கெஹெலிய மற்றும் அவரின் குடும்பம் மீது குற்றப் பத்திரிகை தாக்கல்
முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, அவரது மனைவி, 03 மகள்கள் மற்றும் மருமகன் ஆகியோருக்கு எதிராக நிதி தூய்தாக்கல் தடுப்புச் சட்டத்தின் கீழ் மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக இலஞ்ச விசாரணை ஆணைக்குழு கொழும்பு பிரதம நீதவான் அசங்க எஸ்.போதரகமவிற்கு இன்று(09) அறிவித்துள்ளது.
இதற்கமைய இந்த சம்பவம் தொடர்பில் நீதிமன்றத்தில் விசாரணைக்குட்படுத்தப்பட்ட வழக்கின் செயற்பாடுகள் நிறைவு செய்யப்பட்டன.
முன்னாள் அமைச்சர் கெஹெலிய பண்டார திசாநாயக்க ரம்புக்வெல்ல, அவரின் மனைவி குசும் பிரியதர்ஷனி ஏபா வேய்ஹேன, அவரின் மகள்களான சமித்ரி ஜயனிகா ரம்புக்வெல்ல, சந்துலா ரமாலி ரம்புக்வெல்ல, அமாலி நயனிகா ரம்புக்வெல்ல மற்றும் அவரது மருமகனான இசுரு புலஸ்தி பண்டார பொல்கஸ்தெனிய ஆகியோருக்கு எதிராக இந்த குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக இலஞ்ச விசாரணை ஆணைக்குழு மன்றுக்கு அறிவித்தது.
வெகுசன ஊடகம், சுகாதார மற்றும் சுற்றாடல் அமைச்சராக கடமையாற்றிய போது 2021/2023 காலப்பகுதியில் பிரத்தியேக பணிக்குழாம் ஊழியர்களாக தமக்கு நெருங்கிய சிலரை நியமித்து அவர்களுக்கு அமைச்சினால் வழங்கப்பட்ட சம்பளம் மற்றும் மேலதிக நேரக் கொடுப்பனவுகளை தமது தனிப்பட்ட செலவுகள், அரசியல் நடவடிக்கைகளுக்காகப் பயன்படுத்தி அரசாங்கத்திற்கு 80 இலட்சம் ரூபாவிற்கும் அதிக இழப்பை ஏற்படுத்தியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் சந்தேகநபர்களுக்கு எதிராக மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.




