குழப்பம் விளைவிக்கும் சுமன ரட்ன தேரருக்கு நீதிமன்றத்தினால் அழைப்பாணை
அமைதிக்குப் பங்கம் விளைவிக்கும் விதமாக செயற்பட்டதாக தெரிவிக்கப்படும் மட்டக்களப்பு மங்களராம விஹாராதிபதி அம்பிட்டியே சுமனரட்ன தேரருக்கு நீதிமன்றம் அழைப்பாணை விடுத்துள்ளது.
கடந்த சனிக்கிழமை மட்டக்களப்பில் இடம்பெற்ற அசாரதாரண சூழ்நிலையில் மட்டக்களப்பு மங்களராம விஹாராதிபதி தனது ஆதரவாளர்களை திரட்டிக் கொண்டு வந்து பொலிஸ் தடைகளுக்கு மேல் ஏறி அமர்ந்து கொண்டு கூச்சலிட்டதுடன் ஆரவாரமும் செய்திருந்தார்.
இதனால் மட்டக்களப்பு நகரில் அன்றைய தினம் பெரும் பதற்றம் ஏற்பட்டிருந்தது. கடைகள் மூடப்பட்டிருந்தன, போக்குவரத்தும் பாதிக்கப்பட்டிருந்தது. பொதுபலசேனா அமைப்பினர் புணானைப் பகுதியில் நெடுஞ்சாலையிலும் புகையிரதப் பாதையிலும் அமர்ந்து கொண்டு வீதி மற்றும் புகையிரதப் போக்குவரத்தையும் தடை செய்திருந்தனர்.
குறித்த விடயம் தொடர்பில் மட்டக்களப்பு மங்களராம விஹாராதிபதிக்கெதிராக, அமைதிக்குப் பங்கம் விளைவிக்கும் விதமாக ஆட்களைத் திரட்டி குழப்பம் விளைவித்தார் என்ற குற்றச்சாட்டை முன் வைத்து மட்டக்களப்பு பொலிஸார், மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு வந்திருந்தனர்.
அதனைப் பரிசீலித்த நீதவானும் மேலதிக மாவட்ட நீதிபதியுமான மாணிக்கவாசகர் கணேசராஜா இன்று (06), மங்களராம விஹாராதிபதி அம்பிட்டிய சுமணரத்ன தேரரை எதிர்வரும் டிசம்பர் 14 ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு உத்தரவிட்டார்.
குறித்த அழைப்பாணை, மணரத்ன தேரரிடம் கையளிக்க்கப்பட்டு விட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். (3)




