செய்திகள்

குற்றவாளிகளை தப்பிக்க விடமாட்டேன் : ஜனாதிபதி

குற்றவாளிகளுக்கு உயர்ந்த பட்ச தண்டனையைப் பெற்றுக் கொடுப்பதற்காகவே மத்திய வங்கியின் பிணைமுறி தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழு நியமிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
நடந்த சம்பவங்களை மூடி மறைப்பதற்காகவே ஜனாதிபதி ஆணைக்குழு நியமிக்கப்பட்டுள்ளதாக சிலரால் குற்றஞ் சாட்டப்பட்டாலும் கூட ஊழல் மோசடி மற்றும் தவறான நிர்வாகம் என்பன அதிகளவில் காணப்பட்ட கடந்த அரசாங்கத்திலிருந்து தான் பதவி விலகியது மீண்டும் அவ்வாறானதொரு நிர்வாகத்தை ஏற்படுத்துவதற்காக அல்ல என்றும் ஜனாதிபதி வலியுறுத்தி தெரிவித்துள்ளார்.
நேற்று (25) பிற்பகல் நாராஹேன்பிட்டி அபயராம விகாரையில் நடைபெற்ற வைபவத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.
பிணைமுறி தொடர்பான பாராளுமன்ற விவாதம் ஒருவரையொருவர் வெறுமனே குற்றஞ்சாட்டிக் கொள்வதாக மட்டுமே இருந்ததுடன் தமது கடமைகளையும் பொறுப்புக்களையும் உண்மையாக நிறைவேற்றுவதற்கு அனைவரும் புரிந்துணர்வுடன் செயற்பட வேண்டும் என்றும் ஜனாதிபதி அவர்கள் குறிப்பிட்டார்.
பிணைமுறி சம்பவம் தொடர்பான குற்றவாளிகள் யாராகவிருந்தாலும் ஜனாதிபதி என்ற வகையில் அவர்களுக்கு உரிய தண்டனையை பெற்றுக்கொடுப்பதற்கு தான் தயாராக இருப்பதுடன் மக்களின் நம்பிக்கையுடனேயே தான் எச்சந்தர்ப்பத்திலும் செயற்படுவதாக அவர் தெரிவித்தார்.
அத்துடன் கடந்த இரு வருடங்களில் இடம்பெற்ற பிணைமுறி சம்பவங்கள் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டு குற்றவாளிகளாக காணப்படுவோருக்கு தகுந்த தண்டனையை வழங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதைப் போன்றே கடந்த எழு அல்லது எட்டு வருட காலங்களாக நடைபெற்ற பிணைமுறி தொடர்பான சம்பவங்கள் குறித்தும் இவ்வாறான ஜனாதிபதி ஆணைக்குழுக்கள் அமைத்து விசாரணைகள் மேற்கொள்ளப்படுமென ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.
நாராஹேன்பிட்டிய அபயராம விகாரையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள 54 அடி உயரமான புத்தபெருமானின் உருவச்சிலை பிரதிஷ்டை செய்யப்படும் புண்ணிய நிகழ்வு ஜனாதிபதி அவர்களின் தலைமையில் இன்று நடைபெற்றது. -(3)