செய்திகள்

கூட்டமைப்பு பற்றிய முழு விபரங்களையும் மக்களுக்கு தெளிவுபடுத்தாவிட்டால் துரோகங்களுக்கு ஆளாவீர்கள்

தற்போது தமிழ் தேசிய கூட்டமைப்பு என்றவொரு வார்த்தை மிக மோசமான முறையில் துஷ்பிரயோகம் செய்யப்படுகிறது என்றும் ஏனைய பங்காளி கட்சிகளை ஒதுக்கி வைத்துவிட்டு தனியொரு அரசியல் கட்சியை மட்டும் வளர்க்க இது உதவுகிறது என்றும் தமிழர் விடுதலை கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ. ஆனந்தசங்கரி தமிழ் ஊடகங்களுக்கு கடிதம் ஒன்றின் மூலம் எடுத்துக்கூறி இருப்பதுடன் தமிழ் தேசிய கூட்டமைப்பு பற்றிய முழு விபரத்தையும் உடனடியாக தமிழ் மக்களுக்கும் நாட்டு மக்களுக்கும் ஊடகங்கள் தெளிவுபடுத்த வேண்டும் என்று ம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அத்ததுடன் ஊடகங்கள் தன் மீது ஈவிரக்கம் அற்ற முறையில் கண்டனம் மற்றும் உண்மைக்கு புறம்பான அறிக்கைகளையும் வெளியிட்டு தனது அரசியல் வாழ்வில் பெரும் இழப்பை ஏற்படுத்தியதோடு சிலரை உயர்த்தியும் வைத்துள்ளன என்றும் குறிப்பிட்டுள்ளதுடன் தான் தனது நேர்மைக்காக தண்டிக்கப்பட்டுவிட்டதாகவும் இந்த கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

அவர் எழுதியுள்ள கடிதத்தின் முழு விபரமும் வருமாறு,

பல்வேறு அச்சு இலத்திரனியல் ஊடக உரிமையாளர்கள், அவற்றின் அரசியல் ஆய்வாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள், நிருபர்கள் அனைவருக்கும்

அன்புடையீர்!

உங்களில் அநேகமானோருக்கு என்னைப்பற்றி அறிமுகப்படுத்த வேண்டிய அவசியமில்லையென நம்புகிறேன். உங்களில் சிலர் என்னைப்பற்றி அறியாமல் இருந்திருக்கலாம். காரணம் எதுவும் தெரியாமலேயே என்னைப்பற்றி தவறான கருத்தைக்கூட கொண்டிருக்கலாம். இக்காலத்தில் மாறுபட்ட கருத்துக்களுக்கு சம்பந்தப்பட்டவர்களுடைய அரசியல் கொள்கைகள் காரணமாக இருக்கலாம்.

நான் 55 ஆண்டுகளுக்கு மேலாக அரசியலில் ஈடுபட்டுள்ளதால் பல்வேறு அரசியல் கட்சிகளை சார்ந்த அநேகமான அரசியல்வாதிகளுடன் நன்றாக பழகியிருக்கிறேன். எனது ஆரம்பகால அரசியல் இலங்கை சமசமாஜ கட்சியிலேயே. அதன் பின்னர் கௌரவ ஜீ.ஜீ.பொன்னம்பலம் அவர்களின் தலைமையில் இயங்கிய அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் கிளிநொச்சி தொகுதி பாராளுமன்ற உறுப்பினராக தெரிவாகி, அக்கட்சியும் கௌரவ எஸ்.ஜே.வி. செல்வநாயகம் அவர்களுடைய சமஷ்டி கட்சியும் இணைந்து தமிழர் ஐக்கிய விடுதலை கூட்டணியை 1972 மே 14 அன்று கௌரவ செல்வநாயகம் அவர்களின் தலைமையில் உருவாக்கினோம்.

ஊடகங்கள் ஒரு நாட்டின் அரசியல் சாசனத்தையும் அந் நாட்டு மக்களின் ஜனநாயக உரிமைகளையும் பாதுகாக்கும் புனிதமான பணியை செய்ய கடமைப்பட்டுள்ளன. ஆகவே ஊடகங்களுடன் தொடர்புகளை கொண்ட ஒவ்வொரு ஊடகவியலாளரும் நேர்மையாகவும், அவதானமாகவும் அரசியல்வாதிகள் உட்பட பல்வேறு பிரமுகர்கள் பற்றிய அறிக்கைகள் தயாரிக்க வேண்டும். என் மீதான நியாயமற்ற, உண்மைக்கு புறம்பான செய்திகளால் எனது அரசியல் நடவடிக்கைகள் மிகவும் கடுமையான பாதிப்புக்குள்ளாயின. நாட்டுக்கும் எம் மக்களுக்கும் நான் செய்த சேவையால் தற்போதுள்ள அந்தஸ்த்திலும் பார்க்க உயர்ந்த ஸ்தானத்தில் இருந்திருக்க வேண்டும்.

