தீர்வு கிடைக்காவிட்டால் கெமரூன் போல கூட்டமைப்பினர் பதவி துறப்பார்களா? சம்பந்தனிடம் கேள்வி
பிரித்தானிய பிரதமர் டேவிக் கெமரூனை முன்னுதாரணமாக கொண்டு 2016இல் தமிழ் மக்களின் தேசிய பிரச்சினைக்கு தீர்வு கிடைக்காது விட்டால் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு மக்கள் பிரதிநிதிகள் பாராளுமன்ற பதவியிலிருந்து இராஜினாமச்செய்யவேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
“தடம்மாறுகிறாதா தமிழ்த்தேசியம்?” எனும் தொனிப்பொருளில் கருத்தாய்வு நிலை கருத்துப்பகிர்வுறவாடல் நிகழ்வு நேற்று ஞாயிற்றுக்கிழமை மன்னார் ஞானோதயம் மண்டபத்தில் நடைபெற்றது. இதன்போது மக்களின் சார்பில் கலந்துகொண்ட அலன் சக்திதாஸ் கருத்து வெளியிடுகையிலேயே மேற்கண்டவாறு கோரினார்.
அவருடைய கருத்தில் குறிப்பிட்டதாவது, 2016ஆம் ஆண்டு தமிழ் மக்களின் தேசிய பிரச்சினைக்கு தீர்வைப் பெற்றுக்கொடுப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. தற்போதைய நிலைமைகளை பார்க்கையில் அது சாத்தியமாதான என்றொரு கேள்வி காணப்படுகின்றது. அண்மையில் பதவி விலகிய பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூன், ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானிய வெளியேறவேண்டும் என்ற வாக்கெடுப்பில் தீர்மானிக்கபட்டால் தான் பதவி விலகுவதாக வாக்குறுதி அளித்திருந்தார்.
அவரை முன்மாதிரியாகக் கொண்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களும் 2016 இறுதிக்குள் தீர்வு கிடைக்காது விட்டால் பதவி விலகுவதற்கு தயாரா எனக் கேள்வியெழுப்பினார். அதேநேரம் தமிழ் மக்களின் பண்பாடுகள், கலாசாரங்கள் உள்ளிட்ட விடயங்கள் பாதுகாக்கப்படவேண்டும் எனவும் அதற்கு தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு ஆதரவாக இருக்கவேண்டுமெனவும் தமிழ் மக்கள் பேரவையின் மீது பல்வேறு விமர்சனகணைகள் தொடுக்கப்பட்டதாகவும் குறிப்பிட்டார்.
அதனைத்தொடர்ந்து குறித்த விடயத்திற்கு பதிலளிக்கும் வகையில் கருத்துரையாற்றிய இலங்கை தமிழரசுக்கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை.சேனாதிராஜா, பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூனை உதாரணமாகக் கொண்டு எம்மை பதவி விலகுவதற்கு தயாரா என கேள்வியெழுப்ப பட்டபோது பலரும் கரவோசமெழுப்பினார்கள். முக மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள். எமது கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டபோது அண்ணன் அமிர்தலிங்கம் தலைமையில் அன்று பாராளுமன்ற பதவிகளை துச்சமென மதித்து வெளியேறிய வரலாறுகளும் உள்ளன என்பதை மறந்துவிடக்கூடாது. எனினும் தற்போயை சந்தர்ப்பத்தை புரிந்து கொண்டு ஒற்றுமையுடன் செயற்படவேண்டும் என்றார்.
R-06




