்கத்தினால் நாட்டை அரசியல் உறுதிப்பாட்டுடன் ஆட்சி செய்ய இயலாது என்ற தோற்றப்பாட்டை ஏற்படுத்தி, நிலையான ஆட்சியைத் தரக்கூடியவர்கள் தாங்களே என்று நாட்டு மக்களுக்குக் காட்டிக் கொள்ளும் ஒரு தந்திரோபாயத்தையே ராஜபக் ஷாக்கள் கையாளுகின்றார்கள். அந்த தந்திரோபாயம் வெற்றி பெறுவதற்கு அரசாங்கம் வலிந்து இடம் கொடுப்பது போன்று நடந்து கொள்கிறது.