தனிப்பட்ட ரீதியில் யாரையும் அடையாளம் காணுவதோ அல்லது குற்றம் சுமத்துவதோ எனது நோக்கமல்ல. நியாயமற்ற முறையில் அரசியல் ஏணியிலிருந்து வீழ்த்தப்பட்டதே எனது ஆதங்கமாகும். ஈவிரக்கமற்ற கண்டனமும் உண்மைக்கு புறம்பான அறிக்கைகளும் எனது அரசியல் வாழ்வில் எனக்கு பெரும் இழப்பை ஏற்படுத்தியதோடு சிலரை உயர்த்தியும் வைத்துள்ளது. எனது நேர்மைக்காக நான் தண்டிக்கப்பட்டது வருத்தத்துக்குரிய விடயமாகும். ஊடகத்துறையில் சம்பந்தப்பட்ட ஒவ்வொருவரும் தராசை சமனாக பிடிக்க வேண்டும் என்பதே என் பணிவான வேண்டுகோள்.

நான் ஏற்கனவே குறிப்பிட்டதுபோல ஊடகங்களில் கடமையாற்றும் பொறுப்புள்ள ஒவ்வொருவரும் ஜனநாயக சமுதாயத்தில் தாம் வகிக்கும் பங்கு புனிதமானதென கருத வேண்டும். ஏதாவது கவனயீனமாக இருந்தால் அந்த அமைப்பின் எதிர்காலம் பெரும் இழப்பையே சந்திக்கும்.

எமது நாடு பல வகையிலும் குறிப்பாக அரசியல் துறையில் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. நாடு எதிர்காலத்தில் பெரும் அனர்த்தத்துக்கு முகம்கொடுக்கும்போது இந்த நாட்டை காப்பாற்ற எவரும் இருக்கமாட்டார்கள். மிக விரைவில் நான் குறிப்பிடும் சில விடயங்கள் தமிழ் சமூகத்தில் முக்கியமானதாக எடுத்துக்கொள்ளப்படாதவையாகும். உண்மை வெளிச்சத்துக்கு வரும் போது எம்மை யாராலும் காப்பாற்ற முடியாது. ஊடகவியலாளர்கள் இந்த விடயத்தில் மிக அக்கறையோடு செயல்பட்டு, கருத்தோடு ஒத்துப்போகாத சந்தர்ப்பத்தில் கண்டனத்தை தெரிவிப்பதற்கோ அல்லது உண்மையை விளங்க வைப்பதற்கோ உரிமையை எடுத்துக்கொள்ளலாம். முக்கியமான விடயங்களை வெளிச்சத்துக்கு கொண்டுவரும் போது அதற்கு உரிய முக்கியத்துவம் வழங்கப்படல் வேண்டும். அதை பிரசுரிக்காமல் சம்பந்தப்பட்டவர்க்கு அவமானத்தை ஏற்படுத்தக்கூடாது.

தற்போது தமிழ் தேசிய கூட்டமைப்பு என்றவொரு வார்த்தை மிக மோசமான முறையில் துஷ்பிரயோகம் செய்யப்படுகிறது. ஏனைய பங்காளி கட்சிகளை ஒதுக்கி வைத்துவிட்டு தனியொரு அரசியல் கட்சியை மட்டும் வளர்க்க உதவுகிறது. இது உடனடியாக நிறுத்தப்படாவிட்டால் நாடு பல விளைவுகளை அனுபவிக்க வேண்டியேற்படும். தமிழ் தேசிய கூட்டமைப்பின் உண்மை வரலாறு இதுவரை சர்வதேச சமூகத்திற்கு தெளிவுபடுத்தப்படவில்லை. உண்மைநிலை தெரியும்போது சர்வதேசமே கைவிடும் நிலைமை ஏற்படலாம். எனவே தமிழ் தேசிய கூட்டமைப்பு பற்றிய முழு விபரமும் உடனடியாக தமிழ் மக்களுக்கும் நாட்டு மக்களுக்கும் தெளிவுபடுத்த தவறுவோமானால் பல துரோகங்களுக்கு ஆளாகவேண்டிய நிலைமை ஊடகங்களுக்கு ஏற்படுவது தவிர்க்க முடியாது. எனவே இதுபோன்ற பல விடயங்கள் ஊடகங்களின் கவனத்துக்கு கொண்டுவரும் பட்சத்தில் அவற்றுக்கு நியாயம் கிடக்குமென நம்புகிறேன்.